Thursday, 12 December 2019

இருவர்

ஒரு நாள் வேண்டும்!
இன்னும் ஒரே ஒரு நாள் வேண்டும்!
இந்த ஒரு நாள் போதுமா?
என்றால் நிச்சயம் போதாது!
இருந்தும் கேட்கிறேன்
இன்னும் ஒரு நாள் வேண்டும்!
கடைசியாக ஒரு கடிதம் எழுத,
அன்பு முத்தங்கள் தர,
செய்த தவறுகளுக்கு
மன்னிப்பு கேட்க
இன்னும் ஒரு நாள் வேண்டும்!
நாம் ஒரு சேர களித்த
அந்த நாட்களை மீண்டும் வாசிக்க
இன்னும் ஒரு நாள் வேண்டும்!
எங்கோ அருகில் தான்
பிரிந்து போகிறாய்
கடக்க முடியாத இந்த தூரத்தை
கடக்க முயன்று கண்ணீருடன் நிற்கிறேன்!
அதை துடைப்பதற்கு
நான் கேட்பதெல்லாம்
இன்னும் ஒரே ஒரு நாள் தான்!

                                             -மகி

Saturday, 30 November 2019

மழைக் காதல்(லி)

ஜன்னல் வழி எனைத்
தீண்டப் பார்க்க

அவள் மூச்சுக்காற்றில்
நான் மெய்சிலிர்க்க

பறக்கும் முத்தங்களால் என்
முகம் நனைக்க

கண்கள் பருகப் பருக
அவளைப் பார்த்திருந்தேன்..
                                                      -எழில்


Saturday, 9 November 2019

நம்பிக்கை அதான‌ எல்லாம்

நம்புங்கள்!
சரியோ தவறோ ஆணித்தரமாக நம்புங்கள்!
மற்றவர்களையும் நம்ப வையுங்கள்!
நம்பிக்கையின் அடிப்படையில் தான்
எல்லாம் முடிவு செய்யப்படுகிறது!
நீதியும், நீதிமன்றங்களும்
மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருவர் பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கை
இன்னொருவர் இறந்த உண்மையை விட
வலிமையானதாக மாறலாம்!
எல்லாம் அதை
நம்புபவர்களின்
எண்ணிக்கையிலும்,
அவர்கள் வகிக்கும் பதவிகளிலும்,
அவர்களின் ஆயுதங்களிலும் இருக்கிறது!
எனவே நம்புங்கள்
நம்பிக்கையின் பெயரில்
உங்களுக்கான நீதி வழங்கப்படும்!
நம்பிக்கை அதான‌ எல்லாம்!

பி.கு.: இந்த கவிதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல!

                                             -மகி

Friday, 4 October 2019

தொலைதூரக் காதல்

  கண்கள் பேசாது..
  இதழ்கள் சேராது..
  விரல்கள் கோர்க்காது..
  தோள்கள் உரசாது ..

  காணவியலாது
  உடற்பொழுதில் கோபம் கொள்ளும்
  உன் கண்களை ..

  ஏந்தவியலாது
  நாணத்தால் சிவக்கும்
  உன் கன்னத்தை ...

  உன் குரலை மட்டும்
  கேட்டுக்கொண்டு
  கூட்டுக்குயிலாய்
  உயிர் வாழ்கிறேன்..

  உன் குறுஞ்செய்தி ஒன்றைக்
  கண்டால் தான்
  உறக்கம் கூட தழுவும்
  என்னை ..

  காணத் துடிக்கிறேன்
  இயலாமை எண்ணித்
  தவிக்கிறேன் ..
  
  தொலைதூரக் காதல்
  தவிக்க விட மாட்டேன்.. 
  தொடும் தொலைவில் இல்லை..
  தொலைத்துவிட மாட்டேன்..

  உன் வில் கோர்க்க விழைகிறேன்..
  விரைகிறேன்...
  விரைவில்...
                           -எழில்




Monday, 30 September 2019

நெகிழி

நிலையற்ற மனிதர்களுக்கு மத்தியில்
நான் கேவலம் ஒரு
நெகிழியாக இருந்து விட ஆசைப்படுகிறேன்!
காரணம் அடுத்தவர்களை
அழிப்பதற்காக அல்ல
என்னை யாரும் அழித்துவிட
கூடாது என்பதற்காகத்தான்!
அடுத்தவர்களால் பயன்படுத்ப்பட்டு
தூக்கியெறியப்பட்ட பின்னும்
அவர்களை நினைத்து மக்கியது போதும்!
இனியும் எறியப்பட்டால்
நெகிழ்ந்து போகாமல்
நெகிழியைப் போல
அப்படியே இருப்பேன்
நூற்றாண்டுகள் கடந்தும்!
அவ்வளவு அக்கறை இருந்தால்
அவர்களே என்னை துடைத்து
எடுத்துக் கொள்ளட்டும்!
மறுசுழற்சிக்கு என்றும்
நான் மறுப்பதில்லை!
                                        -மகி

Thursday, 26 September 2019

நீளமான பாதை


அது ஒரு நீளமான பாதை;
ஷேர் ஆட்டோ ஏதும் ஏறாமல்
நடந்தே போனால்
விடுதி பொய் சேர
இருபது நிமிடங்கள் ஆகும்.
ஆனாலும் நடந்தே செல்கிறேன்;

நீண்ட தூரம் நடப்பது
கால்களால் சிந்திப்பது என்பார்கள்,
நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க
மனது மட்டும் போதாது என்று
கால்களையும் சேர்த்துக்கொள்கிறேன்;

ஏற்கனவே பசியால் பாதி மயங்கிய கண்கள்
கால்களையும் தடுமாற வைக்க,
சுதாரித்துக் கொள்கிறேன்;

அருகில் மரங்கள் எதுவும் இல்லை
ஒரு மின்கம்பத் தூணை பிடித்துக்கொள்கிறேன்;

"நான் இயலாதவள் என்று நினைத்துத்தானே
வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள்,
நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் இல்லை"
மீண்டும் எழுந்து நடக்கிறேன்;

பசி மயக்கமும்,
அவர்கள் பேசிய வார்த்தைகளும்,
இன்னும் போக வேண்டிய தூரமும்,
எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்த,
அடக்கத்தெரியாத மனம்
கண்ணீரால் காட்டிக்கொடுக்கிறது;

டீக்கடையில் நிற்பவர்கள் திரும்பிப்பார்க்கிறார்கள்,
கண்ணை துடைத்துக்கொள்கிறேன்
நான் ஒன்றும் பலவீனமானவள் இல்லை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்;

விடுதி வந்துவிட்டது.
டிபன் பாக்ஸில் எடுத்து வைத்த
காய்ந்து போன புளிசாதம்
காலையில் இருந்து எனக்காக காத்திருக்கும்,
அதை ஈரமாக்க கண்ணீரை கொஞ்சம் சேமி்த்துக்கொள்கிறேன்.
-இருதயா

Sunday, 15 September 2019

குடையின்றி நனைகிறேன்...

கொட்டும் கோடை மழையில்
குடையின்றி நனைகிறேன்..
அருகே அவளில்லை..
எண்ணத் துணிவில்லை..

புல்நுனியில் அவள் பிம்பம்
சட்டென்று உடைகிறது....
என் மனம் அவள் இழப்பை
உணர மறுக்கிறது..

என் விந்தை உயிர்வித்தவள்
அவள் உயிரை விட்டுவிட்டாள்..
குழந்தையாய் பாவித்தேன்...
என் கையில் தவழுகிறாள்..
                                         -எழில் 

Monday, 2 September 2019

பயமா... எனக்கா...?

அப்பா! ஹாஸ்பிடல்ல பாத்தாலே பயமா இருக்கு...அங்க இருக்க டாக்டர்லாம் பெரிய பெரிய ஊசியா வெச்சுருக்காங்கலாம் பா... அங்க போனா நம்மலையும் எதாவது பன்னீருவாங்களா?
அதெல்லாம் பொய்டா செல்லம். டாக்டர் அங்கிள் ரொம்ப நல்லவர்.
உங்களுக்கு பயமா இல்லயாபா?
___________________________________
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன்...
அன்று என் தம்பிக்கு ஆப்பரேஷன்.
"என்ன விட்ருங்க... என் பக்கத்துல வராதீங்க... அண்ணா இவங்கள இங்க இருந்து போக சொல்லுங்க... "என்று கத்தினான்.
ரொம்ப மைனர் ஆப்பரேஷன் தான் பயப்படாதீங்கனு டாக்டர் ஆறுதல் சொன்னார்.
என் தம்பியின் கை கால்களை இருவர் பிடித்து அவனுக்கு மயக்க ஊசி போட முயன்று கொண்டிருந்தார்கள்.
அவன் வலி நிறைந்த கண்களுடன் என்னை ஒரு முறை பார்த்தான்.
கையளவு நெஞ்சை காகிதத்தை போல ஏதோ ஒன்று கசக்கியது.
கால்கள் தள்ளாடின. தலை சுற்றியது. சில நொடிகளில் உலகம் இருண்டு போனது.
அவனுக்கு முன் நான் மயங்கி விட்டேன்.
"கண் முழித்து பார்க்கும் போது ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது... தம்பி தூங்கீட்டு இருக்கான்" என்றார் டாக்டர்.
ரொம்ப நன்றி டாக்டர் என்றேன்.
"அவனுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி பயந்தா என்ன பன்றது ?"
"பயம்மலா ஒன்னுமில்ல டாக்டர்... காலைல சாப்படல அப்பறம் ராத்திரி பூரா தூங்கல... அதன் தல சுத்தீருச்சு போல..." என்று ஏதேதோ சமாதானம் சொன்னேன்.
அவர் சிரித்துக்கொண்டே அறையை விட்டு சென்றார்.
அப்படி நடப்பது அதுவே முதலும் முடிவுமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என் மகள் பிறந்தாள்.
அன்று என் மனைவிக்கு பிரசவம். வலியில் அவள் துடித்துக் கொண்டிருந்தாள். நானும் தான்.
"என்னங்க... " என்று கத்தி கண் மூடினாள்.என் கண்கள் தானாக மூடிக்கொண்டது.எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது  மீண்டும் நடந்தது.
ஆம். நான் மீண்டும் மயங்கி விட்டேன். இந்த முறை என்னை எழுப்ப என் மகள் பிறந்திருந்தாள்.
இன்னும் எத்தனை முறை விழப்போகிறேனோ என்று நினைத்து கொண்டிருக்கும் போதே என் மகள் மீண்டும் கேட்டாள்
"அப்பா! அப்பா! என்ன யோசிக்கரீங்க? உண்மையா சொல்லுங்க உங்களுக்கும் ஹாஸ்பிடல்னா பயந்தான?"
"பயமா? எனக்கா...." என்ற டயலாக்கை சொல்லி சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
                                 -மகி

Sunday, 25 August 2019

அன்றொரு நாள்...


வீட்டுப்பாடம் முடிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருந்தும் கொஞ்சம் திமிராகவே சென்றேன்.
மூன்றாம் வகுப்புப் படிக்கும் எனக்கு அன்று கொஞ்சம் அதிகத்திமிரு தான்.


வழக்கத்துக்கு மாறாக கைகள் பழுக்க இரண்டு அடி கூட விழுந்தது. கோபத்தையும் அழுகையையும் மறைத்துக்கொண்டு மேசையில் முகம் கவிழ்த்தி திட்டித் தீர்த்தேன். அப்போது எனக்கு தெரிந்த அதிகபட்ச வசைச் சொற்கள் அனைத்தும் பயன்படுத்தி இருந்தேன்.


அந்த வரிசையில் மூன்று வருடங்கள் என்னுடன் குப்பை கொட்டிய நம்பிக்கைக்குரிய தோழன் திடீரென்று எழுந்து  ஆசிரியரிடம் சென்று வந்தான்.

அவள் என்னை முறைத்துப் பார்த்து சொன்னாள் "பிரேக் அவர்ல என்ன வந்து பாரு".


"அந்த குண்டு ராட்சசிகிட்ட அவன் என்ன சொல்லி இருப்பான்? ஒருவேளை நான் திட்டினத சொல்லிட்டானோ......... சச்சச் இருக்காது" என்றுதான் நினைத்தேன்

நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.....


ஸ்டாஃப் ரூம் வாசலில் காத்திருந்த என்னை இயல்பான அதே முறைக்கும் பார்வையுடன் "உள்ளே வா" என்றாள்.



"நீ இன்னொரு நல்ல ஃப்ரெண்டா தேடு" என்றாள் என் மரியாதைக்குரிய குண்டு ராட்சசி.......



-அகல்




Thursday, 22 August 2019

ஒரு டீ

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா!..

இரண்டு முறை போன் அடித்தது.

மூன்றாவது முறை அம்மா அம்மா....
போனை அட்டென்ட் செய்து "சொல்லு" என்று கத்தினான்.

இன்னும் தூங்கறயா பா? ஆபீஸ்கு டைம் ஆகலயா?

"குளிச்சிட்டு இருந்தேன். இப்ப கெளம்பீருவன். அப்புறமா நானே போன் பன்றன்" என்று சொல்லிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும்
அம்மா அம்மா....

"இப்ப என்ன உனக்கு? காலைலயே ஏன் உயிர வாங்கர" என்றான்.

சாப்பிட்டயா பா?

"இப்பதான் கடைக்கு வந்தன். அண்ணா நாலு இட்லி ஒரு வடை" என்று சத்தமாக சொல்லி விட்டு போனை கட் செய்தான்.

இங்க அதெல்லாம் இல்ல தம்பி! தினமும் டீ‌ மட்டும் தான குடிப்பீங்க என்றார் கடைக்காரர்.

"தெரியும் அண்ணே! ஒரு டீ போடுங்க" என்றான்...
      
                                  -மகி
                           

Saturday, 17 August 2019

கண்ணாமூச்சி...

சொல்லாத காதல்
சொல்லிவிட ஆசை ...
சொல்லத் துடிக்கின்றேன் ..
மாளாமல் தவிக்கின்றேன் ....

அவள் மனதை அறிய முயன்று
குழப்பமே மிச்சம் ..

விரல் எட்டும் தூரத்தில்
அவள் இருந்தும்
மனம் எட்டாதோ ??
விடை அவள் மட்டும் அறிந்ததே...

என்று முடியுமோ
இந்த காதல் கண்ணாமூச்சி !!??
                                              -எழில்

Sunday, 11 August 2019

காதல்...............

அப்பூங்காவின் இருக்கையில்
காதல் புரிய வந்தது
ஓர் இணை..

ஊடல் முடிந்து காதல் மொழி பேசும் வேளை
இருவர் கண்ணும் ஒன்றில் ஒன்று கலந்தன..

அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவளின் கை
பிணைந்தது அவன் கையுடன்.

அவள் காதோர நரையை வருடியபடி
நினைவுகளில் மூழ்கினான்
அக்கிழவன்..

குறையவில்லை காதல்..
நாற்பது வருடங்களுக்குப் பின்னும்...
                                                                    -எழில்        

Saturday, 3 August 2019

90's கிட்ஸ்

வாட்ஸ் அப் குரூபில்

FOREVER FRIENDS

நண்பன் 1: மச்சான், இந்த வாரம் friendship day வருதாம் டா!

நண்பன் 2: ஓ! அப்படியா...

நண்பன் 3: மச்சான் இப்பயாவுது கோவா போலாம் டா...

நண்பன் 4: என்னடா இன்னும் சின்ன பசங்க மாதிரி பேசிட்டு இருக்கீங்க

நண்பன் 5:
அவர்கள் 90's கிட்ஸ்
இன்னமும் கிட்ஸ் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள்!
அவர்களின் உலகம் சிறிது!
அவர்கள் கேட்டதெல்லாம்
ஒரு பாக்கெட் எலந்தவடை,
எட்டணா புலிப்பு மிட்டாய்,
ஒரு ருபா ஐஸ் ஜூஸ்!
சக்திமானும் பவர் ரேஞ்சர்ஸீமே
அவர்கள் ஹீரோக்கள்!
நான் இன்ஜினியர் ஆக போறேன்
என்று சொன்ன கடைசி
தலைமுறையினரும் இவர்களே....

இப்படியெல்லாம் அவன் டைப் செய்யும் போதே ஒரு குரல்...

"என்னங்க பையனுக்கு ஸ்க்கூல் விட்ருப்பாங்க... அந்த போன நோண்டாம போய் கூட்டிட்டு வாங்க..."

                                                               -மகி

முத்தம்....

கடற்கரைக் காற்றில்
காலம் மறந்து
பயணித்தோம்..

என்னவள் என் பின்னே..
கடற்கரை கண் முன்னே..

யாருமில்லா இரவுச் சாலை..
நிலவு செய்யும் காமன் வேலை..

அவள் இரு கரம் எனை இறுக்க..
அத்துமீற மனம் துடிக்க..

நின்று இறங்கி மண்டியிட்டேன்..
முத்தமிட்டேன்..
அவள் வயிற்றில்..

முத்தம் ..
என்னவளுக்கும் எங்கள் உயிர்க்கும்.
                                                                       -எழில் 

மறுபக்கம்

"அம்மா, நான் இனி இந்த ஸ்கூல் கு போகல மா..."


வரும்போதே முகமெல்லாம் வாடி வந்திருந்தாள் ஆனந்தி.



"ஏண்டி, என்னதான் ஆச்சு. ஏன் இப்படி பேசுற?"



"என்னால யாரோடையும் பேசக்கூட முடில மா,

பசங்கலாம் பின்னால சொல்லி கிண்டல் பண்ணுறாங்க.
நான் தப்பு தப்பா இங்கிலிஷ் பேசுறனாம்."


"அது கொஞ்ச நாள் அப்படிதாம்மா இருக்கும். சரியாகிடும்."



"இல்லம்மா, நானும் யார்கிட்டயும் பேசமலே எவ்ளோ நாள்தான் இருக்குறது.

இனி இந்த பத்தாங்கிளாஸ் லாம் வேண்டாம் மா
நான் வேணும்னா LKG , UKG கு கிளாஸ் எடுக்க போறேன்."


கண் கலங்கியது, ஆனந்திக்கும் அம்மாவுக்கும்.



#கான்வெண்டில்_படிக்காத_கான்வென்ட்_ஆசிரியைகள்


                                                                       - இருதயா




Wednesday, 24 July 2019

இலையுதிர் காலம்

மரங்களுக்கு மட்டும் அன்றி
மனிதருக்கும் வேண்டும்
இலையுதிர் காலம்!
நம்பியவரெல்லாம் விலகிப் போனால்
நாமும் மொட்டை மரம்தான்!
இது யாரின் குற்றம்?
உதிர்ந்து சென்ற இலையின் குற்றமா?
உதிர விட்ட மரத்தின் குற்றமா?
உதிர்த்து விட்ட விதியின் குற்றமா?
தெரியவில்லை!
இவ்வளவு தான்
மரத்திற்கும் இலைக்கும்
உள்ள சொந்தமா?
இல்லை! இல்லவே இல்லை!
உதிர்ந்து விடும் என்று தெரிந்தும்
இலைக்கு இடம் கொடுக்கும் மரம்!
உதிர்ந்த பின்னும்
மரத்திற்கு உரமாகும் இலை!
இவைகளை போல
அன்பு செய்ய
நமக்கும் வேண்டும் ஒரு
இலையுதிர் காலம்!

                                  -மகி

Thursday, 11 July 2019

மீன் குழம்பு

அத்தை வைத்த மீன் குழம்புக்கு
அவ்வளவு கிராக்கி!
அதை நினைத்தாலே
தீரா சுனையாக
என் நாவூறுகிறதே!
அதை தட்டில் வைத்து
சோற்றோடு சேர்ந்து பிசைகையில்
பல கைகள் வந்து சேரும்
அதை பங்கு போட!
முந்துவோருக்கு மீனும்
பிந்துவோருக்கு முள்ளும் ஆதலால்
சில சமயம்
நாகரீக நாய்களாவோம்!
உண்மையில் அவ்வளவு கிராக்கி தான்
அந்த மீன் குழம்பிற்கு!
  
                                      -மகி

Wednesday, 19 June 2019

பாக்கியசாலிகள்

அவர்கள் பாக்கியசாலிகள்!
பல மாதங்களாக
மழையை காணாமல்
எங்காவது மழை பெய்தால்
"அடேயப்பா அவ்வளவு மழை பேஞ்சுதா?"
என்று நாங்கள்
அங்கலாய்த்து கொண்டிருக்கையில்
மழையில் நனையும்
அவர்கள் பாக்கியசாலிகள்!
பைப்பை திறந்தவுடன்
தண்ணீர் வருவதை பார்க்கும்
அவர்கள் பாக்கியசாலிகள்!
நாங்கள் மழை வேண்டி
காத்திருக்கும் போது
World Cup மேட்ச்சில்
மழை வரக்கூடாது என்று வேண்டும்
அவர்கள் உண்மையில் பாக்கியசாலிகளே!
                   
                                        இப்படிக்கு
                                        துரதிஷ்டசாலி

Saturday, 15 June 2019

"டேய் ஒழுங்கா நில்லுங்கடா இந்த அக்கா நம்மல டிவி பொட்டிக்குள்ள புடிச்சு போடுவாங்க"
"டிவி பொட்டி குள்ளையா?" 
"ஆமா"
"டிவி பொட்டிக்குள்ள போனதும் நீ என்னவாடா ஆவ"
"நா அங்க போய் பசுமாடு மேய்ச்சி பால் காபி குடிப்பேன்டா".......


இடையில் ஒரு உன்னத குரல்
"சிரிங்க பசங்களா"


-அகல்


Wednesday, 1 May 2019

நீயே சொல் MCC


இதோ முடிந்துவிட்டது!
என் வாழ்வின் இனிமையான பக்கங்கள்
இதோ முடிந்துவிட்டது!
கண் மூடி திறக்கும் முன்
மூன்று வருடங்கள் முடிந்து விட்டது!
இதோ போகிறேன்
உயிருள்ள பிணமாய்
என் இறுதி ஊர்வலத்தில்
நான் விட்டுச் சென்ற
நினைவுகளை தேடி!
காலியாய் இருக்கும் வகுப்பறைகள்,
மர பெஞ்ச்சுகள்,
அதன் கல்வெட்டுக்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்!
மலர் தூவும் மரங்கள்,
அந்த மலர் மறைக்கும்,
தார் ரோடுகள்,
அதில் விளையாடும் மான்கள்,
என எல்லாம் கடந்து போகிறேன்! ஒருவேளை,
கடந்து போவது தான் வாழ்க்கையோ?
விடை தெரியவில்லை!
உன்னிடம் விடைபெற்றுப்
போகவும் மனமில்லை!
என் செய்வேன்?
நீயே சொல்
என் இனிய MCC!
Live Love MCC!

                            -மகி

Tuesday, 30 April 2019

அறை முழுவதும் அமைதி நிரம்பி வழிந்தது.

"க்ரீச்ச்ச்..." என்ற சத்தத்துடன் அவன் உள்ளே நுழைந்தான்.

அறையிலிருந்த அனைவரும் அவன் ஏதோ கொலை குற்றம் செய்தவன் போல தங்கள் கண்களால் அவன் உடம்பை துளைத்து விட்டு மீண்டும் படிக்க தொடங்கினர்...

#library_scenes

Wednesday, 24 April 2019

செல்லத்தின் செல்லமான பதில்

"அப்பா இந்த கோமதி அக்கா ரொம்ப வேகமா சூப்பரா ஓடுறாங்க இல்ல"

"ஆமாம்மா,
செல்லமே, நீயும் வளர்ந்ததும் இவங்கள மாதிரி ஆவுரியா,
உன்னையும் எல்லாரும் பெருமையா பேசுவாங்க"

"அவங்க ஓடி முடிச்சதும் மூச்சு வாங்கும் இல்லப்பா, அப்போ அவங்களுக்கு யாருப்பா தண்ணி கொடுப்பா ? "

"அதுக்கு வேலைக்கு ஆள் இருக்கும்மா"

"நான் பெருசானதும் அந்த வேலைக்கு போகட்டுமா அப்பா?"

                                                                                                        -அகல்
x

Thursday, 4 April 2019

என்ன சொல்ல

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
தனியாய் சென்ற adult சினிமாவில்
பக்கத்து இருக்கையில்
என் ஆசிரியரை
கண்ட போது
என்ன சொல்ல.....?

மாத கடைசி, பணம் இல்லாத நேரம்
காதலியின் பிறந்தநாள்,
ஓசி தம் ஒன்றை பரிசளித்து,
"இத்தோடு இப்பழக்கத்தை
விட்டு விடுகிறேன்"
என்று சத்தியம் செய்தேன்.
அவள் முகம் மலர்ந்தாள், "உண்மையா" என்றாள்
என்ன சொல்ல....?

எப்போதும் செய்யும் தவறுகளை
எண்ணிக் கொண்டு
நான் மூடன் என்பதை உணர்ந்த பின்பும்,
"நீ மட்டுமே முட்டாள்" என்று சில
அறிவி ஜீவிகளின் புலம்பல்களை
கேட்ட பின்
என்ன சொல்ல......?

இரவு 11ஐ கடந்த யாருமில்லா சாலை,
புகைத்துக் கொண்டே
காலார நடை பயணம்,
எதிரில்,
யாரோ முடிவு செய்த அழகை தனக்குள்
கொண்டு வர செய்த மேக்-அப் உடன் ஒருத்தி
"இன்னைக்கு நைட் என் கூட இருங்க,
கையில இருக்கிறத கொடுங்க,
நாளைக்குள்ள என் மகளுக்கு ஃபீஸ் கட்டணும்" என்றாள்,
வந்த விலைமகளிடம் என்ன சொல்ல......?

                                         -அகல்

Friday, 1 March 2019

அப்பா

"ஐயோ பொம்பள பிள்ளையா?"
-னு கேட்டவங்களுக்கு
"ஆமா! பொம்பள பிள்ளைதான்"
-னு சொல்லி sweet குடுத்தவர் !

"காசு இல்லனாலும்
என் பொண்ணு convent ல தான் படிக்கணும்"
-னு  சொல்லி கஷ்டப்பட்டவர் !

"பையன் இல்லையே"
-னு  கேட்டவங்களுக்கு
"மகனுக்கு மகனா வளர்த்த
மகள் இருக்கா" னு சொன்னவர்

மத்த பொண்ணுங்க மாதிரி
அடுப்படியில கிடக்கக்கூடாதுன்னு
"அவள வேலை வாங்காத"
-னு மனைவியை கண்டித்தவர் !

காதலை விட கலாச்சாரத்த விட
கனவுதான் முக்கியம்
னு சொல்லிக்கொடுத்தவர் !

அவள் கனவு நனவாக
தன் தூக்கத்தை எல்லாம்
தொலைத்தவர் !

இத்தனை கஷ்டத்தை தாங்கிப் பிடித்தவரின்
முதல் சொட்டு கண்ணீர்...
அவள் மணமேடையில் இருக்கையில் !

ஆமாம்,
இன்னும் 5 வருஷத்தில்
கண்ணீர் சிந்துறது
அவளாகல்லவா இருக்கும் !

மறந்துவிட்டார் போலும்
தான் செய்ததைத்தான்
மருமகனும் செய்வான் என்று !

Wednesday, 13 February 2019

என் இனிய MCC

பார்த்தவுடன் காதலில்
எனக்கு நம்பிக்கை இல்லை
உன்னைப் பார்க்கும் வரையில்!
செயற்கைக்கு பழகிப்போன என் உடம்பில்
உன் இயற்கை காற்று பட்டதும்
சிலிர்த்துக் கொண்டேன்!
கணிதம் மட்டுமே பயில வந்தேன்
உன் மரங்களுக்கு அடியில் அமர்ந்ததால்
கவிஞனானேன்!
தாயைப் பிரிந்து வந்த எனக்கு
நீயே தாயும் ஆனாய்!
நண்பர்கள் என்ற சொந்தத்தையும்​
நீயே எனக்கு கொடுத்தாய்!
கம்பிகளுக்குப் பின்னால் கைதியாக
இருக்கும் மான்களை பார்த்திருக்கிறேன்!
உன்னிடம் மட்டும்தான் அவை
கைகோர்த்து விளையாடுவதை பார்க்கிறேன்!
பசிக்கு டே கேன்டீன்
படிக்க மில்லர் லைப்ரரி
விளையாட பெவிலியன்
அரட்டை அடிக்க கட்டர்ஸ்
இணையத்திற்கு கிபில்'ஸ் நெட் சென்டர்
மணி பார்க்க சன்டயல்
பாரம்பரியத்திற்கு ஆண்டர்சன் ஹால்
பரிட்சைக்கு எக்ஸாமினேஷன் ஹால்
இப்படி உன் அழகை
சொல்லி மாளாது!
இமை கொட்டாமல்
உன் இயற்கையை ரசித்ததில்
என் இளங்கலை முடிந்துவிட்டது!
மீண்டும் உன்னிடம் வருவேனா?
எனக்கு தெரியவில்லை!
ஆனால் நிச்சயம்
என் மகனையும் மகளையும்
உன்னிடம் அனுப்பிவைப்பேன்!
உன்னைவிட வேறு யார்
அவர்களை நன்றாக
பார்த்துக்கொள்வார்?
நீயே சொல்
என் இனிய MCC!
Live Love MCC!

                                 -மகி

Thursday, 17 January 2019

குருதித் தாகம்

குருதித் தாகம்...
தானமில்லை, தாகம்தான்
எனக்கு!

நான் காட்டுமிராண்டியோ,
காட்டேரியோ என்னவென்று
எனக்கு சொல்லத் தெரியவில்லை!

என்னோடு இருந்த
எனக்காகவே இருந்த
உன்னையும் அழவைத்துப் பார்த்தேன்!

எனக்காக நீ தூக்கம் தொலைத்த
இரவுகள் அறிந்தும்
மீண்டும் வலி கொடுத்தேன்!

எனக்குப் பிடித்ததை செய்து
எனக்குப் பிடித்ததையே நீ
உண்டபின்னும் உன்னை
எட்டித்தான் உதைத்தேன்!

சொல்லப்போனால்
தினம் தினம் உன் இரத்தத்தை
உறிஞ்சிக் குடித்தேன்!
அவ்வளவு தாகம் எனக்கு
குருதித் தாகம்!

ஆனால் முடிந்தால்
இன்னொரு வாய்ப்புத்தாயேன்!

ஐந்து வருட கொடுமைக்காரனுக்கு
மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் நீ
பத்து மாதம் வலி தந்த எனக்கு
கொடுக்கமாட்டாயோ?

உன் உதிரத்தில் உதித்து
குருதியை குடித்து
உலகிற்கு வந்தவள்,
மீண்டும் ஒருமுறை
உன்னை அழவைக்கமாட்டேன்!

                           -இருதயா

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...