எழுதப் பழகுகிறேன்


நீண்ட பயணங்கள் தான்
பேசப்படுகின்றன!

நீண்ட பயணங்களில் சந்தித்தவர்களுடன் தான்
போட்டோக்கள் எடுக்கப்படுகின்றன!

நீண்ட பயணங்களுக்கு தான்
வருடா வருடம்
'அனிவர்சரி' யும்  கொண்டாடப்படுகின்றன!

நான் மனதில் மறைந்துவிட்ட
சிறிய பயணங்களை
எழுதப் பழகுகிறேன்!

விலாசம் கேட்க வந்தவரை
"நானு  அந்த வழி தான்"
என்று வீடு வரை கொண்டு விடும்
அந்த டீக்கடை 'கஸ்டமரும்'...

தன் நிறுத்தம் வந்ததும்
முன்சீட்டுக்காரரிடம்
"இந்தாம்மா, இந்த பொண்ணுக்கு
கோடம்பாக்கம் வந்தா சொல்லிடுங்க"
என்று கூறிவிட்டு இறங்கும் ஆண்டிகளும்...

ஓடும் ரயிலில் ஏறப்போய்
கை நழுவி கீழே விழுந்தவளை
"நீங்கலாம் படிச்ச பிள்ளைங்க தானே"
என்று திட்டிக்கொண்டே
தண்ணீர் கொடுக்கும்
அந்த பெரியவர்களும்...

பேருந்துக்கு காத்திருக்கையில்
கைப்பையை பிரித்து
"எம்பொண்ணுக்கு ஒரு பொடவ வாங்கிற்கேன்,
நல்லாருகுல?"
என்று 'ஆம்' - ஐ மட்டுமே எதிர்பாத்து
கேட்கும் அந்த அம்மாக்களும்
என்று
அந்த சிறு பயணங்களின்
மிச்சத்தை தான், நான்
எழுத பழகுகிறேன்...

                                 -இருதயா

Comments

  1. அருமைடா கண்ணா. இருதுயத்துக்கு சிறிசு பெருசுலாம் தெரியாதுல, உணர்வுகள உணரமட்டுமே தெரியும். ரொம்ப புடிச்சிர்க்கு எனக்கு.💛

    ReplyDelete

Post a Comment

Popular Posts