இதுவும் அரசியல்


நான் சுரண்டப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது இல்லை. 
அவர்கள் என்னைச் சுரண்டுகிறார்கள். எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் சுரண்டுகிறார்கள்.


சுரண்டலின் நியாயமாக அவர்கள் எண்ணிக் கொள்வது எதை?

உலகம் அறிவது என்னால் முடியாதாம், எனக்கான முடிவுகளை அவர்களே எடுத்துவிடுகிறார்கள், அந்த முடிவுகள் மட்டுமே சரியாம். அதற்கான கூலிதான் இந்த சுரண்டலோ?

என்னை என்னால் காத்துக் கொள்ள முடியாதாம், எனக்கான பாதுகாப்பை நிர்ணயிப்பது அவர்கள்தானாம், எனக்கான பாதுகாவலர்களாக வலம் வந்து உதவுகிறார்களாம்.
அதற்கான நன்றிதான் இந்த சுரண்டலோ?

இப்படி இந்த சுரண்டலின் நியாயமாக அவர்கள் எண்ணிக் கொள்வது எதை?

சுரண்டுகிறோம் என்ற குற்ற உணர்வு ஒரு போதும் அவர்களுக்கு வரப்போவதில்லை என்று எண்ணினேன். 

அந்த குற்ற உணர்வு வந்தால் மட்டும் அவர்கள் என்ன செய்து விடுவார்கள்?

அவர்களால் சுரண்டப்படுவதில் ஒரு நிம்மதி இருப்பதாக என்னை ஏமாற்றிக் கொண்டு நகர்கிறேன்.


அவன் தன் முதல் மாத வருவாயில் எனக்குப் பரிசளித்தான். 
அவர்கள் பாசமிகு மகன் என்றார்கள்.
எந்த பதிலும் சொல்லாமல் புன்னகைத்தேன்.
சொல்லப்போனால் மெய் சிலிர்த்தேன், கண்ணீர் வடித்தேன்.

அவன் உணர்ந்து விட்டான்!
தான் சுரண்டுகிறோம் என்பதை உணர்ந்து விட்டான்...

தான் சுரண்டுகிறோம் என்ற குற்ற உணர்வை போக்கிக்கொள்ள முடியாததின் இயலாமையை மறைக்கவே இந்த பரிசு என்பது எனக்கு  புரிந்ததாலேயே மெய்சிலிர்த்தேன்
கண்ணீர் வடித்தேன்.

                          -அகல்

Comments

Post a Comment

Popular Posts