ஊரடங்கு வாழ்க்கை

வாரத்தின் முதல் நாளை கண்டு
பயந்திராத இந்த நாட்கள்!
வீட்டுக்கும் ஆபிஸுக்கும்
ஷிப்ட் போட்டு உழைக்காத
இந்த நாட்கள்!
ஃபாஸ்ட் ஃபார்வாடாக சென்ற வாழ்க்கையில்
பாஸ் பட்டனாக வந்த
இந்த நாட்களை 
முதலில் நானும் ரசிக்கத்தான் செய்தேன்...
யார் தான் மாட்டார்கள்?


எனக்குள் இருந்த குழந்தையை
மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கிறேன்!
என் தொலைந்து போன உணர்ச்சிகளை 
தூசி தட்டுகிறேன்!
என்னை நானே
மறுசுழற்சி செய்ய முயற்சிக்கிறேன்!
முடிந்த வரை பயன் உள்ளதாக
மாற்ற நினைக்கிறேன்
இந்த நாட்களை!
அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்கள்!
அப்படி செய்யாதவர்களை
கேலியும் செய்கிறார்கள்!
இந்த நாட்களில் கூட 
நான் நானாக இருப்பதை
அவர்கள் விரும்பவில்லை!
என்று தான் விரும்பினார்கள்?


பேருந்துகள் இல்லை!
பயணங்கள் இல்லை!
தேவையற்ற தீண்டல்கள் இல்லை!
கண்ணியமற்ற பார்வைகள் இல்லை!
போலியான சிரிப்புகள் இல்லை!
என சிலாகித்து நாட்கள் கடந்தது!
இந்த பயம் வரும் வரை!


வைரஸை விட வேகமாக பரவும்
இந்த பயம்!
பயம் என்பதை விட
ஒரு இனம் தெரியாத கவலை!
பல வருடங்கள் பேசாத நண்பன்,
பகையில் முடிந்த உறவுகள்
என பாரபட்சமின்றி
எல்லோரையும் நலம் விசாரிக்கிறேன்!
பகையை மறந்து!
கண்ணாடியில் என் பிம்பம்
என்னை காரித் துப்புகிறது
"நீ எல்லாம் மானஸ்தியா?" என்று!
துடைத்துக் கொள்கிறேன்!
பகையைப் போல பயமும் கடந்து போகும் என்று!


இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை தான்
நாட்களை நகர்த்திச் செல்கிறது!
அவ்வளவு நம்பிக்கை என்னிடம் இல்லை!
எந்த நம்பிக்கை 
என் கணவனை இழந்த போது
என்னை இழுத்துச் சென்றதோ
அது இன்று இல்லை!
அதனால் கடன்வாங்கிக்கொள்கிறேன்!


ஊரடங்கு முடிந்தாலும்
ஊரடங்கில் இருக்கும்
வீட்டுப் பெண்களிடம் கொஞ்சம்!
தன் முதல் நாள் வேலைக்காக காத்திருக்கும்
இளைஞனிடம் கொஞ்சம்!
கொரோனாவோடு போராடும்
நோயாளியிடம் கொஞ்சம்!
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
எல்லோரிடமும் நம்பிக்கையை
கடன் வாங்குகிறேன்!
இந்த நாட்கள் முடிந்தவுடன்
அதை திருப்பிக் கொடுத்துவிடுவேன்
என்ற நம்பிக்கையில்!

                                   -மகி

Comments

Popular Posts