Sunday, 29 July 2018

கிழவா
நீ பேசி பல நாட்கள் ஆகிவிட்டது
ஆனால் சில நாட்களாக
உன்னைப் பற்றியே பேசுகிறோம்!

உன் தளுதளுத்த குரலில்
"தமிழர்களே தமிழர்களே" என்றழைக்க
நீ வர மாட்டாயா?

உன்னை வசைபாடிய வாய்தான்
இன்று
உன் வாஞ்சையான
வாய்மொழியை கேட்க துடிக்கிறது!

நீயோ கருப்பு சட்டைக்காரன்!
உன்னை காக்க பராசக்தி
வரமாட்டாள்!
இருந்தும் பராசக்தியை
மறவாமல் எழுதினாய்!

இரண்டு இலைகளும்
விழுந்து விட்டதே
இனி எதற்கு சூரியன்
என்று நினைத்து மறைந்துவிடாதே!

அம்மாவும் இல்லை
அய்யன் நீயும்
இனி இல்லையென்றால்
நாங்கள் என் செய்வோம்?

திராவிடம் ஆண்ட மண்ணில்
காவிகளின் கரை படிய
நீ வழி வகுக்காமல்
கண்கள் விழித்து வா!

தமிழ்நாட்டை காக்க
வரா விட்டாலும்
உன் தமிழைக் காக்க
பிழைத்து வா!
                             - மகி

Tuesday, 17 July 2018

அன்புள்ள மகளுக்கு...

என் கருவில் கலந்தவளே
உன்னை சுமப்பவளின்
பிதற்றல் இது!
செல்ல மகளே
உன் சின்ன உதைகளை
கொஞ்சம் சேமித்துக்கொள்!
இந்த உலகில்
நிறைய தேவைப்படும்!
இது சுதந்திர நாடு
ஆனால் உனக்கு இல்லை!
நான் உனக்கு
ஒரு பெயர் தான் வைப்பேன்
ஊரார் உன்னை
பல பெயர்களில் அழைப்பர்!
கோபத்தை‌ மென்று தின்றுவிடாதே
காரி உமிழ்ந்து விடு!
பெரியாரின் சிலைக்கு நேர்ந்தது
நாளை உன் சீலைக்கும் நேரலாம்
மறந்து விடாதே!
கோயில் கருவறையிலும்
நீ கருவறுக்கப்படலாம்
உன்னை காக்க வேண்டிய சட்டம்
அந்த கடவுளைப் போல்
கல்லாய் நிற்கும்!
இத்தனை கேட்டும்
என் கருவிலிருந்து
வெளி வர துடிக்கிறாயே
பாரதி கண்ட
புதுமைப்பெண் நீ தானோ?

                              -மகி

Wednesday, 11 July 2018

வேடிக்கை பார்ப்பவன்

மழையே நீ மறைந்து விடு!
கட்டியணைக்க வேண்டிய உன்னை
கம்பிகளின் வழியே
வேடிக்கை பார்ப்பவன் நான்!
உன் சின்ன முத்துக்களுக்கு
முகங்கொடுக்க நேரமில்லை
முடிந்தால் ஸ்டேட்டஸ் போடுகிறேன்!
நீ தர வேண்டிய
மண் வாசனை மட்டும்
பாக்கி இருக்கிறது!
அது சரி!
மலட்டு நிலத்திற்கேது மண்வாசனை?
இத்தனை பேசும் என்னை
யாரென்று மட்டும் கேட்காதே!
நான்
நகரவாசியாவும் இருக்கலாம்
நரகவாசியாவும் இருக்கலாம்!

                                         -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...