"சனியனே என் உசுர வாங்குவதற்கே பொறந்திருக்கு" என்றாள் அவள்.
அந்த சனியனை பெற்றெடுக்கத்தான் தவமாய் தவமிருந்தாள் என்பதை மறந்தா போயிருப்பாள்?
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்றான் பாரதி.
ஜாதி எனும் மனநோய் சாக்கடையாய் பரவிக் கிடக்கிறது என்பதை மறந்தா போயிருந்தான்?
"மக்கள் நலனே என் நலம்.
மக்கள் மேன்மைக்காக அயராது உழைப்பேன்" என்றார் கரை வேட்டிக்காரர்.
எல்லாத் தேர்தல் மேடைகளிலும் இதை சொல்லிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம் என்பதை மறந்தா போயிருப்பார்?
"இந்த ஆன்லைன் கிளாஸ் மட்டும் இல்லனா பசங்க லைப் என்ன ஆகிறது " என்றார் 16 வது மாடியில் வசிப்பவர்.
முந்தின நாள் தன் வீட்டு வேலைக்காரி தனது 14 வயது மகனுக்கும் ஒரு வேலை போட்டு தருமாறு கேட்டதை மறந்தா போயிருப்பார்?
"ஆன்லைன் கிளாஸ் இல்லைனா எப்படி, நாங்க எல்லாம் சும்மாவா சம்பளம் வாங்குவது" என்றார் ஆசிரியர்.
வகுப்பில் கேள்வி கேட்கப்படும் என்றதும் 50 பேர் கொண்ட வகுப்பில் 30 பேர் வராமல் போனதை மறந்தா போயிருப்பார்?
-அகல்