வாழும் உயிர்களுக்காக...

ஆளரவமற்ற அடக்கமாய் ஒரு இழவு வீடு.
-
"நேத்து நைட்டு கூட நல்லா தான பேசிட்டு படுத்தீங்க.
இனி உங்களை விட்டு நான் எப்படி தனியா இருக்க போறேன்.....?"
-
மாரடைப்பில் இறந்த கணவனுக்காக 30 வருஷ திருமண வாழ்க்கையின் நினைவுகளை வரிசையாய் அடுக்கிக் கொண்டே ஒப்பாரி வைக்கிறாள் மனைவி.
-
"பெத்த ரெண்டையும் நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கி கம்பீரமா வாழ்ந்தீங்களே......
மனுஷங்களை மதிக்கணும்னு சொல்லுவீங்களே......
மனுஷங்க கிட்ட பாசமா இருக்கணும்னு சொல்லுவீங்களே......
ஊரே உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுச்சே......
உங்களுக்கு இப்படி ஒரு சாவு வரணுமா.....!
மூத்தமகன் போன்ல கதறுறான்......
அப்பனுக்கு என் கையால கொள்ளி வைக்க கூட கொடுத்து வைக்கலயே னு......
என்னங்க சொல்லுவேன் அவனுக்கு......!
'டெல்லி இங்கிட்டு தான் இருக்கு,
பாக்கணும்னு தோணுச்சுன்னா ஓடி வந்துடுவான்' னு சொல்லி அனுப்பி வச்சீங்களே......
எங்கங்க முடிஞ்சுது.....!"
-
"ஒப்பாரி வைக்கக் கூட சொந்தபந்தம் சுத்தி இல்லையே......!
உங்களுக்கு நா மட்டுமாவது ஒப்பாரி வைக்கணும்னு தான் என்ன விட்டுட்டு போனீங்களா......!"
-
அழுது அழுது தொண்டை வறண்டு, அவள் குரல் மங்கிப் போனது.
-
"இளையவ சென்னைலயிருந்து கார் புடிச்சு வந்துட்டு இருக்காளாம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா."
-
அழுகையும் புலம்பலும் சுற்றி நிற்கும்  பத்து பேரின் இதயத்தையும் கனக்கச் செய்தது. ஆம் அந்த விசாலமான வீட்டில் பத்து பேர்தான் இருந்தார்கள்.
பறையடிக்க ஒருத்தர்,
சங்கு ஊத ஒருத்தர்,
நோய் தொற்றுக்காக முகமூடி போட்டுக் கொண்டு பிணம் தூக்க, நாலு நெருங்கிய நண்பர்கள், அவர்களின் மனைவிகள்.
அதற்குமேல் கூடாது.
அரசாங்க உத்தரவு.
அவர்களையும் குறை கூற முடியாது.
வாழ்ந்து முடித்தவர்களைக் காட்டிலும் வாழ்பவர்கள் முக்கியம்.
-
"இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுங்க......!"
-
-
-
கண்ணீர் இல்லாத,
ஒப்பாரி இல்லாத சாவுகள் கொடூரமானவை.
ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் முக்கியம். கொலைகாரர்கள் ஆகாமல் தனித்து இருப்போம்.

                                      - அகல்

Comments

  1. அத்தனிமையின் திரியில் மனிதமெனும் அகல் பிரகாசிக்கட்டும்.
    வாழ்த்துக்கள் அகல்...

    ReplyDelete

Post a Comment

Popular Posts