Wednesday, 5 December 2018

அவன்

அவன் கண்களில் என்ன?
த(க)ண்ணீரோ?
அவன் அழுகிறானா?
அப்படி இருக்கக் கூடாதே!
ஒருவேளை தூசியாக இருக்குமா?
அப்படித்தான் இருக்க வேண்டும்!

பாவம்!
அவனை விட்டு விடுங்கள்!
அடக்கி வைத்த அழுகையை
அவன் அவிழ்த்து விடட்டும்!
இமைகளுக்குள் புதைத்த கண்ணீரை
இனியாவது கன்னங்கள் காணட்டும்!
விம்மி வரும் அழுகையை
விழுங்க முடியாமல் விக்கிய
அவன் குரல்வளைகளின் வலி
இன்றோடு போகட்டும்!
உணர்ச்சியற்ற உயிர் பிண்டமாய்
அவன் வாழ்ந்தது போதும்!
பாவம்!
அவனை விட்டுவிடுங்கள்!

                                   -மகி

Sunday, 18 November 2018

கனவுகளை சுமந்த மனம் அது!
தொலைதூரக் கனவென்று நினைத்தது
இன்று தொடுவானக் கனவாக ஆனது!
கண்ட கனவெல்லாம்
கானல் நீராக மாற
கனத்த இதயம் மட்டும்
துடித்துக் கொண்டே இருக்கிறது
தீரா வலியில்!

                             -மகி

Monday, 5 November 2018

சிட்டுக்குருவி

ஒவ்வொரு தீபாவளியையும்  மீண்டும் ஒரு உலகப்போர் என்று எண்ணி 
பதுங்கு குழிகள் தேடும் ஜீவன்களுள் இவைகளும் அடங்கும் 


தீபாவளி நல்வாழ்த்துகள்

                                                                                                               -அகல்

Wednesday, 24 October 2018

யார் இவர்கள்?

யார் இவர்கள்?
எங்களை காட்சிப்பொருளாக்கி
பிழைப்பு நடத்தும்
யார் இவர்கள்?
அதை காசு கொடுத்து
பார்க்க வரும்
யார் இவர்கள்?
காடுகள் சூழ
வாழ்ந்த எங்களை
கம்பிகளுக்கு நடுவே
பார்க்க விரும்பும்
யார் இவர்கள்?
ஒருவேளை எங்களை
அழிவிலிருந்து மீட்க
வந்தவர்களோ?
அழிப்பதே இவர்கள்தானே!
இவர்களின் ஒருபொழுதிற்க்காக
எங்கள் பொழுதெல்லாம்
களவாண்டு விட்டார்கள்!
எங்களைப் போல்
வேட்டையாடும் மிருகங்களை விட
இவர்களைப் போல்
வேடிக்கை பார்க்கும் மிருகங்களே
அதிகம்!

                          ‌         -மகி

Thursday, 6 September 2018

காட்சிகள் கரைந்தோட
அவள் மட்டும்
அவன் கருவிழியில்
உறைந்து விட்டாள்!
புரண்டு புரண்டு
படுத்தான் வரவில்லை!
புருவம் நெறித்து
படுத்தான் வரவில்லை!
வராத தூக்கத்தை
வம்பாய் அழைக்கிறான்
வருவதெல்லாம் அவள் முகம் மட்டுமே!

                            -மகி

Wednesday, 5 September 2018

உருளைக்குடி, ஊத்தக்குடி, மன்னார்குடி, புளியங்குடி இப்படியான பல குடிகளுள்
ஏதொ ஒரு குடியில் பிறந்து  வளர்ந்த software engineer மனோ என்கிற முனியாண்டிக்கு போன்கால்

"டேய்ய்............ முனியாண்டி?"
"யாரு....?"
"நான் தான் டா, இராமசாமி....பள்ளிக்கூடத்தில ஒன்னா படிச்சோமே?"

"ஆஹ்ன்........நியாபகம் இருக்கு..எப்படி இருக்க.....ஆமா.....இந்த நம்பர் எப்படி கிடச்சது ?.....என்ன....திடீர்னு போன்பன்னி இருக்க??????

கேள்விகளில் புதைந்து இருக்கும் ஆழமான பதில்களை எண்ணிக்கொண்ட இராமசாமி சொல்ல வந்த செய்தியை தோழமையுடன் விரைந்து சொன்னான்

" இல்ல டா......நம்ம மேரி டீச்சர் நாபகம் இருக்கா......"
" அஹ்ன்...நமக்கு alphabet சொல்லி கொடுத்தாங்களே...."

நியாபகம் இல்லை  என்று சொல்லி இருந்தால் இராமசாமியின் கோபம் வெளிப்பட்டு இருக்கும்

" ஆமா....ரெண்டாங் கிலாசுல எ பி சி டி  சொல்லிக் கொடுதங்கல... அவங்க தவறிட்டாங்க...........அவங்க ஈம காரியத்துக்கு வருவியா........."

நீண்ட மௌனத்திற்க்கு பிறகு "ம்ம்...வர பாக்குரென் டா"....

போன்கால்  துண்டிக்கப்பட்டதும் தன்னுள் தொலைந்த ரசனைகள் மீண்டும்  துளிர் விடக் கண்டான்........ மேரி டீச்சருடன் கடந்து சென்ற பள்ளி பருவ நினைவுகளை அடுத்தடுத்த slideகளாக ஓட்டிப்பார்த்தான்....... கடையில் பஞ்சுமிட்டாய் திருடி மேரி டீச்சரிடம் பிடிபட்டதும் ஓ...என்று ஒப்பாரி வைக்கும்போது  "அம்மாகிட்ட சொல்ல மாட்டேன், பயப்படாத.." என்ற அவளின் இனிய குரல் மனோ என்ற முனியாண்டிக்கு நெருக்கமான குரல், அப்பொழுதெல்லாம் மேரி டீச்சர்க்கு குடும்பத்தினரை காட்டிலும் மிக நெருக்கமானவர்கள்  மாணவர்களே, விலைமதிப்பற்ற பாசம் மேரி டீச்சர்க்கும் மாணவர்களுக்கும் இடையே விளைந்து கிடந்தது.....

மனோ என்கின்ற முனியாண்டிக்கு மீண்டும் ஒரு போன்கால்

" சொல்லு சுஜி"
" அஹ..மனோ நம்ம பையனுக்கு Tution வேனும்னு சொல்லி இருந்தேன்ல
மடிப்பாக்கம் பக்கத்துல பாத்து இருக்கேன் அட்ரஸ் வாட்ஸ அப்ல செண்ட் பண்ணி இருகேன் பருங்க.... நல்லா தான் இருக்கு பீஸ் கட்டிட்டேன் ஓகேவா மனோ"
"ம்ம்"
"சரி..பிசிய இருப்பிங்க.... I'call you later...bye...."

"BE THE CHANGE
Tutions for: pre-kg to III rd std
Senthamilnagar,
Madipakkam,chennai
For contact: 925******89"
என்ற புலனத்தில் பகிர்ந்த செயிதியைக்கண்டு கண் மூடி இந்த வணிக உலகில் தன் மகனுக்கான மேரி டீச்சர் யாராக இருக்க முடியும் என்று யோசித்தான் மனோ என்கின்ற முனியாண்டி...................

                                  -அகல்

Saturday, 1 September 2018

இரவு வீட்டுக்கு வந்தவுடன், அப்பாவிடம் தோசை சுட்டு கொடுத்துக் கொண்டே அம்மாவின் அன்றைய complaint "அந்த பையன் சும்மாவே இருக்கறது இல்ல......எப்பவும் அவள அடுச்சுகிட்டே இருக்கான்"

இறுமாப்பாக மீசையில் ஒட்டிக் கொண்டு இருந்த சட்டினியை துடைத்த பின் அப்பாவின் குரல் "என்ன..அண்ணா அடிச்சானா.."

"இல்லப்பா விளையாடிட்டு இருந்தோம்" என்ற ஆசை மகளின் இனிய குரலை காதில் வாங்கிக் கொண்டே புன்முறுவலுடன் அடுத்த தோசை சுட்டாள் அம்மா...

                                    -அகல்

Wednesday, 8 August 2018

எத்தனை போராட்டம்!
கல்லக்குடி முதல்
கல்லறை வரை
உன் போராட்டம் மட்டும் தொடர்கிறது!
ஓய்வறியா உதய சூரியனே!
இதோ நீ கேட்ட
அண்ணாவின் நிழல்!
சற்றே இளைப்பாறு!

                              -மகி

Tuesday, 7 August 2018

இருள் மீளா இரவு

கட்டுமரமே...
கண்ணீரில் மிதக்கும்
உன் தொண்டர்களுக்கு
எப்படிச் சொல்வேன்
அவர்களை கரைசேர்க்க
நீ வர மாட்டாயென்று!

உனக்கான முடிவை
வெறும் விடுமுறையாக
பார்த்த வன்முறையாளர்களில்
நானும் ஒருவன்!

நான் உன் அரசியல்
தொண்டன் இல்லை!
ஆனால் நிச்சயம் சொல்வேன்
உன் காந்தத் தமிழின்
ரசிகன் என்று!

மூச்சுள்ள வரை அண்ணா
மனதில் இடம் கேட்டாய்!
முக்தியான பின்னும் அண்ணா
அருகில் இடம் கேட்கிறாய்!
உன் பற்றை என் சொல்வேன்?

சூரியன் கடலில் தானே மறையும்!
கரையில் என்ன வேலை?
என்று மெரினாவை
அவர்கள் தர மறுத்தார்களோ?
எது என்னவென்றாலும்
எங்கள் இரவு விடியாது
என்பது மட்டும் உண்மை!

                              -மகி

Sunday, 29 July 2018

கிழவா
நீ பேசி பல நாட்கள் ஆகிவிட்டது
ஆனால் சில நாட்களாக
உன்னைப் பற்றியே பேசுகிறோம்!

உன் தளுதளுத்த குரலில்
"தமிழர்களே தமிழர்களே" என்றழைக்க
நீ வர மாட்டாயா?

உன்னை வசைபாடிய வாய்தான்
இன்று
உன் வாஞ்சையான
வாய்மொழியை கேட்க துடிக்கிறது!

நீயோ கருப்பு சட்டைக்காரன்!
உன்னை காக்க பராசக்தி
வரமாட்டாள்!
இருந்தும் பராசக்தியை
மறவாமல் எழுதினாய்!

இரண்டு இலைகளும்
விழுந்து விட்டதே
இனி எதற்கு சூரியன்
என்று நினைத்து மறைந்துவிடாதே!

அம்மாவும் இல்லை
அய்யன் நீயும்
இனி இல்லையென்றால்
நாங்கள் என் செய்வோம்?

திராவிடம் ஆண்ட மண்ணில்
காவிகளின் கரை படிய
நீ வழி வகுக்காமல்
கண்கள் விழித்து வா!

தமிழ்நாட்டை காக்க
வரா விட்டாலும்
உன் தமிழைக் காக்க
பிழைத்து வா!
                             - மகி

Tuesday, 17 July 2018

அன்புள்ள மகளுக்கு...

என் கருவில் கலந்தவளே
உன்னை சுமப்பவளின்
பிதற்றல் இது!
செல்ல மகளே
உன் சின்ன உதைகளை
கொஞ்சம் சேமித்துக்கொள்!
இந்த உலகில்
நிறைய தேவைப்படும்!
இது சுதந்திர நாடு
ஆனால் உனக்கு இல்லை!
நான் உனக்கு
ஒரு பெயர் தான் வைப்பேன்
ஊரார் உன்னை
பல பெயர்களில் அழைப்பர்!
கோபத்தை‌ மென்று தின்றுவிடாதே
காரி உமிழ்ந்து விடு!
பெரியாரின் சிலைக்கு நேர்ந்தது
நாளை உன் சீலைக்கும் நேரலாம்
மறந்து விடாதே!
கோயில் கருவறையிலும்
நீ கருவறுக்கப்படலாம்
உன்னை காக்க வேண்டிய சட்டம்
அந்த கடவுளைப் போல்
கல்லாய் நிற்கும்!
இத்தனை கேட்டும்
என் கருவிலிருந்து
வெளி வர துடிக்கிறாயே
பாரதி கண்ட
புதுமைப்பெண் நீ தானோ?

                              -மகி

Wednesday, 11 July 2018

வேடிக்கை பார்ப்பவன்

மழையே நீ மறைந்து விடு!
கட்டியணைக்க வேண்டிய உன்னை
கம்பிகளின் வழியே
வேடிக்கை பார்ப்பவன் நான்!
உன் சின்ன முத்துக்களுக்கு
முகங்கொடுக்க நேரமில்லை
முடிந்தால் ஸ்டேட்டஸ் போடுகிறேன்!
நீ தர வேண்டிய
மண் வாசனை மட்டும்
பாக்கி இருக்கிறது!
அது சரி!
மலட்டு நிலத்திற்கேது மண்வாசனை?
இத்தனை பேசும் என்னை
யாரென்று மட்டும் கேட்காதே!
நான்
நகரவாசியாவும் இருக்கலாம்
நரகவாசியாவும் இருக்கலாம்!

                                         -மகி

Saturday, 30 June 2018

ஊழல்  பணத்தில் உல்லாசமாய்
உழன்று கொண்டிருக்கும் உத்தமர்களே
உடையின்றி உச்சி வெயிலில் பாடுபடும்
உழவனின் அருமை
உங்களுக்கு எப்படித் தெரியும்?

உரிமைகளையும் உடைமைகளையும்
மீட்டுத்தாருங்கள் என்றால்
தேசதுரோகி என்றீர்,
பொறுக்கி என்றீர்,
இப்போது சமூகவிரோதி என்கிறீர்!

பசுமையை அழிப்பதற்கு பெயர்
பசுமை வழிச் சாலையாம்!
நாங்கள் விருந்து சாப்பிட
முடியவில்லையே என்று அழவில்லை
உங்களுக்கு விருந்தோம்ப
முடியவில்லை என்றே அழுகிறோம்!

வெளிநாட்டில் கொன்றார்கள்
காரணம் இந்தியன்!
பக்கத்து நாட்டில் கொன்றார்கள்
இல்லை இன்னும் கொல்கிறார்கள்
காரணம் தமிழன்!
தற்போது சொந்த மண்ணிலும்
கொல்கிறார்கள்!
பாவம்!
யார் கண்களுக்கும் நாங்கள் மனிதராக
தோன்றவில்லை போலும்!

எங்களை அடக்கி ஆள
நீங்கள் வீரரும் அல்ல
நாங்கள் கோழைகளும் அல்ல!
உம்மை தட்டிக்கேட்க
பகத்சிங்கும் பாரதியுமே வேண்டுமா?
எம்மைப் போன்றோர் போதாதா?

                                        -மகி

Tuesday, 22 May 2018

'போய்ட்டு வாறன்'
என்றே வந்தார்கள்!
அடுத்த முறை சொல்ல
உயிரோடு  இருக்கமாட்டோம்
என்பது தெரியாமலே!

சாரைசாரையாய் வந்தார்கள்!
தங்கள் சாவிற்கு
சங்குகள் முழங்க
தயாராக இருக்கிறது
என்பது தெரியாமலே!

சுட்டெரிக்கும் சூரியனை
பொருட்படுத்தாமல் வந்தார்கள்!
தாங்கள் சுட்டுக்
கொல்லப்படுவோம்
என்பது தெரியாமலே!

வீரநடை போட்டு வந்தார்கள்!
தங்களை வீழ்த்த
குள்ள நரிகள் காத்திருக்கும்
என்பது தெரியாமலே!

உயிரையும் தியாகம்
செய்ய துணிந்தார்கள்!
ஈழத்தை போல தாமும்
வஞ்சிக்கப்படுவோம்
என்பது தெரியாமலே!

இறுதியில் உயிரையும்
விட்டார்கள்!
நீதிக்கு பதிலாக நிதியைத்
தரப் போகிறார்கள்
என்பது தெரியாமலே!!!

                                 -மகி

Sunday, 29 April 2018

காதலித்தால் தான்
காதல் கவிதை வருமாம்
என் காதலன் யாரென
தேடினேன்!

துன்பத்திலும் பயத்திலும்
என் கரம்பற்றி நடந்தவன்
ஒருநாளில் ஒருமுறையேனும்
அவன் முகத்தில் விழிக்காமல்
இருந்ததில்லை!

நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால்
துடிப்பது என் இதயமா
அவன் இதயமா
தெரியவில்லை!

மூன்று மணி நண்பர்கள் என்பார்கள்,
மூன்று மணிக்கு
மனம் குழம்பி, இமை கனத்து
உறக்கமும் வேடிக்கை காட்ட
அவனை நினைக்கும்போது
நான் இருக்கிறேன் என்பான் -
மூன்று முறை மணியடித்து !

ஆம்! கடிகாரத்தின் காதலி நான்!
                  
                                      - இருதயா

Saturday, 14 April 2018

ஆஸிஃபா

கைத்தடிக்கும் கண்ணாடிக்கும்
பயந்து நடுங்கிய காவிகள்
இன்று கோயில் கருவறையில்
கருவறுத்துவிட்டார்கள்!
மதியிழந்த மதவாதிகள்
முழுமதியை சிதைத்துவிட்டார்கள்!
ரத்தவெறி பிடித்த உங்களுக்கு
சிறு ரத்தம் கசிந்தால் மட்டும் தீட்டா?
பாஞ்சாலியை காத்த கண்ணன்
ஆஸிஃபாவை வஞ்சித்தது ஏன்?
அதற்கும் மதம்தானா காரணம்?

                                            - மகி

Friday, 13 April 2018

நாடெங்கும் ipl பற்றிய
விவாதம் அரங்கேற
நாங்கள் மட்டும் கேட்க நாதியின்றி
நீதி கேட்டு தெருவில் நிற்கிறோம்!
மூச்சுக்கு முந்நூறு முறை
விவசாயம் தான் எங்கள்
மூச்சு என்று சொல்லிக்கொண்டே
எங்கள் மூச்சையும் சேர்த்து
சுவாசித்துவிடுகிறீர்!
பண்ணப் பழகடா பச்சை படுகொலையும்
என்றதால் தானோ
பட்டினிக்கொலைகளை அரங்கேற்றுகிறீர்!
நாட்டை காக்க நாங்கள்
துளிர்விட்டு எழுந்தால்
துண்டு துண்டாக
வெட்ட நினைக்கிறீர்!
ஆலமரமாக நாங்கள் இருப்பதால் தானே வெட்டுகிறீர்!
உம்மை போல் சீமைக்கருவேலமரமாக
இருந்திருந்தால் வேடிக்கை
பார்த்திருப்பீர்கள் அல்லவா???

                                       - மகி

Saturday, 24 March 2018

என் முத்தானவளே

சிப்பிக்குள் முத்தைப் போல்
என்னுள் நிறைந்தவளே
தினமும் உன்னை
மறக்க முயல்கிறேன்
அதில் முயலை முந்தி
நிதமும் தோற்கிறேன்
மணக்கத்தான் முடியவில்லை
என்றால்,
உன்னை மறக்கவும்
முடியவில்லையே !

                                      - மகி

Sunday, 18 March 2018

உளியின் விரல்கள்

நானே மறந்து விட்டேன்
எனக்கும் விரல்கள் உண்டு என்று
என்னை விரலாய் நினைத்த நீ
என் விரல் மட்டும் அறிவாயா என்ன ?

நீ சொல்வதை நான் செய்தேன்
நீ சொல்வதை மட்டுமே நான் செய்தேன்
என் விரல்களை கட்டிப் போட்டு
பொம்மலாட்டம் தான் காட்டினாய்!

மனமில்லா மணப்பெண் போல்
நான்!
உன் விரல் கோர்க்க
மனமில்லை எனக்கு,
அக்னியை சுற்றுவது போல்
கல்லை சுற்றி வருகிறேன்
என்ன...
அது சாமியின் முன்
இது 'சாமிக்கு முன்'!

சாமி சிலை செய் என்றாய்
விதவிதமாய் செய்தேன்
உன் திறமையைக் காட்ட!
அதை வைத்தே அடித்துக் கொண்டார்கள்
அடித்தும் கொன்றார்கள்!

இனியாவது திருந்துவாயா என்றால்,
கொன்றவனை செதுக்க சொன்னாய்
கொல்லப்பட்டவனையும் வடிக்கச் சொன்னாய்!

அதையும் செய்தேன்
விரலில்லாமலும்
மனமில்லாமலும்!

வலி தாங்கும் கற்கள்
சிலையாகும் என்றார்கள்
வலி தாங்கும் உளிக்கு
என்ன பயன்...?

என்னையும் வருத்தி
கல்லையும் வருத்தி
வெறும் காகங்கள்
அபிஷேகம் செய்வதற்கு
கல்லாக இருந்தவனைக் கொன்று
சிலையாக்க வேண்டுமா?

என்னை விட்டு விடுங்கள்
இனியாவது
கல்லை கல்லாய் வாழவிடுங்கள்!

                             -இருதயா

Thursday, 1 March 2018

உயிரே

என் உயிரே!
நான் உன்னை நெஞ்சில் சுமக்க
நீயோ என்னையும் என் உயிரையும்
நெஞ்சிலும்  வயிற்றிலும் சுமந்தாய்!
என் உயிர்க்கு உயிர் கொடுக்க
உன் உயிரை தந்துவிட்டாய்
பிறந்தது என் உயிர் என்றாலும்
உயிர்க்கு உரியவள் நீ அல்லவா?
நீயின்றி தவிக்கும் என் உயிரை
என் செய்வேன் சொல் உயிரே!
 
                                       -மகி

Tuesday, 20 February 2018

பெண்ணியம் பழகுவோம்

கவிதைகளின் கருவாக
விளங்கும் பெண்களை
நாம் காகிதம் போல
கசக்கி எறிவது சரிதானோ?
மீசைவைத்த மிருகத்திற்கு அவளோ
ஒருமுறை தான் இரையானாள்
காப்பாற்றுங்கள் என்று அவள்
கதறிய போது வர மறுத்தவரெல்லாம்
கருத்து கூறி அவளை
பல முறை கொன்றனர்!
அடுப்பங்கரை முதல்
ஆடை கட்டுப்பாடு வரை
வஞ்சிக்கப்படும் பெண்களை
தினமும் வாழ்த்த மனம் இல்லை
என்றாலும்,
நிம்மதியாய் வாழவிடலாமே!!!
           
                                            - மகி

Tuesday, 9 January 2018

கண்ணீரும் காதலியும்

என் கண்கள் தாண்டி
கன்னம் தொடும் கண்ணீரே
என் கவலைகள்
கடலென இருப்பதால் தானோ
நீயும் உப்புக்கரிக்கிறாய்?
கண்களில் இருந்து வடியும்
கண்ணீர் மட்டுமல்ல,
உன்னைப் பார்க்கையில்
என் கவலைகளும் காற்றோடு
கரையும் மாயம் என்னவோ?
அடை மழையிலும்
உன் நினைவுகள் என்னை
உயிரோடு எரிக்க
என் இதயத்தை விட்டு
நீயும் நகராமல் நிற்பதேனோ???

                                     -மகி

Monday, 1 January 2018

நான்

நான் செல்லும் பாதை புரியவில்லை
வழியும் சரிதானோ தெரியவில்லை
இடையிடையே குழப்பங்கள்
என்னிலை மாற்றும் தருணங்கள்
ஒன்றோ ரெண்டோ ஏற்றுக்கொள்ளலாம்
பலமுனை போட்டி போல
பலரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்
நான் யாராக வேண்டும்
எனக்கே தெரியவில்லை
நானாகவே இருக்கிறேன் என்றால்
'நான்' எங்கே என்று தெரியவில்லை
நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் இடையில்
தொலைத்து விட்டேன் போல் என்னை நானே
தேடுகிறேன் ஒரு நாள் 'நான்' கிடைப்பேனென்று
நான் யாரென்று தெரியாமலேயே!
 
                                        -இருதயா

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...