நீளமான பாதை


அது ஒரு நீளமான பாதை;
ஷேர் ஆட்டோ ஏதும் ஏறாமல்
நடந்தே போனால்
விடுதி பொய் சேர
இருபது நிமிடங்கள் ஆகும்.
ஆனாலும் நடந்தே செல்கிறேன்;

நீண்ட தூரம் நடப்பது
கால்களால் சிந்திப்பது என்பார்கள்,
நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க
மனது மட்டும் போதாது என்று
கால்களையும் சேர்த்துக்கொள்கிறேன்;

ஏற்கனவே பசியால் பாதி மயங்கிய கண்கள்
கால்களையும் தடுமாற வைக்க,
சுதாரித்துக் கொள்கிறேன்;

அருகில் மரங்கள் எதுவும் இல்லை
ஒரு மின்கம்பத் தூணை பிடித்துக்கொள்கிறேன்;

"நான் இயலாதவள் என்று நினைத்துத்தானே
வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள்,
நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் இல்லை"
மீண்டும் எழுந்து நடக்கிறேன்;

பசி மயக்கமும்,
அவர்கள் பேசிய வார்த்தைகளும்,
இன்னும் போக வேண்டிய தூரமும்,
எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்த,
அடக்கத்தெரியாத மனம்
கண்ணீரால் காட்டிக்கொடுக்கிறது;

டீக்கடையில் நிற்பவர்கள் திரும்பிப்பார்க்கிறார்கள்,
கண்ணை துடைத்துக்கொள்கிறேன்
நான் ஒன்றும் பலவீனமானவள் இல்லை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்;

விடுதி வந்துவிட்டது.
டிபன் பாக்ஸில் எடுத்து வைத்த
காய்ந்து போன புளிசாதம்
காலையில் இருந்து எனக்காக காத்திருக்கும்,
அதை ஈரமாக்க கண்ணீரை கொஞ்சம் சேமி்த்துக்கொள்கிறேன்.
-இருதயா

Comments

Popular Posts