Thursday, 10 July 2025

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் 

கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க

நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்
தரிசனம் கெடுபட்டு விடாமலும் 
தோளில் மீனுக்குட்டியுடன் ஒரு ஓரமாய் நின்றேன்

ஏஏஏஏ.  ரெயின்போ பார்!
 ரெயின்போ பார்!

தன்னிலை மறந்து வான்நோக்கி பார்க்கச் செய்தாள்  மீனுக்குட்டி

                              ~அகல்

Tuesday, 17 June 2025

தேடல்

தேடல்கள் தீர்ந்தபாடில்லை...
நெருப்பின் தேடல் அடுத்த விறகை நோக்கி..
ஆகாயத்தின் தேடல் அடுத்த மேகத்தை நோக்கி..
நிலத்தின் தேடல் அடுத்த மனிதனை நோக்கி..
தேடல்கள் தீர்ந்தபாடில்லை..

                          ~எழில்

Wednesday, 19 March 2025

காதலின் முகங்கள்

உரையாடல்...
நீளும்.. சலிக்காது..

தீண்டல்...
தித்திக்கும்.. திகட்டாது..

ஊடல்..
உரைக்கும்..உடைக்காது...

காதல்..
தேடும்.. தொடரும்...

                    -எழில்

Wednesday, 5 February 2025

அன்பின் மலர்

எப்போதும் பார்த்து சிரிக்கும்
லிப்ட் ஆப்பரேட்டர் தான்
இன்று ஏனோ என்னால் முடியவில்லை... 
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன்! 

மேனேஜரிடம்
வாங்கிய வசையை
யார் மீதும் செலுத்தும்
வேகம் இருந்தது...
என் இரையாக
அந்த ஆப்பரேட்டர் அண்ணாவும்
மாறக்கூடும்...

இது எதுவுமே தெரியாத
அந்த அண்ணா
எப்போதும் போல கேட்கிறார்
"சாப்டீங்களா தம்பி" என்று! 

எந்த காரணமும் இன்றி
அழ வைக்கவும்
எந்த காரணமும் இன்றி
அணைத்துக் கொள்ளவும்
பூக்கள் நீட்டவும்
யாரோ ஒருவர்
இருந்து கொண்டே இருக்கிறார்கள்... 

                             ~மகி

Thursday, 23 January 2025

மின்மினி

முகமோ 
முகவரியோ தெரியாதவர்கள் தான்
வழிநெடுக வராவிட்டாலும்
அவ்வப்போது வந்து
வாழ்க்கைக்கு தேவையான
ஒளிக்கீற்றை தந்து போகிறார்கள்
அந்த மின்மினி போல... 

                             ~ மகி

Monday, 30 December 2024

யாரோ ஒருவர்

தனக்கு யாருமே இல்லை
என்று புலம்புகிறவர்கள் எல்லாம்
யாரோ ஒருவரை
தனக்கு எல்லாமாகவும்
யாரோ ஒருவருக்கு
தான் எல்லாமாகவும்
நினைத்தார்கள் தான்... 
உண்மையில் 
யாரோ ஒருவர்
யாரோ ஒருவருக்கு
இருந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்... 

                            ~மகி

Tuesday, 10 December 2024

துணைவன்

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? 
என்ற கேள்விக்கு
இன்னும் பதில் வரவில்லை! 

பிடித்திருந்த என் கையை
இன்னும் கெட்டியாக
பிடித்துக் கொள்கிறார் சிரித்தபடி... 

இதற்கு மேலும் பதில் வேண்டுமா??? 

                                   ~மகி

Sunday, 10 November 2024

வெறுமை

ஓடாத ஓடை
தேங்காத குளம்
சலசலக்காத நதி
அலையில்லாத கடல் போல
ஒரு வாழ்க்கை
அவள் இல்லாத வாழ்க்கை

                      ~மகி

Saturday, 5 October 2024

அன்பின் மழை

சுட்டெரிக்கும் வெயிலில்
பிளாட்பார நிழலில் அமர்ந்து
தன் இருபது மகனுக்கு
தலை சீவி விடும் அவளுக்கும்


தன் எழுவது மனைவியை
மெல்ல கை பிடித்து செல்லும்
அந்த பார்வையற்றவருக்கும்
தெரிவதே  இல்லை வெயில்! 

உண்மையில்
அன்பின் மழைக்கு
வெயில் தெரியாது!

                                 ~ மகி

Tuesday, 30 July 2024

அன்பின் எச்சம்

அவர்கள் சந்தோஷமாகவோ
துக்கமாகவோ
 தனிமையாகவோ இருக்கும் போது
அவர்களிடம் நமத்துபோயிருந்த
அன்பின் எச்சத்தை தருகிறார்கள்
நாய்க்கு போடும் ரொட்டியை போல! 
சில சமயம் தடவி விடுகிறார்கள்! 
கொஞ்சவும் செய்கிறார்கள்! 
எல்லாம் அந்த நொடி மட்டுமே! 
இது எதுவுமே தெரியாத நாய்
அடுத்த நாள் சென்று
அன்பின் எச்சத்திற்காக காத்திருந்து
திரும்பி வருகிறது! 
மீண்டும்! மீண்டும்!

                               ~மகி

Saturday, 15 June 2024

எதிர்பார்ப்பு


என் அதிகபட்ச எதிர்பார்ப்பு
உன்னுடைய இருத்தல் தான்! 
எல்லா நேரங்களிலும் இல்லை என்றாலும்
மனம் கசிந்து அழும்போது மட்டுமாவது! 
என்னை ஆற்றுப்படுத்தவோ
ஆறத்தழுவவோ வேண்டாம்! 
நான் அழுகிறேன்
நீ இரு போதும்! 

                             ~மகி



தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...