பயமா... எனக்கா...?

அப்பா! ஹாஸ்பிடல்ல பாத்தாலே பயமா இருக்கு...அங்க இருக்க டாக்டர்லாம் பெரிய பெரிய ஊசியா வெச்சுருக்காங்கலாம் பா... அங்க போனா நம்மலையும் எதாவது பன்னீருவாங்களா?
அதெல்லாம் பொய்டா செல்லம். டாக்டர் அங்கிள் ரொம்ப நல்லவர்.
உங்களுக்கு பயமா இல்லயாபா?
___________________________________
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன்...
அன்று என் தம்பிக்கு ஆப்பரேஷன்.
"என்ன விட்ருங்க... என் பக்கத்துல வராதீங்க... அண்ணா இவங்கள இங்க இருந்து போக சொல்லுங்க... "என்று கத்தினான்.
ரொம்ப மைனர் ஆப்பரேஷன் தான் பயப்படாதீங்கனு டாக்டர் ஆறுதல் சொன்னார்.
என் தம்பியின் கை கால்களை இருவர் பிடித்து அவனுக்கு மயக்க ஊசி போட முயன்று கொண்டிருந்தார்கள்.
அவன் வலி நிறைந்த கண்களுடன் என்னை ஒரு முறை பார்த்தான்.
கையளவு நெஞ்சை காகிதத்தை போல ஏதோ ஒன்று கசக்கியது.
கால்கள் தள்ளாடின. தலை சுற்றியது. சில நொடிகளில் உலகம் இருண்டு போனது.
அவனுக்கு முன் நான் மயங்கி விட்டேன்.
"கண் முழித்து பார்க்கும் போது ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது... தம்பி தூங்கீட்டு இருக்கான்" என்றார் டாக்டர்.
ரொம்ப நன்றி டாக்டர் என்றேன்.
"அவனுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி பயந்தா என்ன பன்றது ?"
"பயம்மலா ஒன்னுமில்ல டாக்டர்... காலைல சாப்படல அப்பறம் ராத்திரி பூரா தூங்கல... அதன் தல சுத்தீருச்சு போல..." என்று ஏதேதோ சமாதானம் சொன்னேன்.
அவர் சிரித்துக்கொண்டே அறையை விட்டு சென்றார்.
அப்படி நடப்பது அதுவே முதலும் முடிவுமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என் மகள் பிறந்தாள்.
அன்று என் மனைவிக்கு பிரசவம். வலியில் அவள் துடித்துக் கொண்டிருந்தாள். நானும் தான்.
"என்னங்க... " என்று கத்தி கண் மூடினாள்.என் கண்கள் தானாக மூடிக்கொண்டது.எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது  மீண்டும் நடந்தது.
ஆம். நான் மீண்டும் மயங்கி விட்டேன். இந்த முறை என்னை எழுப்ப என் மகள் பிறந்திருந்தாள்.
இன்னும் எத்தனை முறை விழப்போகிறேனோ என்று நினைத்து கொண்டிருக்கும் போதே என் மகள் மீண்டும் கேட்டாள்
"அப்பா! அப்பா! என்ன யோசிக்கரீங்க? உண்மையா சொல்லுங்க உங்களுக்கும் ஹாஸ்பிடல்னா பயந்தான?"
"பயமா? எனக்கா...." என்ற டயலாக்கை சொல்லி சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
                                 -மகி

Comments

Popular Posts