பென்சில் மரம்

அண்ணன் மகள் அவள்
அவள் முகத்தை நான் மறக்கவில்லை
என் முகத்தை அவள் மறந்திருக்கக்கூடும்
2 வயது குழந்தைதானே
மறந்திருக்கக்கூடும்.
-
மாமன் மகன்கள் என்னும்
பொடிசுகளுடன்
வீட்டை சுற்றி சுற்றி
கண்ணாமூச்சி ஆடியது போல்
அவளுடன் ஆட முடியாது.
-
மாமன் மகளை
வம்புக்கு இழுத்து
அழ வைத்து
பின் சமாதானப்படுத்துவது போல்
அவளிடம் செய்ய முடியாது
-
அக்காள் மகள் பிறந்தவுடன்
"என் பொண்ணு இவ"
என்று யாரிடமும் கொடுக்காமல்
நானே வைத்துக்கொண்டது போல்
அவளை வைத்துக்கொள்ள முடியாது.
-
அக்காள் மகனிடம் பொய் சொல்லி
மண்ணில் பென்சில் புதைத்துக்கொடுத்து
அதில் பென்சில் மரம் வளரும் கதை சொல்லி
இன்றும் ஏமாற்றுவதை போல்
அவளிடம் செய்ய முடியாது.
-
வெளியூரில் நானும்
வெளிநாட்டில் அவளும்
இருந்து திரும்புகையில்
என்றாவது ஒருநாள் பார்த்து
'அத்தை' என கூப்பிட்டுக்கேட்பதே
பெரிதாய் இருக்கிறது.
-
"பாப்பா உனக்கு... உனக்கு... ஒண்ணு தெரியுமா..!"

அந்த அக்காள் மகன்தான் வந்திருக்கிறான்,
அவளைப் பார்க்க.

"சித்தி வந்து எனக்கு... எனக்கு... பென்சில் மரம் வச்சி குடுத்தாங்க."

நான் சொல்ல முடியாத கதைகளை அவன் சொல்லிவிடுவான் அவளுக்கு !

                              -இருதயா                                  

Comments

Popular Posts