Monday, 30 September 2019

நெகிழி

நிலையற்ற மனிதர்களுக்கு மத்தியில்
நான் கேவலம் ஒரு
நெகிழியாக இருந்து விட ஆசைப்படுகிறேன்!
காரணம் அடுத்தவர்களை
அழிப்பதற்காக அல்ல
என்னை யாரும் அழித்துவிட
கூடாது என்பதற்காகத்தான்!
அடுத்தவர்களால் பயன்படுத்ப்பட்டு
தூக்கியெறியப்பட்ட பின்னும்
அவர்களை நினைத்து மக்கியது போதும்!
இனியும் எறியப்பட்டால்
நெகிழ்ந்து போகாமல்
நெகிழியைப் போல
அப்படியே இருப்பேன்
நூற்றாண்டுகள் கடந்தும்!
அவ்வளவு அக்கறை இருந்தால்
அவர்களே என்னை துடைத்து
எடுத்துக் கொள்ளட்டும்!
மறுசுழற்சிக்கு என்றும்
நான் மறுப்பதில்லை!
                                        -மகி

Thursday, 26 September 2019

நீளமான பாதை


அது ஒரு நீளமான பாதை;
ஷேர் ஆட்டோ ஏதும் ஏறாமல்
நடந்தே போனால்
விடுதி பொய் சேர
இருபது நிமிடங்கள் ஆகும்.
ஆனாலும் நடந்தே செல்கிறேன்;

நீண்ட தூரம் நடப்பது
கால்களால் சிந்திப்பது என்பார்கள்,
நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க
மனது மட்டும் போதாது என்று
கால்களையும் சேர்த்துக்கொள்கிறேன்;

ஏற்கனவே பசியால் பாதி மயங்கிய கண்கள்
கால்களையும் தடுமாற வைக்க,
சுதாரித்துக் கொள்கிறேன்;

அருகில் மரங்கள் எதுவும் இல்லை
ஒரு மின்கம்பத் தூணை பிடித்துக்கொள்கிறேன்;

"நான் இயலாதவள் என்று நினைத்துத்தானே
வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள்,
நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் இல்லை"
மீண்டும் எழுந்து நடக்கிறேன்;

பசி மயக்கமும்,
அவர்கள் பேசிய வார்த்தைகளும்,
இன்னும் போக வேண்டிய தூரமும்,
எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்த,
அடக்கத்தெரியாத மனம்
கண்ணீரால் காட்டிக்கொடுக்கிறது;

டீக்கடையில் நிற்பவர்கள் திரும்பிப்பார்க்கிறார்கள்,
கண்ணை துடைத்துக்கொள்கிறேன்
நான் ஒன்றும் பலவீனமானவள் இல்லை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்;

விடுதி வந்துவிட்டது.
டிபன் பாக்ஸில் எடுத்து வைத்த
காய்ந்து போன புளிசாதம்
காலையில் இருந்து எனக்காக காத்திருக்கும்,
அதை ஈரமாக்க கண்ணீரை கொஞ்சம் சேமி்த்துக்கொள்கிறேன்.
-இருதயா

Sunday, 15 September 2019

குடையின்றி நனைகிறேன்...

கொட்டும் கோடை மழையில்
குடையின்றி நனைகிறேன்..
அருகே அவளில்லை..
எண்ணத் துணிவில்லை..

புல்நுனியில் அவள் பிம்பம்
சட்டென்று உடைகிறது....
என் மனம் அவள் இழப்பை
உணர மறுக்கிறது..

என் விந்தை உயிர்வித்தவள்
அவள் உயிரை விட்டுவிட்டாள்..
குழந்தையாய் பாவித்தேன்...
என் கையில் தவழுகிறாள்..
                                         -எழில் 

Monday, 2 September 2019

பயமா... எனக்கா...?

அப்பா! ஹாஸ்பிடல்ல பாத்தாலே பயமா இருக்கு...அங்க இருக்க டாக்டர்லாம் பெரிய பெரிய ஊசியா வெச்சுருக்காங்கலாம் பா... அங்க போனா நம்மலையும் எதாவது பன்னீருவாங்களா?
அதெல்லாம் பொய்டா செல்லம். டாக்டர் அங்கிள் ரொம்ப நல்லவர்.
உங்களுக்கு பயமா இல்லயாபா?
___________________________________
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன்...
அன்று என் தம்பிக்கு ஆப்பரேஷன்.
"என்ன விட்ருங்க... என் பக்கத்துல வராதீங்க... அண்ணா இவங்கள இங்க இருந்து போக சொல்லுங்க... "என்று கத்தினான்.
ரொம்ப மைனர் ஆப்பரேஷன் தான் பயப்படாதீங்கனு டாக்டர் ஆறுதல் சொன்னார்.
என் தம்பியின் கை கால்களை இருவர் பிடித்து அவனுக்கு மயக்க ஊசி போட முயன்று கொண்டிருந்தார்கள்.
அவன் வலி நிறைந்த கண்களுடன் என்னை ஒரு முறை பார்த்தான்.
கையளவு நெஞ்சை காகிதத்தை போல ஏதோ ஒன்று கசக்கியது.
கால்கள் தள்ளாடின. தலை சுற்றியது. சில நொடிகளில் உலகம் இருண்டு போனது.
அவனுக்கு முன் நான் மயங்கி விட்டேன்.
"கண் முழித்து பார்க்கும் போது ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது... தம்பி தூங்கீட்டு இருக்கான்" என்றார் டாக்டர்.
ரொம்ப நன்றி டாக்டர் என்றேன்.
"அவனுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி பயந்தா என்ன பன்றது ?"
"பயம்மலா ஒன்னுமில்ல டாக்டர்... காலைல சாப்படல அப்பறம் ராத்திரி பூரா தூங்கல... அதன் தல சுத்தீருச்சு போல..." என்று ஏதேதோ சமாதானம் சொன்னேன்.
அவர் சிரித்துக்கொண்டே அறையை விட்டு சென்றார்.
அப்படி நடப்பது அதுவே முதலும் முடிவுமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என் மகள் பிறந்தாள்.
அன்று என் மனைவிக்கு பிரசவம். வலியில் அவள் துடித்துக் கொண்டிருந்தாள். நானும் தான்.
"என்னங்க... " என்று கத்தி கண் மூடினாள்.என் கண்கள் தானாக மூடிக்கொண்டது.எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது  மீண்டும் நடந்தது.
ஆம். நான் மீண்டும் மயங்கி விட்டேன். இந்த முறை என்னை எழுப்ப என் மகள் பிறந்திருந்தாள்.
இன்னும் எத்தனை முறை விழப்போகிறேனோ என்று நினைத்து கொண்டிருக்கும் போதே என் மகள் மீண்டும் கேட்டாள்
"அப்பா! அப்பா! என்ன யோசிக்கரீங்க? உண்மையா சொல்லுங்க உங்களுக்கும் ஹாஸ்பிடல்னா பயந்தான?"
"பயமா? எனக்கா...." என்ற டயலாக்கை சொல்லி சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
                                 -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...