Tuesday, 31 March 2020

நடை பிணங்கள்

அவர்கள் கால்களால் உரசினார்கள்
பல மைல்கள் உரசினார்கள்.

"நல்ல வேளை
அந்த ரோட்டுபக்கம் டென்டு போட்ட கூட்டம்
இப்பவாச்சும் ஒழிஞ்சி போச்சே!"

அவர்கள் கால்களால் உரசினார்கள்
வலி பசியை மறைக்கும் அளவுக்கு
உரசினார்கள்

"இங்க கிடந்து
ஊர் முழுக்க சுத்தி
நமக்கும் நோயை கொடுத்திருக்கும் ங்க"

அவர்கள் இன்னும் உரசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
தலையில் பொதியையும்
இடுப்பில் குழந்தையையும்
காலில் அனலையும் கட்டிக்கொண்டு
உரசுகிறார்கள்.

"இந்த நோய் வந்தாவது
நம்ம இடம் நமக்குன்னு ஆனதே
அந்த வந்தேறிகள் வந்து தான்
நமக்கு வேலையில்லாம போச்சு"

அங்கு கால்களால் உரசுகிறார்கள்
அவர்க்கு இந்த ஏச்சும் பேச்சும் புதிதல்ல
வயிற்றை நிரப்ப
காதை மூடிக்கொண்டு
பிழைத்துக்கொண்டார்கள்.
இன்று
தூரம் தெரியாமலிருக்க
கண்ணை மூடிக்கொண்டும் நடக்கிறார்கள்.

சீலை முந்தானையில்
ஒரு இழு
ரோட்டோரம் படுக்கும்போது
சில கைகள்
தெரிந்தே தெரியாமல் இழுத்துப்போகுமே
அதுபோல

அவள் கண்திறந்து திரும்பிப்பார்க்கிறாள்
மகன் தான்

"எப்பம்மா நம்ம ஊர் வரும்"
அவர்கள் பாஷையில் பேசிக்கொள்கிறார்கள்.
"வந்துடும் டா"
"அங்கப்போனா நம்மள நல்லா பாத்துபாங்கல?"
"ஆமாடா, இப்ப நட"

ஊர் வந்தது.
நா வறண்டு ஒரு வாய் தண்ணீர் கேட்டது.
குடிக்கக் கிடைக்கவில்லை
குளிக்கக்கிடைத்தது
கிருமிநாசினியால்.

"இது ரோட்டுல தானே அடிப்பாங்க
நம்மேல ஏம்மா அடிக்குறாங்க"
"நாம ரோட்டுல வாழுறவங்க டா"

ஏழைகள்
எங்குசென்றாலும் ஏழைகளே !

‌                                -இருதயா

Monday, 30 March 2020

21 நாட்கள்

பிரதமரின் உரை முடிந்தது!
எங்கும் பதற்றம்!
பொதுவாக ஏன்? எதற்கு? 
என்ற‌ கேள்விகள் மட்டுமே எழும்
இம்முறை எப்படி ?
என்ற கேள்வி தான் எல்லோரின் மனதிலும்!
எப்படி நாங்கள் வீட்டிலேயே இருப்பது? 
இந்த கேள்வியை என்றும்
நம் அம்மாக்களின் மனதில்
எழ விட்டதில்லை!
காரணம் 
அவர்கள் அதற்காகவே பிறந்தவர்கள் என்று
நாம் மட்டும் நம்பாமல்
அவர்களையும் நம்ப வைத்தது தான்!
சிலர் அத்தியவசியப் பொருட்களை 
வாங்கி குவிக்க, 
சிலர் என்னால் வீட்டுக்குள்ளேயே
இருக்க முடியாது என்று 
வெளியில் வர,
இன்னும் சிலர் டிவி பார்த்து
வீதியில் சுற்றித் திரிபவர்களை
திட்டினார்கள்!
இனி 21 நாட்கள் நாட்கள்
பேருந்து பயணங்கள் இல்லை!
ரயில் பயணங்கள் இல்லை!
தேவையற்ற உரசல்கள் இல்லை!
என்ற நிம்மதியில் இருந்த
பெண் போல தார் ரோடுகள்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க,
சிலர் மட்டும் தங்கள் கால்களால்
உரசினார்கள்!
பல மைல்கள் உரசினார்கள்!
அவர்கள் கூலித்தொழிலுக்காக
வெளிமாநிலங்கள் வந்தவர்கள்!
அவர்கள் ஒழிந்து கொள்ள 
வீடில்லை!
பொருட்களை வாங்க பணமில்லை!
சொந்த ஊருக்கு செல்ல
பஸ்ஸும் இல்லை!
இருந்ததெல்லாம் பசி மட்டுமே!
எனவே உரசினார்கள்!
வெறுப்பாகிய ரோடுகள் கேட்டது
கொரோனா பற்றிய 
கவலையில்லையா? என்று
கொரோனாவை விட கொடியது 
இந்த "பசி"
என்று சொல்லிக்கொண்டே மீண்டும் 
உரசின கால்கள்!
அவர்களின் ஊரை நோக்கி!

                                            -மகி

Sunday, 29 March 2020

வாழும் உயிர்களுக்காக...

ஆளரவமற்ற அடக்கமாய் ஒரு இழவு வீடு.
-
"நேத்து நைட்டு கூட நல்லா தான பேசிட்டு படுத்தீங்க.
இனி உங்களை விட்டு நான் எப்படி தனியா இருக்க போறேன்.....?"
-
மாரடைப்பில் இறந்த கணவனுக்காக 30 வருஷ திருமண வாழ்க்கையின் நினைவுகளை வரிசையாய் அடுக்கிக் கொண்டே ஒப்பாரி வைக்கிறாள் மனைவி.
-
"பெத்த ரெண்டையும் நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கி கம்பீரமா வாழ்ந்தீங்களே......
மனுஷங்களை மதிக்கணும்னு சொல்லுவீங்களே......
மனுஷங்க கிட்ட பாசமா இருக்கணும்னு சொல்லுவீங்களே......
ஊரே உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுச்சே......
உங்களுக்கு இப்படி ஒரு சாவு வரணுமா.....!
மூத்தமகன் போன்ல கதறுறான்......
அப்பனுக்கு என் கையால கொள்ளி வைக்க கூட கொடுத்து வைக்கலயே னு......
என்னங்க சொல்லுவேன் அவனுக்கு......!
'டெல்லி இங்கிட்டு தான் இருக்கு,
பாக்கணும்னு தோணுச்சுன்னா ஓடி வந்துடுவான்' னு சொல்லி அனுப்பி வச்சீங்களே......
எங்கங்க முடிஞ்சுது.....!"
-
"ஒப்பாரி வைக்கக் கூட சொந்தபந்தம் சுத்தி இல்லையே......!
உங்களுக்கு நா மட்டுமாவது ஒப்பாரி வைக்கணும்னு தான் என்ன விட்டுட்டு போனீங்களா......!"
-
அழுது அழுது தொண்டை வறண்டு, அவள் குரல் மங்கிப் போனது.
-
"இளையவ சென்னைலயிருந்து கார் புடிச்சு வந்துட்டு இருக்காளாம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா."
-
அழுகையும் புலம்பலும் சுற்றி நிற்கும்  பத்து பேரின் இதயத்தையும் கனக்கச் செய்தது. ஆம் அந்த விசாலமான வீட்டில் பத்து பேர்தான் இருந்தார்கள்.
பறையடிக்க ஒருத்தர்,
சங்கு ஊத ஒருத்தர்,
நோய் தொற்றுக்காக முகமூடி போட்டுக் கொண்டு பிணம் தூக்க, நாலு நெருங்கிய நண்பர்கள், அவர்களின் மனைவிகள்.
அதற்குமேல் கூடாது.
அரசாங்க உத்தரவு.
அவர்களையும் குறை கூற முடியாது.
வாழ்ந்து முடித்தவர்களைக் காட்டிலும் வாழ்பவர்கள் முக்கியம்.
-
"இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுங்க......!"
-
-
-
கண்ணீர் இல்லாத,
ஒப்பாரி இல்லாத சாவுகள் கொடூரமானவை.
ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் முக்கியம். கொலைகாரர்கள் ஆகாமல் தனித்து இருப்போம்.

                                      - அகல்

Thursday, 26 March 2020

தனிமை என்னும் அவள்..

கருவறையில் கைகோர்த்து
இருந்தாய்...
உனைப் பிரிந்ததால் 
பிறந்ததும் அழுதேன்..

ஒற்றைப் பிள்ளை என்று ஊரார் கூற
ஓடோடி வந்தென்னை
அணைத்துக் கொண்டாய்..

நம்மிடையே ரகசியங்கள் ஏது?
என் அந்தரங்கம் அறிந்தவள் நீ...

திரையரங்கில் தோள் சாய்ந்தாய்..
தவிக்கும் போது தோள் கொடுத்தாய்..

கடற்கரையில் நம்மைக் கண்டு
அந்த கடலும் பொறாமை கொள்ளும்..
உன் போல் துணை தனக்கு இல்லையென்று...

நம்பிக்கை உண்டு..
இறந்தாலும்..
என்றும் உன் துணை 
உண்டென்று...
                               -எழில்

Friday, 20 March 2020

51 G white board


ஒவ்வொரு நிறுத்தமும் 
ஒரு கதை சொல்லும், அவர்களுக்கு.....
கடந்த பாதையின் நினைவுகளில் மூழ்கிப் போகும் முதியோர்கள்
இல்லை இல்லை, அனுபவசாலிகள்.

நெரிசல் இருக்கிறதாம் அவர்களுக்கு.....
பள்ளி சீருடையுடன் படியில் நிற்கும் காதலன்
அவனின் பையை வைத்துக்கொள்ளவே ஜன்னலோரம் பிடிக்கும் கண்மணி
சந்திராயன் - 5 போனாலும்
எப்போதும் இருப்பார்கள் இந்த காதலர்கள்.

எல்லா இருக்கையும் ஒன்றுதான் அவர்களுக்கு.....
ராஜாவோ ரகுமானோ இயர் போன் இல் பாடிக் கொண்டிருக்க
இந்த கண்மணியும் காதலனையும் கண்டு ரசிக்கும்
ஐடி ஊழியர்கள்.

எந்தப் பாம்பாமும்  காதில் விழாது அவர்களுக்கு.....
கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பாக்கியம் கிடைத்ததால்
உழைத்துக் களைத்து, உறங்கிக்கொண்டிருக்கும்
 உண்மையில் நல்லவர்கள்.

சுவிங்கம் வேண்டுமாம்
அவர்களுக்கு.....
"நாளை உன்னுடையது"
இந்த வசனத்தைக் கேட்ட நொடியிலிருந்து நாளைக்காக காத்திருக்கும்,
பொதி மூட்டை தூக்கும் மார்டன் சிறுவர்கள்.


எல்லோரையும் கவனிப்பார்கள் அவர்கள்.....
நம்ம ப்ளாக்ல என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்
என்னை போன்ற மஞ்மாக்காங்கள். 

இந்த வைட் போர்டில் இரண்டே பேர் தான் 
உறங்கிக் கொண்டிருப்பவர்கள்
உறக்கம் வராமல் கவனித்துக் கொண்டிருப்பவர்கள்.

                                        -அகல்

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...