Monday, 27 December 2021

குழந்தை வளர்ப்பு

தவமிருந்து பெற்ற மகனை

சீவப்பட்ட தந்தையின் கொம்புக்கு
பயந்து 
தப்பிக்க வழி அறியாமல் 
வாழும் தாய்
வேண்டுமானால் அன்பு நிறைந்ததாக வளர்க்கலாம்

ஒடுக்கப்பட்ட தாயின்
பயத்தை கண்டு
களிப்புற்று
மீசை முறுக்கும் 
தந்தை
அச்சுப் பிசகாமல் 
ஆதிக்க கொம்பை சீவி விடத்தான் செய்வார்... 

                              -அகல்

Sunday, 31 October 2021

கொலையாளி ஆகாமல் தப்பித்தவன்

நல்லவேளையாக கைகளுக்கு இடையில்
கைபேசி சிக்கியது! 


சுக்குநூறாய் கிடக்கும் கைபேசியை கண்டும்
அற்பமனம் ஆறுதல் அடைகிறது! 
கத்தியாக இருந்து கம்பிஎண்ணாமல் போனதை எண்ணி... 
                             -அகல்

Thursday, 16 September 2021

அன்பின் மலர்


மன்னிக்கவும்! 
என்னை இரக்கம் இல்லாதவன்
என்று கூப்பிடும் முன்
இதை நினைவில் கொள்ளுங்கள்! 
உங்களிடம் அன்பின் மலரை நீட்டவோ
புன்னகை பூக்கவோ
என்னிடம் அன்பு கையிருப்பில்
இல்லை! 
என்னிடம் அன்பைக் கடன் வாங்கியவர்களும், 
களவாடியவர்களும், 
அதைத் திருப்பி தருவதில் 
தயக்கம் காட்டுகிறார்கள்! 
அதனால் என்னிடம் எதையும் எதிர்ப்பாக்காதீர்கள்!
உங்களை பார்த்தவுடன்
என் முகம் மலரவில்லை   எனில்
நினைத்துக் கொள்ளுங்கள்
இன்று இந்த செடிக்கு
யாரும் அன்பை ஊற்றவில்லை என்று... 

                                      - மகி

Tuesday, 13 July 2021

பாவப்பட்ட கடவுளுக்கு...

பாவப்பட்ட கடவுளுக்கு...

படைத்தவன் நீர் என்ற ஊரார் பிதற்றலை 
ஒரு பேச்சுக்கு ஏற்று என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.
உன் படைப்புகளின் பிழைகளை அடிக்கோடிடும்
உம் படைப்புகளுள் ஒருத்தி நான்.
சௌகரியமாய் சாதி செய்து
அது வழியில் 
அடக்குதலையும் ஒடுக்குதலையும்
உன்பெயர் சொல்லியே நிகழ்த்துகிறார்கள் நீ படைத்த மனிதர்கள்.
உன்னிருப்பு உண்மையானால் வந்து சொல்லிவிடு "இதற்கும் உனக்கும் பங்கு இல்லை என்று"
இல்லையெனில்
சாதியை மட்டுமல்ல உன்னையும் சேர்த்து ஒழிக்கப் போராடுவேன்.

இப்படிக்குக்
கருஞ்சட்டை கிழவன் விதைத்த விதை அன்றி வேறு யார்?

                                -அகல்

Friday, 4 June 2021

ஜனநாயகம்

பெருந்தொற்றுக்கு ஆளாகி 
அப்பன் செத்தான்
சவம் வீடு வரவில்லை
அம்மா காரியின் கண்ணீரில் வீடு நனைந்தது
தேற்ற வழியில்லை

யார் குண்டி குளிர நடத்துகிறார்கள் 
ஆன்லைன் வகுப்புகளையும் பரிட்சைகளையும்
எதை சொல்லி நியாயப் படுத்துவார்கள்
"ஏனைய அறுபத்தொன்பது மாணவர்கள் வீட்டில் சாவு இல்லை என்றா?"

என் அப்பன் செத்ததால்
இது என் தனிப்பட்ட பிரச்சனையோ?
அப்போ என்ன மயித்துக்கு
பெரும் தொற்று என்று கூவுகிறார்கள்?

தனி அறை தனி இருக்கை கொண்டு
ஆன்லைனில் பேசும் அவனுக்கு
இந்தப் பக்கத்து ஓலங்கள் கேட்கப்போவதில்லை
கேட்டாலும் கண்டுகொள்ளப் போவதில்லை

வாழ்க ஜனநாயகம்!
வளர்க பாரதம்!

                        

Thursday, 27 May 2021

முறிவின் கதை

நாளை முதல் ஊரடங்கு என்றார்கள்
இன்றிரவே ஒரு கடைசி சுதந்திரகாற்றை சுவசித்துவிட்டு வந்துவிட்டேன்!

நாளை முதல் கடைகள் மூடப்படும் என்றார்கள்
இன்றிரவே போய் ஒரு கடையில் பாதியை 
வாங்கி வந்துவிட்டேன்!

புயலினால் நாளை மின்தடைபடும் என்றார்கள்
இன்றிரவே செல்போனை மின்னூட்டி
மெழுகுவர்த்திகள் தேடியெடுத்து வைத்துக்கொண்டேன் !

நம் அரசர் நம்மைக் காக்க
நாளை முதல் முகநூலும் ட்விட்டரும்
முடக்குகிறார் என்றார்கள்
உலகெங்கும் உண்மைகள் பரவுவதால்
நம் இறையாண்மைக்கு ஆபத்து என்றார்கள்
இணையத்தைக் கூட முடக்கிவிடலாம் என்றார்கள்!


நான் அவசரமாக
எனக்குப் பிடித்த பாடல் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்
ஒரு இறுதி மீம் மை கண்டு சிரித்து கொள்கிறேன்
ஒரு இறுதி ட்வீட்டை எழுதி அதை பகிர்ந்துகொள்கிறேன்
கிடப்பில் கிடந்த எழுநூறு நட்பழைப்புகளையும்
பெயர் கூட வாசிக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்
இறுதியாக
நீ பதிவிட்ட கவிதை ஒன்றை 
எழுதி எடுத்துக்கொள்கிறேன்
நீ எனக்களித்த புகைப்படம் ஒன்றையும் சேமித்து வைத்துக்கொள்கிறேன்!

நாளை முதல் நீ இதை இழக்கப்போகிறாய்
என்று இன்றே சொல்லிவிடுவது
பிரிவை எவ்வளவு சுலபமாக்குகிறது
உன்னை இழக்கும் முன்பும்
ஒரு அறிவிப்பு விட்டிருக்கலாம்
முடிந்தால் ஒரு முந்நூறு பிரதியேனும் எடுத்து விட்டுக் கொடுத்திருப்பேன்...

                                  -இருதயா

Monday, 17 May 2021

சொல்லித்தான் ஆக வேண்டும்!


"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று
ஒரு பெரிய மலையிடமோ,
பரந்து விரிந்த கடலிடமோ,
ஓடும் நதியிடமோ,
ஒளிரும் நிலவிடமோ,
தினமும் நான் கத்திக்கொண்டிருக்கிறேன்!
என்றாவது ஒரு நாள் 
அவை எனக்குச் செவிசாய்க்கும்
என்பதற்காக அல்ல!
நான் காதலிக்கிறேன்!
அதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்!
அந்த நிலவைப் போலத் தான்
அவளும் எனக்கு!
நான் அவளை காதலிக்கிறேன்
அதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்!
யார் என்ன சொன்னாலும்
நான் காதலிப்பதை
சொல்லித்தான் ஆக வேண்டும்!

                                  -மகி

Friday, 23 April 2021

இதுவும் அரசியல்


நான் சுரண்டப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது இல்லை. 
அவர்கள் என்னைச் சுரண்டுகிறார்கள். எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் சுரண்டுகிறார்கள்.


சுரண்டலின் நியாயமாக அவர்கள் எண்ணிக் கொள்வது எதை?

உலகம் அறிவது என்னால் முடியாதாம், எனக்கான முடிவுகளை அவர்களே எடுத்துவிடுகிறார்கள், அந்த முடிவுகள் மட்டுமே சரியாம். அதற்கான கூலிதான் இந்த சுரண்டலோ?

என்னை என்னால் காத்துக் கொள்ள முடியாதாம், எனக்கான பாதுகாப்பை நிர்ணயிப்பது அவர்கள்தானாம், எனக்கான பாதுகாவலர்களாக வலம் வந்து உதவுகிறார்களாம்.
அதற்கான நன்றிதான் இந்த சுரண்டலோ?

இப்படி இந்த சுரண்டலின் நியாயமாக அவர்கள் எண்ணிக் கொள்வது எதை?

சுரண்டுகிறோம் என்ற குற்ற உணர்வு ஒரு போதும் அவர்களுக்கு வரப்போவதில்லை என்று எண்ணினேன். 

அந்த குற்ற உணர்வு வந்தால் மட்டும் அவர்கள் என்ன செய்து விடுவார்கள்?

அவர்களால் சுரண்டப்படுவதில் ஒரு நிம்மதி இருப்பதாக என்னை ஏமாற்றிக் கொண்டு நகர்கிறேன்.


அவன் தன் முதல் மாத வருவாயில் எனக்குப் பரிசளித்தான். 
அவர்கள் பாசமிகு மகன் என்றார்கள்.
எந்த பதிலும் சொல்லாமல் புன்னகைத்தேன்.
சொல்லப்போனால் மெய் சிலிர்த்தேன், கண்ணீர் வடித்தேன்.

அவன் உணர்ந்து விட்டான்!
தான் சுரண்டுகிறோம் என்பதை உணர்ந்து விட்டான்...

தான் சுரண்டுகிறோம் என்ற குற்ற உணர்வை போக்கிக்கொள்ள முடியாததின் இயலாமையை மறைக்கவே இந்த பரிசு என்பது எனக்கு  புரிந்ததாலேயே மெய்சிலிர்த்தேன்
கண்ணீர் வடித்தேன்.

                          -அகல்

Wednesday, 14 April 2021

The Master Piece

அவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்!
அவர்கள் ஒருதலைக் காதலர்களோ,
பரீட்சையில் தோற்றவர்களோ,
வாழப் பிடிக்காதவர்களோ அல்ல!
அவர்கள் எல்லோரும்
எழுத்தாளர்கள்!
கவிஞர்கள்!
கதாசிரியர்கள்!
அதற்குச் சான்று
அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற
தற்கொலை கடிதமே!
                                -மகி

Sunday, 28 March 2021

அதன் நிமித்தமும்!


தீண்டத் தீண்ட சுடும் விரல்
தேகம் எங்கும் அவள் நிழல்
காதல் மொழியில் 
காற்றில் கலக்கும்
அவள் குரல்...

இமைகள் நான்கும் 
தாளம் போட
இதழ்கள் மூடி 
இசையைத் தேட
மௌனப் பெருமூச்சு
பேரிசையானது...

இச்சைப் பெருங்கடல்
மோகப் பேரலை 
கரை சேர விரும்பவில்லை
மூழ்கித் தவித்தோம் 
திளைத்தோம்...
                           -எழில்

Monday, 8 March 2021

புவியினை சூரியன் கட்டித்தழுவ விரும்பும்

அன்பின் புத்தகம்!
மரணத்தின் புத்தகம்!
இரண்டையும் ஒரு சேர
வாங்கும் போது
புத்தகக் கடைக்காரர் கேட்டார்
காதலையும் மரணத்தையும்
ஏன் சம்பந்தப்படுத்துகிறாய் என்று!
எனக்கு வாய்க்காததைத் தான் 
நான் வாங்க ஆசைப்படுவேன்
அல்லவா!
                          -மகி


Saturday, 6 March 2021

கடந்து போதல்


கடந்து போவதைப் பற்றி
என் நண்பர்கள் எனக்குப்
பாடம் எடுப்பது வழக்கம்!
அவளும் தான்!
இன்று ஒரு அடி முன்னேறி
என்னைப் பார்த்தும் பார்க்காதது போல
கடந்து செல்கிறாள்!
நான் யாரோ போல!
நானாவது போய் பேசியிருக்கலாமே
என்று என்னைக் கேட்காதீர்கள்!
நான் யாரோ போல
கடந்து சென்ற அவள்
நான் யார் என்று கேட்டுவிட்டால்
நான் நானாக இருப்பேனா?
நான் தான் இருப்பேனா?

                                     -மகி

Saturday, 20 February 2021

விடியலுக்காக


எல்லோரும் காத்திருக்கிறார்கள்
என் முடிவிற்காக...
நீண்ட நேரம் எழுதியும்
முடிவு பெறாத
தற்கொலை கடிதம்...
அதை முற்றுப் புள்ளி வைத்து
முடிக்கத் துடிக்கும்
கண்களின் ஓரம்
எட்டிப் பார்க்கும் கண்ணீர்...
வலியின் கடைசி தவணையை கொடுத்து
குரல்வளையை அனைக்கத்
தொங்கும் கயிறு...
"சரியான கோழை! 
அப்படி என்னப்பா துக்கம்?
தூக்குல தொங்கர அளவுக்கு!"
என பேசப் போகும் வாய்கள்...
இப்படி
எல்லோரும் காத்திருக்கிறார்கள்
என் முடிவிற்காக...
நானும் காத்திருக்கிறேன்!
முடிவிற்காக தான்...
இந்த இருளின் முடிவிற்காக...
விடியலை எதிர்நோக்கி...

                                    -மகி

Monday, 15 February 2021

மீண்டும் மலர்வதுண்டு


அவனை மறக்க இயலாது என்றேன்...
தேவை இல்லை!
முடிந்தால் எனக்கும் ஓர் இடம் கொடு என்றான்...

அவன் இவ்வுலகில் இல்லை...
இவன் இனி என்னுள்ளில்...
                              -எழில்

Wednesday, 10 February 2021

எனைக் காதல் செய்...


எனைக் காதல் செய்...

நரை விஞ்சிய பின்னும் 
தலையை கோதும்
காதலன் வேண்டுமெனில்
எனைக் காதல் செய்...

காமம் தணிந்த பின்
காதுமடல் முத்தம் இடும்
காதலன் வேண்டுமெனில்
எனைக் காதல் செய்...

நாம் கருதரித்து உள்ளோம்
எனக் கூறும் காதலன் வேண்டுமெனில்
எனைக் காதல் செய்...

உன் ஏற்றப் பாதையில்
தடையாய் நில்லாது
படியாய் நிற்கும்
காதலன் வேண்டுமெனில்
எனைக் காதல் செய்...

உத்தரவிடவில்லை
விண்ணப்பமும் இல்லை
என்னை உன் முன் வைக்கிறேன்
முடிவை நீயே சொல்!
                                 -எழில்

Wednesday, 3 February 2021

காதல்?

காதல்!
காலம் காலமாய் நீளும் 
பெரும் உணர்வு...

மனதின் நிர்வாணத்தை ரசிப்பதிலும், சகிப்பதிலும், ஏற்றுக் கொள்ளப்படுவதிலும் தான் பரிணமிக்கிறதோ?
                              -அகல்

Friday, 29 January 2021

பிரார்த்தனை

புயலில் விழுந்த மரத்திற்கு
இழப்பீடு என்றார்கள்!
என் வீட்டு மரமோ
கிளை அனைத்தும் முறிந்து
வேர் மட்டும் சாயாமல்
இன்றும் இங்கு
நின்றுகொண்டிருக்கிறது!

கிழிந்த ஆடை அணிந்தோர்க்குப்
புத்தாடை என்றார்கள்!
நான் அணிந்த ஆடையோ
பலமுறை கிழிந்த பின்னும்
அங்கங்கே ஒட்டு போட்டு
இன்று மட்டும் கிழியாததாய்
காட்டிக்கொள்கிறது!

இறந்து போனவர்களுக்கு
நீதி வேண்டும் என்றார்கள்!
நானோ சாவின் விளிம்புவரை சென்று
திரும்பி வந்திருக்கிறேன்
என்னை, "வரிசையில் நில்
இறந்து விட்டவர்களுக்கே
முன்னுரிமை" என்கிறார்கள்!

மனம் நொறுங்கி போனவர்க்கு
ஒரு தழுவல் இலவசம் என்றார்கள்
என் மனமோ, கீறல் பல விழுந்து
நொறுங்கிப் போக 
நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது
"எங்களிடம் தழுவல்கள் குறைவாக இருக்கின்றன
மனம் நொறுங்கி விட்ட பின் வா,
நாம் தழுவிக் கொள்ளலாம்" என்கிறார்கள்!

உடைந்து போனதற்காகக் கிடைக்கும் சலுகை,
உடையாமலிருப்பதற்காகக் கிடைப்பதில்லை!
உங்கள் சலுகைகளுக்காகவே
சீக்கிரம் உடைந்து விட
பிரார்த்திக்கிறேன் !

                                   -இருதயா

Monday, 11 January 2021

தனிப்படல் மிகுதி - II

யாரும் அனுப்பாத
கடிதங்களுக்காக
காத்திருக்கிறோம்...
நானும்,
என் வீட்டு 
தபால் பெட்டியும்!
                         -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...