Sunday, 20 December 2020

கவிதை


நல்ல கவிதைக்கு
குறைந்தபட்சம்
நான்கு வரிகளாவது வேண்டும்
என்றே நம்பினேன்!
'அன்புள்ள...'
என்று ஆரம்பித்த
அவளின் கடிதத்தை
படிக்கும் வரை!

                         -மகி

Saturday, 12 December 2020

தனிப்படல் மிகுதி


என் குப்பைத்தொட்டி
எண்ணிக்கொண்டிருக்கிறது
இல்லாத காதலனுக்கு
நான் எழுதும்
காதல் கவிதைகளை...
                                -இருதயா

Wednesday, 9 December 2020

மறந்தா போனார்கள்?


"சனியனே என் உசுர வாங்குவதற்கே பொறந்திருக்கு" என்றாள் அவள்.
அந்த சனியனை பெற்றெடுக்கத்தான் தவமாய் தவமிருந்தாள் என்பதை மறந்தா போயிருப்பாள்?


"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்றான் பாரதி.
ஜாதி எனும் மனநோய் சாக்கடையாய் பரவிக் கிடக்கிறது என்பதை மறந்தா போயிருந்தான்?


"மக்கள் நலனே என் நலம்.
மக்கள் மேன்மைக்காக அயராது உழைப்பேன்" என்றார் கரை வேட்டிக்காரர்.
எல்லாத் தேர்தல் மேடைகளிலும் இதை சொல்லிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம் என்பதை மறந்தா போயிருப்பார்?


"இந்த ஆன்லைன் கிளாஸ் மட்டும் இல்லனா பசங்க லைப் என்ன ஆகிறது " என்றார் 16 வது மாடியில் வசிப்பவர்.
முந்தின நாள் தன் வீட்டு வேலைக்காரி தனது 14 வயது மகனுக்கும் ஒரு வேலை போட்டு தருமாறு கேட்டதை மறந்தா போயிருப்பார்?


"ஆன்லைன் கிளாஸ் இல்லைனா எப்படி, நாங்க எல்லாம் சும்மாவா சம்பளம் வாங்குவது" என்றார் ஆசிரியர்.
வகுப்பில் கேள்வி கேட்கப்படும் என்றதும் 50 பேர் கொண்ட வகுப்பில் 30 பேர் வராமல் போனதை மறந்தா போயிருப்பார்?

                             -அகல்

Sunday, 29 November 2020

போராட்டம்

சில நொடியில் மூடி விடும் கண்கள்
அன்று இமை மூட மறுத்து
போராட்டம் செய்தது...

துரித உணவக பரோட்டா மாஸ்டரின்
தாள ஜாலங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
போராட்டம் தொடர்ந்தது...

இன்றும் பிள்ளை தூங்கிவிடுவானே என்ற 
ஏக்கத்துடன் செல்லும் ஓர் தந்தையின்
ஆட்டோ  சத்தம்‌.
போராட்டம் தொடர்ந்தது...

நாங்களும் அரசியல் பேசுவோம் என்று தெருநாய்கள் நடத்தும்
வட்டமேசை மாநாடு சத்தம்.
போராட்டமும் தொடர்ந்தது...

நம் தலைவன் ஏன் இப்படி ஒரு படம் நடித்தார் இன்றைய ஏக்கத்துடன் வீடு திரும்பும் வாலிபனின் பைக் சத்தம்.
போராட்டம் தொடர்ந்தது...

கண் இமைக்காமல் நம்மை காண்கிறானே 
என யோசித்து தலை சுற்றும்
என் அறை விசிறிச் சத்தம்....
போராட்டம் முடிந்தது!

                                  -எழில்

Wednesday, 4 November 2020

எழுதப் பழகுகிறேன்


நீண்ட பயணங்கள் தான்
பேசப்படுகின்றன!

நீண்ட பயணங்களில் சந்தித்தவர்களுடன் தான்
போட்டோக்கள் எடுக்கப்படுகின்றன!

நீண்ட பயணங்களுக்கு தான்
வருடா வருடம்
'அனிவர்சரி' யும்  கொண்டாடப்படுகின்றன!

நான் மனதில் மறைந்துவிட்ட
சிறிய பயணங்களை
எழுதப் பழகுகிறேன்!

விலாசம் கேட்க வந்தவரை
"நானு  அந்த வழி தான்"
என்று வீடு வரை கொண்டு விடும்
அந்த டீக்கடை 'கஸ்டமரும்'...

தன் நிறுத்தம் வந்ததும்
முன்சீட்டுக்காரரிடம்
"இந்தாம்மா, இந்த பொண்ணுக்கு
கோடம்பாக்கம் வந்தா சொல்லிடுங்க"
என்று கூறிவிட்டு இறங்கும் ஆண்டிகளும்...

ஓடும் ரயிலில் ஏறப்போய்
கை நழுவி கீழே விழுந்தவளை
"நீங்கலாம் படிச்ச பிள்ளைங்க தானே"
என்று திட்டிக்கொண்டே
தண்ணீர் கொடுக்கும்
அந்த பெரியவர்களும்...

பேருந்துக்கு காத்திருக்கையில்
கைப்பையை பிரித்து
"எம்பொண்ணுக்கு ஒரு பொடவ வாங்கிற்கேன்,
நல்லாருகுல?"
என்று 'ஆம்' - ஐ மட்டுமே எதிர்பாத்து
கேட்கும் அந்த அம்மாக்களும்
என்று
அந்த சிறு பயணங்களின்
மிச்சத்தை தான், நான்
எழுத பழகுகிறேன்...

                                 -இருதயா

Monday, 2 November 2020

விடியாத இரவுகள்

மீண்டும் ஒரு நீளமான இரவு!
துணைக்கு ராஜாவும் இல்லை!
அன்பு ரகுமானும் இல்லை!
இவர்கள் புது இசையமைப்பாளர்கள்!
"டடக் டடக்" என்ற ஸ்ருதியில் பாடும்
ஓட முடியாத  ஃபேன்! 
காதோரம் வைலின் கச்சேரி
நடத்தும்  கொசுக்கள்!
இவர்களுக்கு கோர்ஸ்
பாடும் தெரு நாய்கள்!
இசைக்கு ஏற்றது போல
கடந்த கால நினைவுகளை
ரீ ரெக்கார்டிங் செய்ய
ரீவைண்ட் பட்டனை தொட்டாள்
மனதில்!

                               -மகி

Tuesday, 20 October 2020

நீயும் நானும்

நீ மழை
நான் நதி
உன்னால் வழிந்தோடி 
விரைகிறேன்
நீயாக..

நீ இமை
நான் விழி
உன்னில் என்னை
சிறையிட்டாய்
முழுதாக..

நீ கடல்
நான் கரை
உன்னுள் என்னை
இழுக்கிறாய்
மெதுவாக..

நீ பிழை
நான் விடை
நீ இன்றி 
நான் இல்லை...

                                 - எழில்

Saturday, 3 October 2020

நிலா 6: விடுதலை


இன்று மட்டும் விடுதலை!
மாதத்தில் இந்த ஒரு நாள் மட்டும்
எனக்கு விடுதலை!
ஓட ஓட விரட்டும் அவளிடமிருந்து
இன்று மட்டும் தான் விடுதலை!
என் நண்பனைப் போல
என்னால் இருளில்
ஒழிய முடிவதில்லை!
அவள் இன்று வரமாட்டாள்
இருந்தும் நடுங்குகிறேன்‌ பயத்தில்!
அவள் விட்டுச்சென்ற இருளை
போர்வையாக எடுத்து போர்த்திக்கொள்கிறேன்
பளிச்சிடும் அவள் கண்களை
இன்று பார்க்மாட்டேன் என்ற நிம்மதியில்!
பல உருவங்களில் என்னை சுற்றிவரும்
அந்த வெள்ளை மோகினியிடம் இருந்து
இன்று மட்டும் தான் விடுதலை!

                                    -மகி

Tuesday, 22 September 2020

காதலிக்க வேண்டும்

மிஞ்சிய மயிர்கள் அனைத்தும் நரைத்த பின்னும்...
பல் அனைத்தும் கொட்டிப் போய் பொக்கைவாய் என்று பெயர் 
எடுத்த பின்னும்...
கண்கள் அது பார்த்து பார்த்து ஓய்ந்து அரை பார்வை 
ஆன பின்னும்...
கை கால்கள் தளர்ந்து 
காமம்  வடிந்த பின்னும்...
கவலை மறந்து 
கடைசிவரை 
காதலிக்க வேண்டும் உன்னை!

                                 -அகல்

Friday, 4 September 2020

இசை நீயின்றி!

விடியாத இரவுகள் பல..
விடிந்தது உன்னால்..
அழியாத காயங்கள் பல..
மறப்பது உன்னால்..
கழியாத நேரங்கள் பல..
விரைவது உன்னால்..
முடியாத பயணங்கள் பல..
பயணிப்பது உன்னால்..

நாத்திகனுக்கு கடவுள் இல்லை..
பக்தி உன்னில்..
உழைப்பாளிக்கு உறக்கம் இல்லை..
ஓய்வு உன்னில்..

நான் பிழைப்பேனோ..
இசை நீயின்றி...

                                 -எழில்

Tuesday, 18 August 2020

ஜியோமெட்ரிக் பாக்ஸ்

அப்பா வாங்கி தந்த
ஜியோமெட்ரிக் பாக்ஸ்!
கணக்கு டீச்சரிடம்
பல முறை திட்டு வாங்கியும்,
பக்கத்து க்ளாஸ் நண்பர்கள்
கடன் தர மறுத்ததாலும்
அடம் பிடித்து வாங்கிய
ஜியோமெட்ரிக் பாக்ஸ்!
டிவைடர், காம்பஸ், ப்ரோட்டக்டர்
இன்னும் சில பிளாஸ்டிக் பொருட்கள்...
இன்று வரை அதன் பெயர் கூட
தெரியாது எனக்கு!
இவர்களுடன் வாடகை தராத 
வீட்டுக்காரர்களாய் 
வெட்டுக்கிளியும்,
சிலந்தி பூச்சியும்!
மேடு பள்ளம் பார்க்காமல்
கரடுமுரடான மர பெஞ்சில்
எங்களை பஸ் டிரைவராக
மாற்றியதும் இந்த 
ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான்!
இன்று துரு பிடித்து கிடைக்கும்
அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸின் கதைகளை
ஆன்லைனில் படிக்கும்
என் மகனுக்கு
எப்படி சொல்வேன்?

                                  -மகி

Thursday, 13 August 2020

அன்புள்ள வீரர்களுக்கு!

“எங்கோ படித்த ஞாபகம்
‘தற்கொலை என்பது தெய்வநிந்தனை’ 
மனிதர்கள் மீது நம்பிக்கையற்ற இந்தச் சூழலுக்காக 
தெய்வத்தை நிந்திக்க விரும்பியே
இந்த முடிவுக்கு வந்தேன்”

அவளின் தற்கொலை கடிதம் 
ஆழமான கவிதைதான்

“என்னை கோழை என்று பலரும் போற்றுவர்.
அவர்களின் கரிசனைக்கு நன்றி,
அம்மாபெரும் வீரர்கள் நலமோடு வாழ
தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்”

அவள் விடைபெற்று ஐந்தாண்டுகள் வழிந்தோடிற்று
அந்த கடிதத்தின் வரிகளுக்கு என் மனதளவில் 
இன்னும் வயது ஆகவே இல்லை

“அந்த மென்மையான வரிகள்,
’SORRY!  உங்களால குழந்த பெத்துக்க முடியாது’ 
கேட்டதுமே என் இதயம் நின்றிருக்கக் கூடாதா.
பாழாப் போன இதயம் தாங்கிதொலைத்துவிட்டது.”

எட்டு ஆண்டுகளில்
அவள் இதயம் எவ்வளவு புண்ணாகியிருக்கும்
அன்பை மட்டுமே சுமந்ததாயிற்றே,
அதிகமாய் காயப்பட்டு இருக்கும்.

“என் இல்லாமை ஒருவரைமட்டுமே 
பாதிக்கும் என்று நம்புகிறேன்.
SORRY! மனோ, தாமதமாய் இம்முடிவை எடுத்ததுக்கு,
நான் உங்கள ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டேன்.”

நான் சந்தித்த மனிதர்கள் பலருக்கும் 
அவள் கடிதத்தை ஒப்பித்துவிட்டேன்.
அம்மனிதர்களின் கண்ணீர்த் துளிகளே
என்னை நடமாடச் செய்தது.

அவள் கடிதத்தை ஓர் இதழில் வெளியிடச் செய்துவிட்டேன்.
என் உடைமைகளை பங்கிட்டுவிட்டேன்.

வீரர்களிடமிருந்து விடைபெறுகிறேன்

இப்படிக்கு ,
மனோ

                             -அகல்

Friday, 7 August 2020

ஊரடங்கு வாழ்க்கை

வாரத்தின் முதல் நாளை கண்டு
பயந்திராத இந்த நாட்கள்!
வீட்டுக்கும் ஆபிஸுக்கும்
ஷிப்ட் போட்டு உழைக்காத
இந்த நாட்கள்!
ஃபாஸ்ட் ஃபார்வாடாக சென்ற வாழ்க்கையில்
பாஸ் பட்டனாக வந்த
இந்த நாட்களை 
முதலில் நானும் ரசிக்கத்தான் செய்தேன்...
யார் தான் மாட்டார்கள்?


எனக்குள் இருந்த குழந்தையை
மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கிறேன்!
என் தொலைந்து போன உணர்ச்சிகளை 
தூசி தட்டுகிறேன்!
என்னை நானே
மறுசுழற்சி செய்ய முயற்சிக்கிறேன்!
முடிந்த வரை பயன் உள்ளதாக
மாற்ற நினைக்கிறேன்
இந்த நாட்களை!
அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்கள்!
அப்படி செய்யாதவர்களை
கேலியும் செய்கிறார்கள்!
இந்த நாட்களில் கூட 
நான் நானாக இருப்பதை
அவர்கள் விரும்பவில்லை!
என்று தான் விரும்பினார்கள்?


பேருந்துகள் இல்லை!
பயணங்கள் இல்லை!
தேவையற்ற தீண்டல்கள் இல்லை!
கண்ணியமற்ற பார்வைகள் இல்லை!
போலியான சிரிப்புகள் இல்லை!
என சிலாகித்து நாட்கள் கடந்தது!
இந்த பயம் வரும் வரை!


வைரஸை விட வேகமாக பரவும்
இந்த பயம்!
பயம் என்பதை விட
ஒரு இனம் தெரியாத கவலை!
பல வருடங்கள் பேசாத நண்பன்,
பகையில் முடிந்த உறவுகள்
என பாரபட்சமின்றி
எல்லோரையும் நலம் விசாரிக்கிறேன்!
பகையை மறந்து!
கண்ணாடியில் என் பிம்பம்
என்னை காரித் துப்புகிறது
"நீ எல்லாம் மானஸ்தியா?" என்று!
துடைத்துக் கொள்கிறேன்!
பகையைப் போல பயமும் கடந்து போகும் என்று!


இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கை தான்
நாட்களை நகர்த்திச் செல்கிறது!
அவ்வளவு நம்பிக்கை என்னிடம் இல்லை!
எந்த நம்பிக்கை 
என் கணவனை இழந்த போது
என்னை இழுத்துச் சென்றதோ
அது இன்று இல்லை!
அதனால் கடன்வாங்கிக்கொள்கிறேன்!


ஊரடங்கு முடிந்தாலும்
ஊரடங்கில் இருக்கும்
வீட்டுப் பெண்களிடம் கொஞ்சம்!
தன் முதல் நாள் வேலைக்காக காத்திருக்கும்
இளைஞனிடம் கொஞ்சம்!
கொரோனாவோடு போராடும்
நோயாளியிடம் கொஞ்சம்!
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
எல்லோரிடமும் நம்பிக்கையை
கடன் வாங்குகிறேன்!
இந்த நாட்கள் முடிந்தவுடன்
அதை திருப்பிக் கொடுத்துவிடுவேன்
என்ற நம்பிக்கையில்!

                                   -மகி

Saturday, 1 August 2020

கோபம் எங்கே?

மறதி ஒரு தேசிய வியாதி...
சிந்தனையை மடைமாற்ற 
காவிகள் இங்கே உண்டு...

சக மனிதனை தாழ்ந்தவன் என
இழித்து பேசும் கூட்டத்தின் மீது
கோபம் எங்கே? 

குலத்தொழிலை முன்னிறுத்தும்
பார்ப்பனிய கூட்டத்தின் மீது
கோபம் எங்கே?

பெண்களை படிக்க வைக்காதே
எனக் கூறும் இழி பிறவிகள் மீது
கோபம் எங்கே?

மனிதக் கழிவை
மனிதனே அகற்றும் அவலத்தை 
அவன் கர்மவினை என்று 
சொல்பவர்கள் மீது 
கோபம் எங்கே?

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்துவிட்டு
உண்பவர்களைக் கொல்லும்
மத வெறியர்கள் மீது
கோபம் எங்கே?

சட்டம் இருந்தும்
தீண்டாமை சுவர்கள் கட்டிய 
கயவர்கள் மீது
கோபம் எங்கே?

கருவறைக்குள் நுழைய
இன்றும் தடுக்கும்
பார்ப்பனியத்தின் மீது
கோபம் எங்கே?

கோபம் கொள்ள 
பல அவலங்கள் உண்டு...
ஆனால் இங்கோ

கடவுளை இழி சொல் பேசினால் 
வரும் கோபம்
மனிதனை கீழ்த்தரமாக நடத்தினால்
வருவதில்லை...
அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டால்
வருவதில்லை...

மறதி மட்டும் அல்ல
சாதியும் இங்கே தேசிய வியாதி...
எதிர்த்தால்
உன்னை மடைமாற்ற
மதம் மாற்ற
காவிகள் இங்குண்டு...

                                    -எழில்

Sunday, 26 July 2020

நிலா 5: அவளே துணை

டைரி எழுதும் பழக்கம்
அவனுக்கு இருந்ததில்லை...
காரணம்
அவனுடைய இறுக்கமான 
இரவுகளை பகிர்ந்துகொள்ள
அவனுடன்
அவள் இருந்ததால்!

                                -மகி

Wednesday, 22 July 2020

நிலா 4: நீயே சாட்சி

ஊடல் கொள்ள 
காரணம் தேடி
கோபத்தோடு அவள்
வான்பார்க்க...
நிலா உனை 
தூது அனுப்பினேன்...

ஊடல் தீர்ந்து
என் கண்கள் பார்த்து
கண்ணம் ஏந்திய 
அவள்
இதழோடு இதழ் 
பேசினாள்...
 
எங்கள் முத்தச் சத்தத்தில் நாணி
நீயோ
ஓடி மறைந்தாய்..
ஆம்...
எங்கள் ஊடலுக்கு
நீ மட்டுமே
(நீ) சாட்சி...

                                 -எழில்

Friday, 17 July 2020

பச்சோந்திகளின் ஃபாசிஸம்!

பச்சோந்திகளின் படையெடுப்பு நடக்கிறது!
மேடைக்கு மேடை
நிறம் மாறிக்கொண்டே
அவை காவி பிரச்சாரம் செய்கிறது!
எல்லா நிறங்களையும் உறிஞ்சி விட்டு
காவியை தூவி செல்கிறது!
வள்ளுவருக்கும் காவி!
பெரியாருக்கும் காவி!
அவற்றுக்கு நீலத்தின் வீடும் 
பிடிப்பதில்லை!
கருப்பின் சிலையும்
பிடிப்பதில்லை!
அதனால் அடித்து உடைத்து செல்கிறது!
பாவம் பகுத்தறிவு இல்லாத 
அந்த பச்சோந்திகளுக்கு தெரியாது
கருப்பும் நீலமும் என்றோ(றும்)
புத்தகங்களுக்குள்ளும்
எங்கள் புத்திக்குள்ளும்
புகுந்துவிட்டன என்று!

                                    -மகி

Saturday, 11 July 2020

ராஜ்க்ரு

முழங்குவோம்!

கற்பி! 
ஒன்றினை!
புரட்சிசெய்!

இம் முழக்கம் ஒருபோதும் அழியப் போவதில்லை என்று உணர்த்துவோம்!


பார்ப்பனிய விதைகள் மாண்டு போகும் வரை முழங்குவோம்!

ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் 
ஜெய் பீம்!

மனுதருமம் தீக்கு இரையாகி கொண்டு
இருக்கிறது என்பதை உணர்த்துவோம்!

எதிரிகளின் செவிகள் கிழிய முழங்குவோம்!

நீல் சலாம்....அஸ்ஸலாம் இன்திஃபாதா....இன்குலாப்

எங்கள் குரல்கள் காவிநெடி கூடினாலும்
காணாமல் போகாது என்று உணர்த்துவோம்!

#RajgruhaStandsTall

                                        -அகல்

Saturday, 4 July 2020

நிலா-3: நிலவவன்

பெரிதும் கருணை கொண்ட
பேரழகி புவியை 
போட்டிகள் அற்ற  காதலனாய் 
சுற்றி வருகிறான் நிலா

அவளைச் சுற்றி பலர்
செயற்கை அன்புடன் 
உலா வரினும்...
அவள் பார்வையில் 
அவன் அன்பே 
இயற்கை...

கண்கொட்டாமல் பார்ப்பாள்...
அவனைக் காணாவிடின்
இருண்டு போவாள்..

கண்ணாமூச்சி ஆட்டம் உண்டு..
காதலர்கள் இடையே சிக்கித் தவிப்பான்
அந்த ஆதவன்...

                                - எழில் & அகல்

Saturday, 27 June 2020

அந்த நான்காவது உயிர்

சாமர்த்தியமாக மூன்று கொலைகள்
நடந்தேறின!
பேச முடியாத சாட்சிகளாய்
ஜெயில் கம்பிகளும்
இரண்டு உயிரற்ற உடல்களும்!
மூன்றாவது உயிருக்கு உடலில்லை
வெறும் பெயர் மட்டும் தான்
"சட்டம்" என்று!
வழிந்தோடும் செங்குருதி 
தரையில் மரண வாக்குமூலம் எழுதிக்கொண்டிருந்தது!
யாரும் எதிர்பார்க்கவில்லை
அவர்களின் பெயர்கள் 
கொரோனாவோடு சேர்ந்து ஹேஷ்டாகாக பரவும் என்று!
சட்டென்று சுதாரித்துக் கொண்டார்கள்!
நான்காவது கொலைக்கான 
வேலைகள் நடந்து வருகிறது!
இந்த முறை சற்று
இரக்கம் காட்டி அந்த உயிரை
விலைக்கு வாங்கலாம்!
இவர்களால் கொல்லப்படாமலும்,
கொள்ளப்படாமலும்
காப்பாற்றப்படுமா
நீதி என்ற உயிர்?

                              -மகி

#justiceforjeyarajandbennicks
Picture credits: projectinkalaab

Tuesday, 16 June 2020

நிலா-2: நீயாக பிறக்க ஆசை

உன்னை வெறுப்பவர் எவருமில்லை...
உன்னிடம் வேற்றுமை காண்பதில்லை..
உன்னை ஒரு தலையாய் காதலிப்பவர்கள் 
பலர்...
நீயாக பிறக்க ஆசை..

என்னவளும் மகிழ்வாள்..
உன்னை அவளுடன் உவமித்தாள்...
பொறாமை இல்லை உன்னுடன்...
நீயாக பிறக்க ஆசை..

மனதில் கறை கொண்டோரும்
மதி மயங்குவர்...
மதி உன் கறைகள் கண்டு...
ஆம்..
நீயாக பிறந்து இவ்வுலகில் அன்பை விதைக்க ஆசை...

                                   -எழில்

Tuesday, 9 June 2020

இரண்டு டீ

"என்ன வேணுப்பா?"
"என்னண்ணே புதுசா கேக்குறீங்க டெய்லி வாங்கறதான...
ஒரு டீ போடுங்க"

"அப்படிக் கேட்டாவது பாக்கி ஞாபகம் வரும் தான்பா கேட்டேன்"
"நாளைக்கு சம்பளம் கொடுத்துருவாங்கன்னு சொல்லி இருக்காங்க, கொடுத்திருவேண்ணே"

"நான் ஒண்ணு வில்லன் இல்லப்பா,
வரவங்க எல்லா பாக்கி வச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன் சொல்லு"

"புரிதுணே........கம்பெனில பாதிப் பேரை வேலையை விட்டு தூக்கிட்டான்,
இருக்குறவங்களுக்கு இன்னும் சம்பளம் போடல, இதுல இன்னும் யார தூக்க போறாயிங்கணு வேற தெரியல, என்ன பண்ண"

சுருக்கமாய் ஒரு மௌன இடைவெளி

"எதுக்கு வெட்டி பேச்சு நாளைக்கு எப்படி ஆவது காசு கொடுத்துடு, இந்தா எடுத்துக்கோ"

எவ்வளவு சீனி போட்டாலும் அன்றைக்கு டீ கசக்கத்தான் செய்தது.
அந்த கசந்த டி குடித்துக்கொண்டே சிந்தனையில் மூழ்கினான் மனோ.

சற்றென்று அவன் கவனம் அருகில் நெருங்கிய அந்த வயசான கிழவி மீது சென்றது. அங்க இருந்த யாரும் தர்ம பிரபுக்கள் இல்லை போல, அவளுக்கு யாரிடமும் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. மனோவிடம் வந்ததும் அவள் கண்களும் மனோவின் கண்களும் ஏதோ பேசிக் கொண்டன மறுகணம் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவள் டீக்கடைக்காரரிடம் சென்றாள்.

டீ கடைக்காரர் சற்றே கறாரான குறலுடன் "காசெல்லா இல்ல, டீ வேணுனா தரேன் குடிக்கிறியா?"

அவளும் பெருந்தன்மையுடன் "ம்ம்" என்று தலை ஆட்டினாள்.

"அண்ணே அந்த டீயையும் என்னோட கணக்குல எழுதிடுங்க" என்று அவர் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் மனோ.

                                  -அகல்

Wednesday, 3 June 2020

நிலா-I

என்னை கேலி செய்கிறார்கள்
உன்‌ மீது காதல் கொண்டதற்காக!
எட்ட முடியாத உன்னை
எட்டிப் பறிக்க நினைத்தது
என் குற்றம் தானா?
நீ மாசடைந்தவள் தான்!
கறைபடிந்தவள் தான்!
முழுமையற்றவள் தான்!
அதனால் என்ன?
உன்னை காதலிக்க கூடாதா?
சுட்டெரிக்கும் கதிரவன் கூட
வெறுக்காத உன்னை
நான் மட்டும் எப்படி வெறுப்பேன்?
விழியுள்ள வரை ரசித்தும்
வாழ்வுள்ள வரை நேசித்தும் இருப்பேன்
அவர்கள் கேலி செய்யும்
பைத்தியக்காரனாய்!

                              -மகி

                                     

Wednesday, 27 May 2020

பென்சில் மரம்

அண்ணன் மகள் அவள்
அவள் முகத்தை நான் மறக்கவில்லை
என் முகத்தை அவள் மறந்திருக்கக்கூடும்
2 வயது குழந்தைதானே
மறந்திருக்கக்கூடும்.
-
மாமன் மகன்கள் என்னும்
பொடிசுகளுடன்
வீட்டை சுற்றி சுற்றி
கண்ணாமூச்சி ஆடியது போல்
அவளுடன் ஆட முடியாது.
-
மாமன் மகளை
வம்புக்கு இழுத்து
அழ வைத்து
பின் சமாதானப்படுத்துவது போல்
அவளிடம் செய்ய முடியாது
-
அக்காள் மகள் பிறந்தவுடன்
"என் பொண்ணு இவ"
என்று யாரிடமும் கொடுக்காமல்
நானே வைத்துக்கொண்டது போல்
அவளை வைத்துக்கொள்ள முடியாது.
-
அக்காள் மகனிடம் பொய் சொல்லி
மண்ணில் பென்சில் புதைத்துக்கொடுத்து
அதில் பென்சில் மரம் வளரும் கதை சொல்லி
இன்றும் ஏமாற்றுவதை போல்
அவளிடம் செய்ய முடியாது.
-
வெளியூரில் நானும்
வெளிநாட்டில் அவளும்
இருந்து திரும்புகையில்
என்றாவது ஒருநாள் பார்த்து
'அத்தை' என கூப்பிட்டுக்கேட்பதே
பெரிதாய் இருக்கிறது.
-
"பாப்பா உனக்கு... உனக்கு... ஒண்ணு தெரியுமா..!"

அந்த அக்காள் மகன்தான் வந்திருக்கிறான்,
அவளைப் பார்க்க.

"சித்தி வந்து எனக்கு... எனக்கு... பென்சில் மரம் வச்சி குடுத்தாங்க."

நான் சொல்ல முடியாத கதைகளை அவன் சொல்லிவிடுவான் அவளுக்கு !

                              -இருதயா                                  

Tuesday, 19 May 2020

பிரிவுழல்கிறேன்

நெடுந்தூர தொடர்வண்டிப் பயணத்தில்...
என் தோளும் ஏங்கியது...
உன் தலை ஏந்த...

மகிழ்விலும் துயரிலும்..
என் கை தேடியது..
கைப்பேசியில் உன் எண்ணை...

நம் நிழற்படங்கள் கண்டு...
கரைதாண்டிப் புரள்கிறது...
என் கண்ணீர்...

பிரிவு கொடிது...
அதனின் கொடிது...
நட்பில் பிரிவு‌...

                                   -எழில்

Sunday, 10 May 2020

ஊழியின் காலம்

ஊழியின் காலம் இது!
எல்லோரும் பதுங்குகுழிகளில்
ஒழிந்து கொண்டார்கள்
சிலர் வானமே கூரையென
தங்கள் சாவை எதிர்நோக்கி
காத்திருந்தார்கள்!
சிலருக்கு அதுவும் இல்லை!
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
இரக்கம் என்ற பெயரில்
சில இலவச பொருட்களும்,
தங்கள் இறுதி சடஙகிற்காக
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் தான்!
பேருந்துகள் இல்லை!
ரயில்கள் இல்லை!
வழி காட்ட கூகுள் மேப்பும் இல்லை!
ரயில் வராத தண்டவாளங்கள்
தங்களை ஊர் சேர்க்கும்
என்றே அவர்கள் நடந்தார்கள்!
கண்ணயர்ந்த நேரத்தில் 
அவர்கள் மீது
ஏற்றிச்சென்றது
ஒரு ராட்சத இயந்திரம்!
பாவம்!
அவர்களின் அழுகையை கூட
விட்டு வைக்காமல்
விழுங்கி விட்டு செல்கிறது!
அரசு எனும்
அந்த இயந்திரம்!

                                     -மகி

Sunday, 19 April 2020

ஓவியம்

நான் புனைந்த ஓவியத்திற்கு
உயிர் உண்டு!
ஆம்! 
நிதமும் என் 
வாழ்வில் வண்ணமூட்டும் 
அவள் தான் 
என் ஓவியம்.
ஜூலி💙

                        - மகி

Wednesday, 8 April 2020

குற்றமற்றவள்

குற்றமற்றவள் அவள்..
இன்றிங்கு இல்லை...
அவள் மீது சுமத்தப்படும் குற்றம்..
காதல்..

சொந்தங்களை எதிர்த்து.
காதலனைக் கரம் பிடித்தவள்..
இன்று அவனுடன் பயணித்தாள்..
சாவிலும்..

கொன்றது யார்?
அவளின் பெற்றோர்களா?
இல்லை...
வெறும் உயிரைக் கொன்றவர்கள் அவர்கள்...
கொன்றது இச்சமூகம்..

ஆசையாய் பெற்று வளர்த்த மகளை
அரிவாளால் வெட்டியபோது
அழுகையில்லை அத்தந்தைக்கு...

மாறாக நிம்மதி...
பெண்ணின் பிறப்புறுப்பில்
சாதியை திணிக்கும்
இப்பிணந்திண்ணிச் சமூகத்தின்
குருதிப்பசியை தீர்த்த நிம்மதி...

என்று தனியுமோ இந்தக் குருதிப்பசி??
என்று தனியுமோ இந்தச் சாதிவெறி??

                                 -எழில்

Tuesday, 31 March 2020

நடை பிணங்கள்

அவர்கள் கால்களால் உரசினார்கள்
பல மைல்கள் உரசினார்கள்.

"நல்ல வேளை
அந்த ரோட்டுபக்கம் டென்டு போட்ட கூட்டம்
இப்பவாச்சும் ஒழிஞ்சி போச்சே!"

அவர்கள் கால்களால் உரசினார்கள்
வலி பசியை மறைக்கும் அளவுக்கு
உரசினார்கள்

"இங்க கிடந்து
ஊர் முழுக்க சுத்தி
நமக்கும் நோயை கொடுத்திருக்கும் ங்க"

அவர்கள் இன்னும் உரசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
தலையில் பொதியையும்
இடுப்பில் குழந்தையையும்
காலில் அனலையும் கட்டிக்கொண்டு
உரசுகிறார்கள்.

"இந்த நோய் வந்தாவது
நம்ம இடம் நமக்குன்னு ஆனதே
அந்த வந்தேறிகள் வந்து தான்
நமக்கு வேலையில்லாம போச்சு"

அங்கு கால்களால் உரசுகிறார்கள்
அவர்க்கு இந்த ஏச்சும் பேச்சும் புதிதல்ல
வயிற்றை நிரப்ப
காதை மூடிக்கொண்டு
பிழைத்துக்கொண்டார்கள்.
இன்று
தூரம் தெரியாமலிருக்க
கண்ணை மூடிக்கொண்டும் நடக்கிறார்கள்.

சீலை முந்தானையில்
ஒரு இழு
ரோட்டோரம் படுக்கும்போது
சில கைகள்
தெரிந்தே தெரியாமல் இழுத்துப்போகுமே
அதுபோல

அவள் கண்திறந்து திரும்பிப்பார்க்கிறாள்
மகன் தான்

"எப்பம்மா நம்ம ஊர் வரும்"
அவர்கள் பாஷையில் பேசிக்கொள்கிறார்கள்.
"வந்துடும் டா"
"அங்கப்போனா நம்மள நல்லா பாத்துபாங்கல?"
"ஆமாடா, இப்ப நட"

ஊர் வந்தது.
நா வறண்டு ஒரு வாய் தண்ணீர் கேட்டது.
குடிக்கக் கிடைக்கவில்லை
குளிக்கக்கிடைத்தது
கிருமிநாசினியால்.

"இது ரோட்டுல தானே அடிப்பாங்க
நம்மேல ஏம்மா அடிக்குறாங்க"
"நாம ரோட்டுல வாழுறவங்க டா"

ஏழைகள்
எங்குசென்றாலும் ஏழைகளே !

‌                                -இருதயா

Monday, 30 March 2020

21 நாட்கள்

பிரதமரின் உரை முடிந்தது!
எங்கும் பதற்றம்!
பொதுவாக ஏன்? எதற்கு? 
என்ற‌ கேள்விகள் மட்டுமே எழும்
இம்முறை எப்படி ?
என்ற கேள்வி தான் எல்லோரின் மனதிலும்!
எப்படி நாங்கள் வீட்டிலேயே இருப்பது? 
இந்த கேள்வியை என்றும்
நம் அம்மாக்களின் மனதில்
எழ விட்டதில்லை!
காரணம் 
அவர்கள் அதற்காகவே பிறந்தவர்கள் என்று
நாம் மட்டும் நம்பாமல்
அவர்களையும் நம்ப வைத்தது தான்!
சிலர் அத்தியவசியப் பொருட்களை 
வாங்கி குவிக்க, 
சிலர் என்னால் வீட்டுக்குள்ளேயே
இருக்க முடியாது என்று 
வெளியில் வர,
இன்னும் சிலர் டிவி பார்த்து
வீதியில் சுற்றித் திரிபவர்களை
திட்டினார்கள்!
இனி 21 நாட்கள் நாட்கள்
பேருந்து பயணங்கள் இல்லை!
ரயில் பயணங்கள் இல்லை!
தேவையற்ற உரசல்கள் இல்லை!
என்ற நிம்மதியில் இருந்த
பெண் போல தார் ரோடுகள்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க,
சிலர் மட்டும் தங்கள் கால்களால்
உரசினார்கள்!
பல மைல்கள் உரசினார்கள்!
அவர்கள் கூலித்தொழிலுக்காக
வெளிமாநிலங்கள் வந்தவர்கள்!
அவர்கள் ஒழிந்து கொள்ள 
வீடில்லை!
பொருட்களை வாங்க பணமில்லை!
சொந்த ஊருக்கு செல்ல
பஸ்ஸும் இல்லை!
இருந்ததெல்லாம் பசி மட்டுமே!
எனவே உரசினார்கள்!
வெறுப்பாகிய ரோடுகள் கேட்டது
கொரோனா பற்றிய 
கவலையில்லையா? என்று
கொரோனாவை விட கொடியது 
இந்த "பசி"
என்று சொல்லிக்கொண்டே மீண்டும் 
உரசின கால்கள்!
அவர்களின் ஊரை நோக்கி!

                                            -மகி

Sunday, 29 March 2020

வாழும் உயிர்களுக்காக...

ஆளரவமற்ற அடக்கமாய் ஒரு இழவு வீடு.
-
"நேத்து நைட்டு கூட நல்லா தான பேசிட்டு படுத்தீங்க.
இனி உங்களை விட்டு நான் எப்படி தனியா இருக்க போறேன்.....?"
-
மாரடைப்பில் இறந்த கணவனுக்காக 30 வருஷ திருமண வாழ்க்கையின் நினைவுகளை வரிசையாய் அடுக்கிக் கொண்டே ஒப்பாரி வைக்கிறாள் மனைவி.
-
"பெத்த ரெண்டையும் நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கி கம்பீரமா வாழ்ந்தீங்களே......
மனுஷங்களை மதிக்கணும்னு சொல்லுவீங்களே......
மனுஷங்க கிட்ட பாசமா இருக்கணும்னு சொல்லுவீங்களே......
ஊரே உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுச்சே......
உங்களுக்கு இப்படி ஒரு சாவு வரணுமா.....!
மூத்தமகன் போன்ல கதறுறான்......
அப்பனுக்கு என் கையால கொள்ளி வைக்க கூட கொடுத்து வைக்கலயே னு......
என்னங்க சொல்லுவேன் அவனுக்கு......!
'டெல்லி இங்கிட்டு தான் இருக்கு,
பாக்கணும்னு தோணுச்சுன்னா ஓடி வந்துடுவான்' னு சொல்லி அனுப்பி வச்சீங்களே......
எங்கங்க முடிஞ்சுது.....!"
-
"ஒப்பாரி வைக்கக் கூட சொந்தபந்தம் சுத்தி இல்லையே......!
உங்களுக்கு நா மட்டுமாவது ஒப்பாரி வைக்கணும்னு தான் என்ன விட்டுட்டு போனீங்களா......!"
-
அழுது அழுது தொண்டை வறண்டு, அவள் குரல் மங்கிப் போனது.
-
"இளையவ சென்னைலயிருந்து கார் புடிச்சு வந்துட்டு இருக்காளாம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா."
-
அழுகையும் புலம்பலும் சுற்றி நிற்கும்  பத்து பேரின் இதயத்தையும் கனக்கச் செய்தது. ஆம் அந்த விசாலமான வீட்டில் பத்து பேர்தான் இருந்தார்கள்.
பறையடிக்க ஒருத்தர்,
சங்கு ஊத ஒருத்தர்,
நோய் தொற்றுக்காக முகமூடி போட்டுக் கொண்டு பிணம் தூக்க, நாலு நெருங்கிய நண்பர்கள், அவர்களின் மனைவிகள்.
அதற்குமேல் கூடாது.
அரசாங்க உத்தரவு.
அவர்களையும் குறை கூற முடியாது.
வாழ்ந்து முடித்தவர்களைக் காட்டிலும் வாழ்பவர்கள் முக்கியம்.
-
"இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுங்க......!"
-
-
-
கண்ணீர் இல்லாத,
ஒப்பாரி இல்லாத சாவுகள் கொடூரமானவை.
ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் முக்கியம். கொலைகாரர்கள் ஆகாமல் தனித்து இருப்போம்.

                                      - அகல்

Thursday, 26 March 2020

தனிமை என்னும் அவள்..

கருவறையில் கைகோர்த்து
இருந்தாய்...
உனைப் பிரிந்ததால் 
பிறந்ததும் அழுதேன்..

ஒற்றைப் பிள்ளை என்று ஊரார் கூற
ஓடோடி வந்தென்னை
அணைத்துக் கொண்டாய்..

நம்மிடையே ரகசியங்கள் ஏது?
என் அந்தரங்கம் அறிந்தவள் நீ...

திரையரங்கில் தோள் சாய்ந்தாய்..
தவிக்கும் போது தோள் கொடுத்தாய்..

கடற்கரையில் நம்மைக் கண்டு
அந்த கடலும் பொறாமை கொள்ளும்..
உன் போல் துணை தனக்கு இல்லையென்று...

நம்பிக்கை உண்டு..
இறந்தாலும்..
என்றும் உன் துணை 
உண்டென்று...
                               -எழில்

Friday, 20 March 2020

51 G white board


ஒவ்வொரு நிறுத்தமும் 
ஒரு கதை சொல்லும், அவர்களுக்கு.....
கடந்த பாதையின் நினைவுகளில் மூழ்கிப் போகும் முதியோர்கள்
இல்லை இல்லை, அனுபவசாலிகள்.

நெரிசல் இருக்கிறதாம் அவர்களுக்கு.....
பள்ளி சீருடையுடன் படியில் நிற்கும் காதலன்
அவனின் பையை வைத்துக்கொள்ளவே ஜன்னலோரம் பிடிக்கும் கண்மணி
சந்திராயன் - 5 போனாலும்
எப்போதும் இருப்பார்கள் இந்த காதலர்கள்.

எல்லா இருக்கையும் ஒன்றுதான் அவர்களுக்கு.....
ராஜாவோ ரகுமானோ இயர் போன் இல் பாடிக் கொண்டிருக்க
இந்த கண்மணியும் காதலனையும் கண்டு ரசிக்கும்
ஐடி ஊழியர்கள்.

எந்தப் பாம்பாமும்  காதில் விழாது அவர்களுக்கு.....
கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பாக்கியம் கிடைத்ததால்
உழைத்துக் களைத்து, உறங்கிக்கொண்டிருக்கும்
 உண்மையில் நல்லவர்கள்.

சுவிங்கம் வேண்டுமாம்
அவர்களுக்கு.....
"நாளை உன்னுடையது"
இந்த வசனத்தைக் கேட்ட நொடியிலிருந்து நாளைக்காக காத்திருக்கும்,
பொதி மூட்டை தூக்கும் மார்டன் சிறுவர்கள்.


எல்லோரையும் கவனிப்பார்கள் அவர்கள்.....
நம்ம ப்ளாக்ல என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்
என்னை போன்ற மஞ்மாக்காங்கள். 

இந்த வைட் போர்டில் இரண்டே பேர் தான் 
உறங்கிக் கொண்டிருப்பவர்கள்
உறக்கம் வராமல் கவனித்துக் கொண்டிருப்பவர்கள்.

                                        -அகல்

Sunday, 16 February 2020

வறட்சி

பலரும் கேட்கிறார்கள்.
பிடித்த கவிதையைப் பற்றி பேசும்போதும்,
நண்பர்களின் கவிதைகளை பகிரும்போதும்,
"ஒரு கவிதை எழுதி குடேன்" என்பவர்கள் முன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கும்போதும்
கேட்கிறார்கள்
"நீ நிஜமாகவே எழுதுவியா?" 
என்று
________
பேனா தொட்டு 
பலநாள் ஒன்றும் ஆகவில்லை.
எழுதுகிறேன்.
கஷ்டத்தையும் இஷ்டத்தையும்,
புலம்பலையும் பூரித்தலையும்,
தேநீரையும் தேர்வுகளையும்,
நித்தமும் எழுதுகிறேன்.
அல்லது எழுதத் துவங்குகிறேன். 
முடிக்கத்தான் முடியவில்லை.
பாதி பக்கத்திற்கு மேல்,
பேனாவை நகர்த்த முடிவதில்லை
என்னையே நகர்த்த வேண்டி உள்ளது.
வாழ்க்கையை போல்
இப்போது
வார்த்தைகளும் வேடிக்கை காட்டுகின்றன.
_____________
என்னை கேட்டதுபோல் 
ஒரு தோழியையும் கேட்டிருந்தார்கள்.
" யாழினி ஏன் இப்போதெல்லாம்  கவிதை எழுதுவதில்லை?"
"யாழினி காதலிக்கிறாள்" என்றாள்.
நானும் சொல்கிறேன், காதலிக்கிறேன்,
வாழ்க்கையை வார்த்தையாக்க முயலாமல்
வெறும் வாழ்க்கையாகவே காதலிக்கிறேன் !

                                     -இருதயா

Wednesday, 15 January 2020

பக்கத்து வீட்டு தேவதை

காலை 8.00 மணி இருக்கும். ஊரே உற்சாகமாக இருக்கும் போது இவன் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான்.

"கிர்ர்ர்ர்ர்ர்ர்......" என்ற காலிங் பெல் சத்தம் அவன் தூக்கத்திற்கு குட் பை சொல்லி எழுப்பிவிட்டது.

கதவை திறந்தால் வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

ஒரு நிமிட மௌனம். உண்மையில், இதற்கு முன் இருவரும் பேசிக்கொண்டதில்லை.   பார்க்கும்போது புன்னகை மட்டும் பரிமாறிக்கொள்வார்கள். அவ்வளவு தான் இவர்களுக்குள் இருக்கும் உறவு.

மௌனத்தை நீக்கி இவன் முதலில் பேச ஆரம்பித்தான். "சொல்லுங்க சார்" என்றான்.

"சாரி தம்பி உங்க தூக்கத்த கெடுத்துடன்."

"அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. நைட் ரொம்ப நேரம் வேலை செஞ்சேன் அதான் தூங்கிட்டேன். வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்."

"பரவாயில்லப்பா. இன்னைக்கு தை 1 ல அதான் பொங்கல் கொடுத்துட்டு வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்" என்று கையில் இருந்த பாத்திரத்தை நீட்டினார்.

"ஹேப்பி பொங்கல் அண்ணா, வீட்டுல எல்லாருக்கும் சொன்னதா சொல்லீருங்க" என்று சொல்லி விட்டு அதை வாங்கிக் கொண்டான். 

"சரி பா. நான் போய்டு வர்ரேன்" என்று அவர் சென்றார்.

வீட்டுக்குள் வந்து ஃபோனை எடுத்து பார்த்தான். அம்மாவிடமிருந்து இரண்டு மிஸ்டுகால். அதை ஸ்வைப் பண்ணிவிட்டு வாட்ஸ் அபில் மூழ்கினான்.

"ஹேப்பி பொங்கல்" என்ற மெஸேஜ் நிரம்பி வழிந்தது. யார் யாரோ மெஸேஜ் அனுப்பினர். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து எல்லாருக்கும் வேண்டா வெறுப்பாக அனுப்பி விட்டு அம்மாவிற்கு கால் செய்தான்.
கொஞ்ச நேரம் அம்மாவின் பொலம்பலை கேட்டு விட்டு அப்புறம் கால் பன்றன் என்று கட் செய்தான்.

அவனுக்கும் ஊருக்கு போக வேண்டும் என்று ஆசைதான். ஆனால் ஒரு நாள் தான் லீவ் இருந்தது. சிறப்பு பஸ்களும் ரயில்களும் பல இருந்தும் அதில் செல்ல முடியாத அளவுக்கு கட்டணத்தை வைத்த மத்திய மாநில அரசுகளுக்கு அவன் சலாம் வைத்தான். தன்னைப் போல எத்தனை பேர் இப்படி சொந்த ஊருக்கு போக முடியாமல் இருப்பார்கள் என்று நினைத்து மூச்சு விட பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரம் கண்ணில் பட்டது.

அதை திறந்து பார்த்தான். பொங்கல், கரும்பு, பழம் என நிறைய இருந்தது. அந்ந பாத்திரத்தில் தேவதையின் கைரேகை படர்ந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அவனுக்கு கடவுளின் தேவதையாக தோன்றினார். பெண்கள் மட்டும் தான் தேவதையா என்ன? ஆண்களும் தேவதை தான்.
 உண்மையில், இப்படிப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இருப்பதால் தான் பேச்சுலர் பசங்களும் இப்படி சில பண்டிகைகளை கொண்டாட முடிகிறது!

"நல்ல வேலை காலை சாப்பாடு செய்ய வேணாம்" என்ற நிம்மதியோடு மீண்டும் தூக்கத்திற்கு டிக்கெட் வாங்கினான்.

(இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!)

                                            -மகி

Friday, 10 January 2020

காலப்பயணி

தொடர்வண்டிப் பயணம்.
கவிஞனின் வரம்.
கவிதைகள் பல உண்டு.
இருந்தும் கைகள் பரபரக்கும்...

தாயை தேடும் பிள்ளையென
மழலையைத் தேடும் மனம்,
ஜன்னலோர இருக்கையை கண்டவுடன்...

காதலியின் கூந்தல் காற்றில் சுகிக்கும்
ஒருதலை காதலனென
லயிக்கும் மனம்
கம்பிகளினூடே தலை சாய்க்கும் போது... 

விடலை முடிந்தும் மழலையாக்கும்.
நரை துளிர்த்தும் முதற்காதலை எண்ணி ஏங்கும்..
அறிவியல் இல்லா காலப்பயணி..
                                                  -எழில்

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...