Wednesday, 27 May 2020

பென்சில் மரம்

அண்ணன் மகள் அவள்
அவள் முகத்தை நான் மறக்கவில்லை
என் முகத்தை அவள் மறந்திருக்கக்கூடும்
2 வயது குழந்தைதானே
மறந்திருக்கக்கூடும்.
-
மாமன் மகன்கள் என்னும்
பொடிசுகளுடன்
வீட்டை சுற்றி சுற்றி
கண்ணாமூச்சி ஆடியது போல்
அவளுடன் ஆட முடியாது.
-
மாமன் மகளை
வம்புக்கு இழுத்து
அழ வைத்து
பின் சமாதானப்படுத்துவது போல்
அவளிடம் செய்ய முடியாது
-
அக்காள் மகள் பிறந்தவுடன்
"என் பொண்ணு இவ"
என்று யாரிடமும் கொடுக்காமல்
நானே வைத்துக்கொண்டது போல்
அவளை வைத்துக்கொள்ள முடியாது.
-
அக்காள் மகனிடம் பொய் சொல்லி
மண்ணில் பென்சில் புதைத்துக்கொடுத்து
அதில் பென்சில் மரம் வளரும் கதை சொல்லி
இன்றும் ஏமாற்றுவதை போல்
அவளிடம் செய்ய முடியாது.
-
வெளியூரில் நானும்
வெளிநாட்டில் அவளும்
இருந்து திரும்புகையில்
என்றாவது ஒருநாள் பார்த்து
'அத்தை' என கூப்பிட்டுக்கேட்பதே
பெரிதாய் இருக்கிறது.
-
"பாப்பா உனக்கு... உனக்கு... ஒண்ணு தெரியுமா..!"

அந்த அக்காள் மகன்தான் வந்திருக்கிறான்,
அவளைப் பார்க்க.

"சித்தி வந்து எனக்கு... எனக்கு... பென்சில் மரம் வச்சி குடுத்தாங்க."

நான் சொல்ல முடியாத கதைகளை அவன் சொல்லிவிடுவான் அவளுக்கு !

                              -இருதயா                                  

Tuesday, 19 May 2020

பிரிவுழல்கிறேன்

நெடுந்தூர தொடர்வண்டிப் பயணத்தில்...
என் தோளும் ஏங்கியது...
உன் தலை ஏந்த...

மகிழ்விலும் துயரிலும்..
என் கை தேடியது..
கைப்பேசியில் உன் எண்ணை...

நம் நிழற்படங்கள் கண்டு...
கரைதாண்டிப் புரள்கிறது...
என் கண்ணீர்...

பிரிவு கொடிது...
அதனின் கொடிது...
நட்பில் பிரிவு‌...

                                   -எழில்

Sunday, 10 May 2020

ஊழியின் காலம்

ஊழியின் காலம் இது!
எல்லோரும் பதுங்குகுழிகளில்
ஒழிந்து கொண்டார்கள்
சிலர் வானமே கூரையென
தங்கள் சாவை எதிர்நோக்கி
காத்திருந்தார்கள்!
சிலருக்கு அதுவும் இல்லை!
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
இரக்கம் என்ற பெயரில்
சில இலவச பொருட்களும்,
தங்கள் இறுதி சடஙகிற்காக
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் தான்!
பேருந்துகள் இல்லை!
ரயில்கள் இல்லை!
வழி காட்ட கூகுள் மேப்பும் இல்லை!
ரயில் வராத தண்டவாளங்கள்
தங்களை ஊர் சேர்க்கும்
என்றே அவர்கள் நடந்தார்கள்!
கண்ணயர்ந்த நேரத்தில் 
அவர்கள் மீது
ஏற்றிச்சென்றது
ஒரு ராட்சத இயந்திரம்!
பாவம்!
அவர்களின் அழுகையை கூட
விட்டு வைக்காமல்
விழுங்கி விட்டு செல்கிறது!
அரசு எனும்
அந்த இயந்திரம்!

                                     -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...