பிரதமரின் உரை முடிந்தது!
எங்கும் பதற்றம்!
பொதுவாக ஏன்? எதற்கு?
என்ற கேள்விகள் மட்டுமே எழும்
இம்முறை எப்படி ?
என்ற கேள்வி தான் எல்லோரின் மனதிலும்!
எப்படி நாங்கள் வீட்டிலேயே இருப்பது?
இந்த கேள்வியை என்றும்
நம் அம்மாக்களின் மனதில்
எழ விட்டதில்லை!
காரணம்
அவர்கள் அதற்காகவே பிறந்தவர்கள் என்று
நாம் மட்டும் நம்பாமல்
அவர்களையும் நம்ப வைத்தது தான்!
சிலர் அத்தியவசியப் பொருட்களை
வாங்கி குவிக்க,
சிலர் என்னால் வீட்டுக்குள்ளேயே
இருக்க முடியாது என்று
வெளியில் வர,
இன்னும் சிலர் டிவி பார்த்து
வீதியில் சுற்றித் திரிபவர்களை
திட்டினார்கள்!
இனி 21 நாட்கள் நாட்கள்
பேருந்து பயணங்கள் இல்லை!
ரயில் பயணங்கள் இல்லை!
தேவையற்ற உரசல்கள் இல்லை!
என்ற நிம்மதியில் இருந்த
பெண் போல தார் ரோடுகள்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க,
சிலர் மட்டும் தங்கள் கால்களால்
உரசினார்கள்!
பல மைல்கள் உரசினார்கள்!
அவர்கள் கூலித்தொழிலுக்காக
வெளிமாநிலங்கள் வந்தவர்கள்!
அவர்கள் ஒழிந்து கொள்ள
வீடில்லை!
பொருட்களை வாங்க பணமில்லை!
சொந்த ஊருக்கு செல்ல
பஸ்ஸும் இல்லை!
இருந்ததெல்லாம் பசி மட்டுமே!
எனவே உரசினார்கள்!
வெறுப்பாகிய ரோடுகள் கேட்டது
கொரோனா பற்றிய
கவலையில்லையா? என்று
கொரோனாவை விட கொடியது
இந்த "பசி"
என்று சொல்லிக்கொண்டே மீண்டும்
உரசின கால்கள்!
அவர்களின் ஊரை நோக்கி!
-மகி
No comments:
Post a Comment