புதியன கழிதல்

எவரும் பழைய கோப்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றுவதில்லை! 
நானோ என் பழைய நினைவுகளிலே புதிய மாற்றங்களை அடைக்கப் பார்க்கிறேன்! 

ஒரு தொலைந்து போன கைக்கடிகாரத்தின் நிறத்திலேயே
இன்னொன்று வாங்குகிறேன்! 
பழைய தோழியின் பெயர் கொண்ட 
ஒரு பெண்ணிடம்
வலியச் சென்று பேசுகிறேன்! 

ஒரு உடைந்த போனின் உறையை எடுத்து
புதிய போனுக்கு மாட்டுகிறேன்! 
அதிலிருந்த அதே பாடல்களை 
இதிலும் ஏற்றிக்கொள்கிறேன்! 

ஆனால் அதே பாடல்கள் வேரோர் குரலில் ஒலிக்கின்றன! 
ஒரு தாலாட்டை அம்மாவிற்குப் பதில்
வேறாரோ பாடுவது போல! 

ஒவ்வொரு புதிய பொருளிலும்
இதுதான் பிரச்சனை! 
ஒரு பழையதிலிருந்த அன்யோன்யம்
புதியதில் விட்டுப்போகிறது! 

ஒரு சோர்வான நாளில் பழைய துணியுடன் நான் உறங்கிக்கொள்ளலாம்... 

ஒரு பழைய மோட்டார் சைக்கிளில்
எத்தனை முறையென்றாலும்
நான் கீழே விழுந்துகொள்ளலாம்... 

ஒரு பழைய நோட்டில், எத்தனை முறையேனும் கோவத்தில் கிறுக்கிக்கொள்ளலாம்... 
அழுது கொஞ்சம் நனைத்துக் கொள்ளலாம்... 

ஆனால் நானின்று ஒரு புதிய ஆடையை உடுத்தி இருக்கிறேன்! 
படுத்துறங்கினால் கசங்கிவிடும் என்று
நிற்கத் தெம்பில்லாமலும் நின்று கொண்டிருக்கிறேன்! 

நான் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறே!ன்
கீழே விழுந்தாலும் என் வலியை பாராமல்
வண்டியின் நெளிவைச் சரி செய்து கொள்கிறேன்! 

நான் ஒரு புதிய நோட்டை எடுத்திருக்கிறேன்! 
தலையைப் பிய்க்கும் அளவிற்கு
உள்ளுக்குள் சத்தம் கேட்டாலும்
கிறுக்கினால் அழுக்காகிவிடுமென்று! 
அதில் கோடு போட்டு அழகாக எழுதிக்கொள்கிறேன்! 

ஒவ்வொரு புதிய பொருளும்
ஓராயிரம் உணர்வுகளைப் பூட்டி வைக்கின்றது! 
இன்று ஒரிரவேனும் நான் தூங்கியாகவேண்டும்! 

நான் பெருக்கி சுத்தமாக்கிய அறையைக் 
கொஞ்சம் அழுக்காக்கிக்கொள்கிறேன்! 

மடித்து வைத்த துணிகளைக் கசக்கி
கொஞ்சம் நாற்காலி மேல் போட்டுக்கொள்கிறேன்! 
எண்ணெய் வைத்து வாரிய தலையைக் கொஞ்சம் கலைத்துக்கொள்கிறேன்! 

ஒரு வேர்வை நெடியுள்ள சட்டையை 
எடுத்து அணிந்துகொள்கிறேன்! 
அழுக்கில் போட்ட போர்வையை 
எடுத்துப் போர்த்திக்கொள்கிறேன்! 

இன்று ஒரிரவேனும் தூங்கியாகவேண்டும்! 
இந்த அழுக்கிலாவது உறங்கிக்கொள்கிறேன்! 

மேலும்
பழையதுகளின் வாசனை கொண்ட திரவியம் இருந்தால் தாருங்கள்
என் ஒவ்வொரு புது நாளின் மேலும்
கொஞ்சம் பூசிக்கொள்கிறேன்... 

                                     -இருதயா

Comments

Post a Comment

Popular Posts