Tuesday, 18 August 2020

ஜியோமெட்ரிக் பாக்ஸ்

அப்பா வாங்கி தந்த
ஜியோமெட்ரிக் பாக்ஸ்!
கணக்கு டீச்சரிடம்
பல முறை திட்டு வாங்கியும்,
பக்கத்து க்ளாஸ் நண்பர்கள்
கடன் தர மறுத்ததாலும்
அடம் பிடித்து வாங்கிய
ஜியோமெட்ரிக் பாக்ஸ்!
டிவைடர், காம்பஸ், ப்ரோட்டக்டர்
இன்னும் சில பிளாஸ்டிக் பொருட்கள்...
இன்று வரை அதன் பெயர் கூட
தெரியாது எனக்கு!
இவர்களுடன் வாடகை தராத 
வீட்டுக்காரர்களாய் 
வெட்டுக்கிளியும்,
சிலந்தி பூச்சியும்!
மேடு பள்ளம் பார்க்காமல்
கரடுமுரடான மர பெஞ்சில்
எங்களை பஸ் டிரைவராக
மாற்றியதும் இந்த 
ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான்!
இன்று துரு பிடித்து கிடைக்கும்
அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸின் கதைகளை
ஆன்லைனில் படிக்கும்
என் மகனுக்கு
எப்படி சொல்வேன்?

                                  -மகி

Thursday, 13 August 2020

அன்புள்ள வீரர்களுக்கு!

“எங்கோ படித்த ஞாபகம்
‘தற்கொலை என்பது தெய்வநிந்தனை’ 
மனிதர்கள் மீது நம்பிக்கையற்ற இந்தச் சூழலுக்காக 
தெய்வத்தை நிந்திக்க விரும்பியே
இந்த முடிவுக்கு வந்தேன்”

அவளின் தற்கொலை கடிதம் 
ஆழமான கவிதைதான்

“என்னை கோழை என்று பலரும் போற்றுவர்.
அவர்களின் கரிசனைக்கு நன்றி,
அம்மாபெரும் வீரர்கள் நலமோடு வாழ
தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்”

அவள் விடைபெற்று ஐந்தாண்டுகள் வழிந்தோடிற்று
அந்த கடிதத்தின் வரிகளுக்கு என் மனதளவில் 
இன்னும் வயது ஆகவே இல்லை

“அந்த மென்மையான வரிகள்,
’SORRY!  உங்களால குழந்த பெத்துக்க முடியாது’ 
கேட்டதுமே என் இதயம் நின்றிருக்கக் கூடாதா.
பாழாப் போன இதயம் தாங்கிதொலைத்துவிட்டது.”

எட்டு ஆண்டுகளில்
அவள் இதயம் எவ்வளவு புண்ணாகியிருக்கும்
அன்பை மட்டுமே சுமந்ததாயிற்றே,
அதிகமாய் காயப்பட்டு இருக்கும்.

“என் இல்லாமை ஒருவரைமட்டுமே 
பாதிக்கும் என்று நம்புகிறேன்.
SORRY! மனோ, தாமதமாய் இம்முடிவை எடுத்ததுக்கு,
நான் உங்கள ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டேன்.”

நான் சந்தித்த மனிதர்கள் பலருக்கும் 
அவள் கடிதத்தை ஒப்பித்துவிட்டேன்.
அம்மனிதர்களின் கண்ணீர்த் துளிகளே
என்னை நடமாடச் செய்தது.

அவள் கடிதத்தை ஓர் இதழில் வெளியிடச் செய்துவிட்டேன்.
என் உடைமைகளை பங்கிட்டுவிட்டேன்.

வீரர்களிடமிருந்து விடைபெறுகிறேன்

இப்படிக்கு ,
மனோ

                             -அகல்

Friday, 7 August 2020

ஊரடங்கு வாழ்க்கை

வாரத்தின் முதல் நாளை கண்டு
பயந்திராத இந்த நாட்கள்!
வீட்டுக்கும் ஆபிஸுக்கும்
ஷிப்ட் போட்டு உழைக்காத
இந்த நாட்கள்!
ஃபாஸ்ட் ஃபார்வாடாக சென்ற வாழ்க்கையில்
பாஸ் பட்டனாக வந்த
இந்த நாட்களை 
முதலில் நானும் ரசிக்கத்தான் செய்தேன்...
யார் தான் மாட்டார்கள்?


எனக்குள் இருந்த குழந்தையை
மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கிறேன்!
என் தொலைந்து போன உணர்ச்சிகளை 
தூசி தட்டுகிறேன்!
என்னை நானே
மறுசுழற்சி செய்ய முயற்சிக்கிறேன்!
முடிந்த வரை பயன் உள்ளதாக
மாற்ற நினைக்கிறேன்
இந்த நாட்களை!
அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்கள்!
அப்படி செய்யாதவர்களை
கேலியும் செய்கிறார்கள்!
இந்த நாட்களில் கூட 
நான் நானாக இருப்பதை
அவர்கள் விரும்பவில்லை!
என்று தான் விரும்பினார்கள்?


பேருந்துகள் இல்லை!
பயணங்கள் இல்லை!
தேவையற்ற தீண்டல்கள் இல்லை!
கண்ணியமற்ற பார்வைகள் இல்லை!
போலியான சிரிப்புகள் இல்லை!
என சிலாகித்து நாட்கள் கடந்தது!
இந்த பயம் வரும் வரை!


வைரஸை விட வேகமாக பரவும்
இந்த பயம்!
பயம் என்பதை விட
ஒரு இனம் தெரியாத கவலை!
பல வருடங்கள் பேசாத நண்பன்,
பகையில் முடிந்த உறவுகள்
என பாரபட்சமின்றி
எல்லோரையும் நலம் விசாரிக்கிறேன்!
பகையை மறந்து!
கண்ணாடியில் என் பிம்பம்
என்னை காரித் துப்புகிறது
"நீ எல்லாம் மானஸ்தியா?" என்று!
துடைத்துக் கொள்கிறேன்!
பகையைப் போல பயமும் கடந்து போகும் என்று!


இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை தான்
நாட்களை நகர்த்திச் செல்கிறது!
அவ்வளவு நம்பிக்கை என்னிடம் இல்லை!
எந்த நம்பிக்கை 
என் கணவனை இழந்த போது
என்னை இழுத்துச் சென்றதோ
அது இன்று இல்லை!
அதனால் கடன்வாங்கிக்கொள்கிறேன்!


ஊரடங்கு முடிந்தாலும்
ஊரடங்கில் இருக்கும்
வீட்டுப் பெண்களிடம் கொஞ்சம்!
தன் முதல் நாள் வேலைக்காக காத்திருக்கும்
இளைஞனிடம் கொஞ்சம்!
கொரோனாவோடு போராடும்
நோயாளியிடம் கொஞ்சம்!
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
எல்லோரிடமும் நம்பிக்கையை
கடன் வாங்குகிறேன்!
இந்த நாட்கள் முடிந்தவுடன்
அதை திருப்பிக் கொடுத்துவிடுவேன்
என்ற நம்பிக்கையில்!

                                   -மகி

Saturday, 1 August 2020

கோபம் எங்கே?

மறதி ஒரு தேசிய வியாதி...
சிந்தனையை மடைமாற்ற 
காவிகள் இங்கே உண்டு...

சக மனிதனை தாழ்ந்தவன் என
இழித்து பேசும் கூட்டத்தின் மீது
கோபம் எங்கே? 

குலத்தொழிலை முன்னிறுத்தும்
பார்ப்பனிய கூட்டத்தின் மீது
கோபம் எங்கே?

பெண்களை படிக்க வைக்காதே
எனக் கூறும் இழி பிறவிகள் மீது
கோபம் எங்கே?

மனிதக் கழிவை
மனிதனே அகற்றும் அவலத்தை 
அவன் கர்மவினை என்று 
சொல்பவர்கள் மீது 
கோபம் எங்கே?

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்துவிட்டு
உண்பவர்களைக் கொல்லும்
மத வெறியர்கள் மீது
கோபம் எங்கே?

சட்டம் இருந்தும்
தீண்டாமை சுவர்கள் கட்டிய 
கயவர்கள் மீது
கோபம் எங்கே?

கருவறைக்குள் நுழைய
இன்றும் தடுக்கும்
பார்ப்பனியத்தின் மீது
கோபம் எங்கே?

கோபம் கொள்ள 
பல அவலங்கள் உண்டு...
ஆனால் இங்கோ

கடவுளை இழி சொல் பேசினால் 
வரும் கோபம்
மனிதனை கீழ்த்தரமாக நடத்தினால்
வருவதில்லை...
அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டால்
வருவதில்லை...

மறதி மட்டும் அல்ல
சாதியும் இங்கே தேசிய வியாதி...
எதிர்த்தால்
உன்னை மடைமாற்ற
மதம் மாற்ற
காவிகள் இங்குண்டு...

                                    -எழில்

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...