முறிவின் கதை

நாளை முதல் ஊரடங்கு என்றார்கள்
இன்றிரவே ஒரு கடைசி சுதந்திரகாற்றை சுவசித்துவிட்டு வந்துவிட்டேன்!

நாளை முதல் கடைகள் மூடப்படும் என்றார்கள்
இன்றிரவே போய் ஒரு கடையில் பாதியை 
வாங்கி வந்துவிட்டேன்!

புயலினால் நாளை மின்தடைபடும் என்றார்கள்
இன்றிரவே செல்போனை மின்னூட்டி
மெழுகுவர்த்திகள் தேடியெடுத்து வைத்துக்கொண்டேன் !

நம் அரசர் நம்மைக் காக்க
நாளை முதல் முகநூலும் ட்விட்டரும்
முடக்குகிறார் என்றார்கள்
உலகெங்கும் உண்மைகள் பரவுவதால்
நம் இறையாண்மைக்கு ஆபத்து என்றார்கள்
இணையத்தைக் கூட முடக்கிவிடலாம் என்றார்கள்!


நான் அவசரமாக
எனக்குப் பிடித்த பாடல் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்
ஒரு இறுதி மீம் மை கண்டு சிரித்து கொள்கிறேன்
ஒரு இறுதி ட்வீட்டை எழுதி அதை பகிர்ந்துகொள்கிறேன்
கிடப்பில் கிடந்த எழுநூறு நட்பழைப்புகளையும்
பெயர் கூட வாசிக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்
இறுதியாக
நீ பதிவிட்ட கவிதை ஒன்றை 
எழுதி எடுத்துக்கொள்கிறேன்
நீ எனக்களித்த புகைப்படம் ஒன்றையும் சேமித்து வைத்துக்கொள்கிறேன்!

நாளை முதல் நீ இதை இழக்கப்போகிறாய்
என்று இன்றே சொல்லிவிடுவது
பிரிவை எவ்வளவு சுலபமாக்குகிறது
உன்னை இழக்கும் முன்பும்
ஒரு அறிவிப்பு விட்டிருக்கலாம்
முடிந்தால் ஒரு முந்நூறு பிரதியேனும் எடுத்து விட்டுக் கொடுத்திருப்பேன்...

                                  -இருதயா

Comments

Post a Comment

Popular Posts