பக்கத்து வீட்டு தேவதை

காலை 8.00 மணி இருக்கும். ஊரே உற்சாகமாக இருக்கும் போது இவன் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான்.

"கிர்ர்ர்ர்ர்ர்ர்......" என்ற காலிங் பெல் சத்தம் அவன் தூக்கத்திற்கு குட் பை சொல்லி எழுப்பிவிட்டது.

கதவை திறந்தால் வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

ஒரு நிமிட மௌனம். உண்மையில், இதற்கு முன் இருவரும் பேசிக்கொண்டதில்லை.   பார்க்கும்போது புன்னகை மட்டும் பரிமாறிக்கொள்வார்கள். அவ்வளவு தான் இவர்களுக்குள் இருக்கும் உறவு.

மௌனத்தை நீக்கி இவன் முதலில் பேச ஆரம்பித்தான். "சொல்லுங்க சார்" என்றான்.

"சாரி தம்பி உங்க தூக்கத்த கெடுத்துடன்."

"அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. நைட் ரொம்ப நேரம் வேலை செஞ்சேன் அதான் தூங்கிட்டேன். வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்."

"பரவாயில்லப்பா. இன்னைக்கு தை 1 ல அதான் பொங்கல் கொடுத்துட்டு வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்" என்று கையில் இருந்த பாத்திரத்தை நீட்டினார்.

"ஹேப்பி பொங்கல் அண்ணா, வீட்டுல எல்லாருக்கும் சொன்னதா சொல்லீருங்க" என்று சொல்லி விட்டு அதை வாங்கிக் கொண்டான். 

"சரி பா. நான் போய்டு வர்ரேன்" என்று அவர் சென்றார்.

வீட்டுக்குள் வந்து ஃபோனை எடுத்து பார்த்தான். அம்மாவிடமிருந்து இரண்டு மிஸ்டுகால். அதை ஸ்வைப் பண்ணிவிட்டு வாட்ஸ் அபில் மூழ்கினான்.

"ஹேப்பி பொங்கல்" என்ற மெஸேஜ் நிரம்பி வழிந்தது. யார் யாரோ மெஸேஜ் அனுப்பினர். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து எல்லாருக்கும் வேண்டா வெறுப்பாக அனுப்பி விட்டு அம்மாவிற்கு கால் செய்தான்.
கொஞ்ச நேரம் அம்மாவின் பொலம்பலை கேட்டு விட்டு அப்புறம் கால் பன்றன் என்று கட் செய்தான்.

அவனுக்கும் ஊருக்கு போக வேண்டும் என்று ஆசைதான். ஆனால் ஒரு நாள் தான் லீவ் இருந்தது. சிறப்பு பஸ்களும் ரயில்களும் பல இருந்தும் அதில் செல்ல முடியாத அளவுக்கு கட்டணத்தை வைத்த மத்திய மாநில அரசுகளுக்கு அவன் சலாம் வைத்தான். தன்னைப் போல எத்தனை பேர் இப்படி சொந்த ஊருக்கு போக முடியாமல் இருப்பார்கள் என்று நினைத்து மூச்சு விட பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரம் கண்ணில் பட்டது.

அதை திறந்து பார்த்தான். பொங்கல், கரும்பு, பழம் என நிறைய இருந்தது. அந்ந பாத்திரத்தில் தேவதையின் கைரேகை படர்ந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அவனுக்கு கடவுளின் தேவதையாக தோன்றினார். பெண்கள் மட்டும் தான் தேவதையா என்ன? ஆண்களும் தேவதை தான்.
 உண்மையில், இப்படிப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இருப்பதால் தான் பேச்சுலர் பசங்களும் இப்படி சில பண்டிகைகளை கொண்டாட முடிகிறது!

"நல்ல வேலை காலை சாப்பாடு செய்ய வேணாம்" என்ற நிம்மதியோடு மீண்டும் தூக்கத்திற்கு டிக்கெட் வாங்கினான்.

(இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!)

                                            -மகி

Comments

Popular Posts