Monday, 29 August 2022

அன்பு சூழ் உலகு

வழக்கத்தை விட அதிகமாக மூச்சு வாங்குகிறது
வியர்த்துக் கொட்டுகிறது
துணைக்கு யாரவது இருந்தால் நல்லாயிருக்கும்
இந்த இருட்டில் யார் வருவார்? 

என் கேள்விக்கு பதிலாகத்
தூரத்தில் காற்றைத் துழாவிய படி 
வந்த கைகளை 
ஓடிச் சென்று பற்றிக் கொள்கிறேன்
அவருக்கு வழி காட்டுவது போல

விழியின் மொழி தெரியாத அவருக்கு
என் தொடுதல் புரிந்திருக்க வேண்டும்
இன்னும் இருக்கமாகப் பற்றிக் கொள்கிறார்
என் கைகளை

இப்படி ஒவ்வொரு முறையும்
கடவுளின் பிள்ளைகள் 
வந்துகொண்டே இருக்கிறார்கள்
சக மனிதனின் உருவத்தில்... 

                                 -மகி

Monday, 11 July 2022

ஒரு வரிக் கவிஞர்கள்

நான் உடைந்து அழும் நேரங்களில்
நான் தேடுவதெல்லாம்
ஒற்றை வரி கவிதைகள் தான்... 


"விடு! விடு! பாத்துக்கலாம்! "
"நான் இருக்கன்ல... "
போன்ற கவிதைகளோடு
அதைச் சொல்லும் கவிஞர்களும்
நமக்கென இருந்தால்
போதும் தானே... 

                                -மகி

Sunday, 3 July 2022

எப்படியும் மிஞ்சும்

எத்தனை முறை கழுவியும்
விடாமல் ஒட்டிக்கொள்ளும்
அந்த 0.01 சதவீத கிருமியைப் போல
ஆயிரம் போலி சமாதானங்கள் சொல்லியும்
விடாமல் ஒட்டிக் கொள்கிறது
இந்த குற்ற உணர்ச்சி... 

                               -மகி

Wednesday, 8 June 2022

அக்கறைக்கு நன்றி!


அக்கறைக்கும்
அதிகப் பிரசங்கித்தனத்திற்கும்
வித்தியாசம் தெரியாத நபர்கள்
வாழும் இந்த ஊரில்... 
என் வாழ்க்கையின் மீது
எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும்
அத்துமீறலுக்கும் அறையவா முடியும்? 
சிரித்தபடி சொல்கிறேன்
உங்கள் அக்கறைக்கு நன்றி! 

                                  -மகி

Sunday, 27 March 2022

அவ்வளவு தான்

'என்னை காதலிக்காதே
உடைந்துவிடுவாய்! '
என்கிறாள்... 

தீராத வெக்கையால்
வாடிவிடும்  என்று தெரிந்தும்
சூரியனை காதல் செய்ய
யோசிப்பதில்லை
சூரியகாந்தி பூ! 
அதுபோலத்தான் நானும்! 

உடைபடக்கூடியது தான் என் மனம்! 
அது உனக்காக என்பதில்
ஒரு நிம்மதி அவ்வளவுதான்... 

                               -மகி

Thursday, 24 March 2022

புதியன கழிதல்

எவரும் பழைய கோப்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றுவதில்லை! 
நானோ என் பழைய நினைவுகளிலே புதிய மாற்றங்களை அடைக்கப் பார்க்கிறேன்! 

ஒரு தொலைந்து போன கைக்கடிகாரத்தின் நிறத்திலேயே
இன்னொன்று வாங்குகிறேன்! 
பழைய தோழியின் பெயர் கொண்ட 
ஒரு பெண்ணிடம்
வலியச் சென்று பேசுகிறேன்! 

ஒரு உடைந்த போனின் உறையை எடுத்து
புதிய போனுக்கு மாட்டுகிறேன்! 
அதிலிருந்த அதே பாடல்களை 
இதிலும் ஏற்றிக்கொள்கிறேன்! 

ஆனால் அதே பாடல்கள் வேரோர் குரலில் ஒலிக்கின்றன! 
ஒரு தாலாட்டை அம்மாவிற்குப் பதில்
வேறாரோ பாடுவது போல! 

ஒவ்வொரு புதிய பொருளிலும்
இதுதான் பிரச்சனை! 
ஒரு பழையதிலிருந்த அன்யோன்யம்
புதியதில் விட்டுப்போகிறது! 

ஒரு சோர்வான நாளில் பழைய துணியுடன் நான் உறங்கிக்கொள்ளலாம்... 

ஒரு பழைய மோட்டார் சைக்கிளில்
எத்தனை முறையென்றாலும்
நான் கீழே விழுந்துகொள்ளலாம்... 

ஒரு பழைய நோட்டில், எத்தனை முறையேனும் கோவத்தில் கிறுக்கிக்கொள்ளலாம்... 
அழுது கொஞ்சம் நனைத்துக் கொள்ளலாம்... 

ஆனால் நானின்று ஒரு புதிய ஆடையை உடுத்தி இருக்கிறேன்! 
படுத்துறங்கினால் கசங்கிவிடும் என்று
நிற்கத் தெம்பில்லாமலும் நின்று கொண்டிருக்கிறேன்! 

நான் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறே!ன்
கீழே விழுந்தாலும் என் வலியை பாராமல்
வண்டியின் நெளிவைச் சரி செய்து கொள்கிறேன்! 

நான் ஒரு புதிய நோட்டை எடுத்திருக்கிறேன்! 
தலையைப் பிய்க்கும் அளவிற்கு
உள்ளுக்குள் சத்தம் கேட்டாலும்
கிறுக்கினால் அழுக்காகிவிடுமென்று! 
அதில் கோடு போட்டு அழகாக எழுதிக்கொள்கிறேன்! 

ஒவ்வொரு புதிய பொருளும்
ஓராயிரம் உணர்வுகளைப் பூட்டி வைக்கின்றது! 
இன்று ஒரிரவேனும் நான் தூங்கியாகவேண்டும்! 

நான் பெருக்கி சுத்தமாக்கிய அறையைக் 
கொஞ்சம் அழுக்காக்கிக்கொள்கிறேன்! 

மடித்து வைத்த துணிகளைக் கசக்கி
கொஞ்சம் நாற்காலி மேல் போட்டுக்கொள்கிறேன்! 
எண்ணெய் வைத்து வாரிய தலையைக் கொஞ்சம் கலைத்துக்கொள்கிறேன்! 

ஒரு வேர்வை நெடியுள்ள சட்டையை 
எடுத்து அணிந்துகொள்கிறேன்! 
அழுக்கில் போட்ட போர்வையை 
எடுத்துப் போர்த்திக்கொள்கிறேன்! 

இன்று ஒரிரவேனும் தூங்கியாகவேண்டும்! 
இந்த அழுக்கிலாவது உறங்கிக்கொள்கிறேன்! 

மேலும்
பழையதுகளின் வாசனை கொண்ட திரவியம் இருந்தால் தாருங்கள்
என் ஒவ்வொரு புது நாளின் மேலும்
கொஞ்சம் பூசிக்கொள்கிறேன்... 

                                     -இருதயா

Thursday, 17 March 2022

முதல் நீ


அரை ட்ரௌஸர், பேண்டாய் மாறிய காலம்
ஸ்கர்ட் சுடிதாராய் மாறிய நேரம் 

பல முறை சரி செய்வாள்
சரியாய் இருக்கும் 
துப்பட்டாவை..

தேனீக்களாய் மொச்சும் முகப்பருக்கள்..
அவள் முகத்தில்..

கிண்டலடித்ததால்
கன்னம் பழுத்ததண்டு
பலருக்கு..

மறைவாய் இரசித்ததுண்டு அவளை..
சொல்லத் துணிவில்லை..

அவள் கண்கள் பார்த்தால்
கழுத்து வலிக்கும்..
பனை மரத்தில் பாதி அவள்..

என் பார்வை அறிந்த அவள் 
என்னிடம் தன் காதல் சொல்லிய 
தொணியே வேறு..

கன்னத்தில் முத்தமிட்டு கை கோர்த்தாள் ஓர் நாள்..
காதலில் நான் காமம் அறிந்த
முதல் நாள்..

காலம் செல்ல செல்ல பிரிந்தோம் ..
காரணம் தெரியவில்லை
இந்நாள் வரை..

இன்று வருத்தமில்லை..
எனினும் இராஜா துணை தேவை..
என் முதல் காதல் அல்லவா?
                                     - எழில்

Saturday, 12 March 2022

அகம்


உடையாமல் யாரும் இல்லை! 
எல்லோரும் உடைந்து தான் போயிருக்கிறார்கள்... 
இரட்சகர்களுக்குக் காத்திருக்காமல்
தனக்கு தானே 
ஒட்டுப் போட்டுக் கொண்டவர்கள் மட்டும்
தப்பிப் பிழைக்கிறார்கள்
சில காலமேனும்...

                               -மகி

Saturday, 5 March 2022

அவ்வளவே

"என் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஒருநாளும்
இயலாது! 
நான் வருந்திக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள் போதும்! "
என்பதே
அவளின் அதிகபட்ச எதிர்பார்ப்பு... 

                                  -அகல்

Monday, 14 February 2022

வன்முறையாகாதா?

வரிசையில் நின்று
புளியோதரை வாங்கியவன்
தனக்குப்பின் நின்றும் வாங்க வாய்ப்பில்லாமல் போனவனிடம்
"புளியோதரை ரொம்ப ருசியா இருக்கும்" என்பதும் 

"எங்களுக்கு தெரியாதா புளியோதரை எப்படி இருக்கும்னு
.........

இப்படித்தான் இருக்கிறது சில காதலிப்பவர்களுக்கும் காதலிக்காதவர்களுக்கும்
இடையிலான உரையாடல்.


புரிந்து கொள்ளுங்கள்
காதலும், கல்யாணமும்
வென்றே தீர வேண்டிய போட்டியோ
கிடைத்தே ஆக வேண்டிய பொருளோ அல்ல

காதலிப்பதிலும் காதலிக்காமல் இருப்பதிலும் எந்தப் பெருமையும் இல்லை.

காதல் என்பது பூ ஆகவே இருக்கட்டும். எல்லா மரங்களிலும் பூ பூக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வன்முறையாகாதா?

                           -அகல்

Thursday, 27 January 2022

வெற்றுக் காகிதம்


இசை 
விளக்க முயன்று மிச்சம்
கற்பனை சொர்க்கத்தின் வாசல்... 

கனவு
விளக்க முயன்று மிச்சம்
வீண் வாயும் வெற்றியும்... 

நட்பு 
விளக்க முயன்று மிச்சம்
இணைந்த கைகள்... 

கோபம் 
விளக்க முயன்று மிச்சம்
உடைந்த மனங்கள்... 
 
காமம் 
விளக்க முயன்று மிச்சம்
இன்ப உச்சம்... 

காதல் 
விளக்க முயன்று மிச்சம் 
வெற்றுக் காகிதம்... 

                          -எழில்

Wednesday, 12 January 2022

பந்தயம் எனக்கானதல்ல


என்னை ஓடச் சொல்லாதீர்கள்! 
மூச்சிரைக்க  ஓட
நான் அவர்களைப் போல 
பந்தயக் குதிரை அல்ல! 
தலைதெறிக்க ஓடினால் தான்
நான் குதிரை என்றால்
நீங்கள் சொல்வது போல
நான் கழுதையாகவே இருந்து விடுகிறேன்! 
எனக்கு ஏற்ற சுமைகளோடு
மெதுவாக வந்து சேரத்தான் போகிறேன்! 
அன்றியும் வழியில் உள்ள
புற்களையும் பூக்களையும் ருசிக்க
யாரேனும் இருக்க வேண்டும் தானே... 

                                       -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...