இரண்டு டீ

"என்ன வேணுப்பா?"
"என்னண்ணே புதுசா கேக்குறீங்க டெய்லி வாங்கறதான...
ஒரு டீ போடுங்க"

"அப்படிக் கேட்டாவது பாக்கி ஞாபகம் வரும் தான்பா கேட்டேன்"
"நாளைக்கு சம்பளம் கொடுத்துருவாங்கன்னு சொல்லி இருக்காங்க, கொடுத்திருவேண்ணே"

"நான் ஒண்ணு வில்லன் இல்லப்பா,
வரவங்க எல்லா பாக்கி வச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன் சொல்லு"

"புரிதுணே........கம்பெனில பாதிப் பேரை வேலையை விட்டு தூக்கிட்டான்,
இருக்குறவங்களுக்கு இன்னும் சம்பளம் போடல, இதுல இன்னும் யார தூக்க போறாயிங்கணு வேற தெரியல, என்ன பண்ண"

சுருக்கமாய் ஒரு மௌன இடைவெளி

"எதுக்கு வெட்டி பேச்சு நாளைக்கு எப்படி ஆவது காசு கொடுத்துடு, இந்தா எடுத்துக்கோ"

எவ்வளவு சீனி போட்டாலும் அன்றைக்கு டீ கசக்கத்தான் செய்தது.
அந்த கசந்த டி குடித்துக்கொண்டே சிந்தனையில் மூழ்கினான் மனோ.

சற்றென்று அவன் கவனம் அருகில் நெருங்கிய அந்த வயசான கிழவி மீது சென்றது. அங்க இருந்த யாரும் தர்ம பிரபுக்கள் இல்லை போல, அவளுக்கு யாரிடமும் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. மனோவிடம் வந்ததும் அவள் கண்களும் மனோவின் கண்களும் ஏதோ பேசிக் கொண்டன மறுகணம் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவள் டீக்கடைக்காரரிடம் சென்றாள்.

டீ கடைக்காரர் சற்றே கறாரான குறலுடன் "காசெல்லா இல்ல, டீ வேணுனா தரேன் குடிக்கிறியா?"

அவளும் பெருந்தன்மையுடன் "ம்ம்" என்று தலை ஆட்டினாள்.

"அண்ணே அந்த டீயையும் என்னோட கணக்குல எழுதிடுங்க" என்று அவர் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் மனோ.

                                  -அகல்

Comments

Popular Posts