வறட்சி

பலரும் கேட்கிறார்கள்.
பிடித்த கவிதையைப் பற்றி பேசும்போதும்,
நண்பர்களின் கவிதைகளை பகிரும்போதும்,
"ஒரு கவிதை எழுதி குடேன்" என்பவர்கள் முன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கும்போதும்
கேட்கிறார்கள்
"நீ நிஜமாகவே எழுதுவியா?" 
என்று
________
பேனா தொட்டு 
பலநாள் ஒன்றும் ஆகவில்லை.
எழுதுகிறேன்.
கஷ்டத்தையும் இஷ்டத்தையும்,
புலம்பலையும் பூரித்தலையும்,
தேநீரையும் தேர்வுகளையும்,
நித்தமும் எழுதுகிறேன்.
அல்லது எழுதத் துவங்குகிறேன். 
முடிக்கத்தான் முடியவில்லை.
பாதி பக்கத்திற்கு மேல்,
பேனாவை நகர்த்த முடிவதில்லை
என்னையே நகர்த்த வேண்டி உள்ளது.
வாழ்க்கையை போல்
இப்போது
வார்த்தைகளும் வேடிக்கை காட்டுகின்றன.
_____________
என்னை கேட்டதுபோல் 
ஒரு தோழியையும் கேட்டிருந்தார்கள்.
" யாழினி ஏன் இப்போதெல்லாம்  கவிதை எழுதுவதில்லை?"
"யாழினி காதலிக்கிறாள்" என்றாள்.
நானும் சொல்கிறேன், காதலிக்கிறேன்,
வாழ்க்கையை வார்த்தையாக்க முயலாமல்
வெறும் வாழ்க்கையாகவே காதலிக்கிறேன் !

                                     -இருதயா

Comments

Popular Posts