உளியின் விரல்கள்

நானே மறந்து விட்டேன்
எனக்கும் விரல்கள் உண்டு என்று
என்னை விரலாய் நினைத்த நீ
என் விரல் மட்டும் அறிவாயா என்ன ?

நீ சொல்வதை நான் செய்தேன்
நீ சொல்வதை மட்டுமே நான் செய்தேன்
என் விரல்களை கட்டிப் போட்டு
பொம்மலாட்டம் தான் காட்டினாய்!

மனமில்லா மணப்பெண் போல்
நான்!
உன் விரல் கோர்க்க
மனமில்லை எனக்கு,
அக்னியை சுற்றுவது போல்
கல்லை சுற்றி வருகிறேன்
என்ன...
அது சாமியின் முன்
இது 'சாமிக்கு முன்'!

சாமி சிலை செய் என்றாய்
விதவிதமாய் செய்தேன்
உன் திறமையைக் காட்ட!
அதை வைத்தே அடித்துக் கொண்டார்கள்
அடித்தும் கொன்றார்கள்!

இனியாவது திருந்துவாயா என்றால்,
கொன்றவனை செதுக்க சொன்னாய்
கொல்லப்பட்டவனையும் வடிக்கச் சொன்னாய்!

அதையும் செய்தேன்
விரலில்லாமலும்
மனமில்லாமலும்!

வலி தாங்கும் கற்கள்
சிலையாகும் என்றார்கள்
வலி தாங்கும் உளிக்கு
என்ன பயன்...?

என்னையும் வருத்தி
கல்லையும் வருத்தி
வெறும் காகங்கள்
அபிஷேகம் செய்வதற்கு
கல்லாக இருந்தவனைக் கொன்று
சிலையாக்க வேண்டுமா?

என்னை விட்டு விடுங்கள்
இனியாவது
கல்லை கல்லாய் வாழவிடுங்கள்!

                             -இருதயா

Comments

Popular Posts