நடை பிணங்கள்

அவர்கள் கால்களால் உரசினார்கள்
பல மைல்கள் உரசினார்கள்.

"நல்ல வேளை
அந்த ரோட்டுபக்கம் டென்டு போட்ட கூட்டம்
இப்பவாச்சும் ஒழிஞ்சி போச்சே!"

அவர்கள் கால்களால் உரசினார்கள்
வலி பசியை மறைக்கும் அளவுக்கு
உரசினார்கள்

"இங்க கிடந்து
ஊர் முழுக்க சுத்தி
நமக்கும் நோயை கொடுத்திருக்கும் ங்க"

அவர்கள் இன்னும் உரசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
தலையில் பொதியையும்
இடுப்பில் குழந்தையையும்
காலில் அனலையும் கட்டிக்கொண்டு
உரசுகிறார்கள்.

"இந்த நோய் வந்தாவது
நம்ம இடம் நமக்குன்னு ஆனதே
அந்த வந்தேறிகள் வந்து தான்
நமக்கு வேலையில்லாம போச்சு"

அங்கு கால்களால் உரசுகிறார்கள்
அவர்க்கு இந்த ஏச்சும் பேச்சும் புதிதல்ல
வயிற்றை நிரப்ப
காதை மூடிக்கொண்டு
பிழைத்துக்கொண்டார்கள்.
இன்று
தூரம் தெரியாமலிருக்க
கண்ணை மூடிக்கொண்டும் நடக்கிறார்கள்.

சீலை முந்தானையில்
ஒரு இழு
ரோட்டோரம் படுக்கும்போது
சில கைகள்
தெரிந்தே தெரியாமல் இழுத்துப்போகுமே
அதுபோல

அவள் கண்திறந்து திரும்பிப்பார்க்கிறாள்
மகன் தான்

"எப்பம்மா நம்ம ஊர் வரும்"
அவர்கள் பாஷையில் பேசிக்கொள்கிறார்கள்.
"வந்துடும் டா"
"அங்கப்போனா நம்மள நல்லா பாத்துபாங்கல?"
"ஆமாடா, இப்ப நட"

ஊர் வந்தது.
நா வறண்டு ஒரு வாய் தண்ணீர் கேட்டது.
குடிக்கக் கிடைக்கவில்லை
குளிக்கக்கிடைத்தது
கிருமிநாசினியால்.

"இது ரோட்டுல தானே அடிப்பாங்க
நம்மேல ஏம்மா அடிக்குறாங்க"
"நாம ரோட்டுல வாழுறவங்க டா"

ஏழைகள்
எங்குசென்றாலும் ஏழைகளே !

‌                                -இருதயா

Comments

Popular Posts